அமிழ்து



பதிலில்லா கேள்விகள்!

Monday, January 25, 2010




வாழ்க்கையின் சில நொடி தருணஙள் பல வித விடைக் கிடைக்காத கேள்விகளை எழுப்பிவிட்டு சென்று விடுகின்றன. கேள்விகள் யாவும் விடைப் பெறப்படாத கேள்விகளாகவே சுற்றிக் கொண்டிருகின்றன.

சுற்றுலா சென்ற போது என்னை விட சற்றே வயது முதிர்ந்த மனிதன் அதே டிசைனில் மட்டும்மல்லாது அதே நிறத்திலும் சட்டை அணிந்திருந்தான். சில நொடிகளே அச்சட்டையும் அம்மனிதனும் கண்ணில் பட்டாலும், விட்டுச் சென்ற கேள்விகள் ஏராளம்.

அந்தச் சட்டை எப்போது எடுத்திருப்பான், சட்டையின் அளவும் என்னளவை ஒத்ததா? எங்கு வாங்கியிருப்பான்? நான் வாங்கிய கடையிலேயேவா? விலையும் ஒன்றாக இருந்திருக்குமா? விற்கும் போது கடைப் பையன் என்ன சொல்லி விற்றிருப்பான்? தானே வாங்கியதா? வேறு யாவரும் இந்தச் சட்டையை கொடுத்தார்களா? தானே வங்கியது என்றால் நண்பர்களுடன் சென்றா இல்லை குடும்பதினருடனா? குழந்தைகள் சொல்லியா? மனைவி சொன்னதாலா?

வேறு யாரும் கொடுத்தது என்றால் சுப நிகழ்வுக்கா அல்லது ஏதாவது ஒரு துக்க நிகழ்வில் முறை செய்வதற்கா? துக்க நிகழ்வின் நீட்சியாக இருக்கும் இந்த சட்டையை அம்மனிதனால் மகிழ்சியாக அணிந்திருக்க முடிகிறதா?

முதிர்ந்த அந்த மனிதனுக்கும் எனக்கும் ஒரே ரசனையா, அம்மனிதன் இன்னும் மனதளவில் இள வயதுக்காரனா? இல்லை நான் முதிர்ந்து விட்டேனா? என் ரசனையா? சட்டையைப் பார்த்து தான் வாங்கினானா? முழுக்கை சட்டையின், முழுக்கை நடுவிலே இருந்த பொத்தானைப் பார்த்து நானே யோசித்து தானே வாங்கினேன், இவனுக்கு அது தெரியவில்லையா?

நீலத்தில் மஞ்சள் கோடுப் போட்ட அந்தச் சட்டைக்கு பொருத்தமான காற்ச்சட்டை எடுக்க இந்த மனிதனும் அலைந்திருப்பானா? எவ்வளவு நேரம் செலவிட்டிருப்பான் காற்ச்சட்டை எடுக்க? பொருத்தம் பார்த்து எடுத்த அந்த காற்ச்சட்டை தான் இன்று அணிந்திருக்கிறானா?

எப்படி இருவருக்கும் இந்த சட்டையை இன்று போட வேண்டும் என்று தோன்றியது. ஒத்த சட்டையைக் கூட வைத்திருப்பது பெரிய விஷயம் இல்லை என்றாலும், இன்று காலை இந்த சுற்றுலா தளத்துக்கு இதை அணிய வேண்டும் எப்படி தோணிற்று? சட்டைகள் பல இருந்தாலும் இன்று நான் இந்த சட்டையை எப்படி அணிய நினைத்தேன்?

ஒரே சாயலில் ஏழு மனிதர்கள் இருக்கிறார்கள் என்கிறார்களே அதே போல், இதே மாதிரி சட்டை வைத்திருக்கும் மனிதர்கள் எவ்வள்வு பேர் இருப்பார்கள்? அவர்கள் எல்லோரையும் ஓரிடத்தில் சேர்க்க முடியுமா?

அந்த மனிதனை திரும்பவும் காண முடியுமா? அவன் எழுப்பி விட்டக் கேள்விகளை திரும்பவும் பார்த்து அவனிடம் கேட்க முடியுமா? திரும்பவும் இதே சட்டையில் தான் வருவானா? நானும் இதே சட்டையில் மறுபடியும் வரும் போது இவனைக் காண முடியுமா?

சில தருணங்கள் எழுப்பும் விடையளிக்க முடியாத கேள்விகளாலேயே வாழ்க்கையே சுவாரசியாமாகிறாதோ?!

Labels: ,

பா. ம. க. எங்கே?

Saturday, May 16, 2009

பா. ம. க. எங்கே?

கடந்த சில ஆண்டுகளாக துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு தேர்தல் காலங்களில் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் தாவிக் கொண்டிருந்த ஒன்று, இன்று எங்கிருக்கிறதென்றே தெரியவில்லை.

( இந்த படங்களுக்கும் செய்திக்கும் துளியும் சம்பந்தமில்லீங்கோ! குரங்கார் இந்தப் படங்களை இத்தகவலுக்கு இடையில் இணைத்திருப்பதற்காக் வருத்தப்பட்டால் நானும் அவருடன் சேர்ந்து வருந்துகிறேன். )

தமிழக மக்கள் லேட்டாக கொடுத்திருந்தாலும் லேட்டஸ்ட்டாகக் கொடுத்திருக்கிறார்கள்!



தமிழக காங்கிரசாரே இப்பாவது புரியுதா

சிதம்பரம், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எனப் பெரும் தலைகள் தோற்க, வைகோவை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கூட வெற்றி எனும் போது வாயால் கெட்ட நீங்கள் இனிமேலாவது மக்கள் மனதறிந்து நடந்து கொள்ளுங்கள்!

பாமரனே இங்கு நடப்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கும் போது,இதெல்லாம் தெரியாத நீங்கள் பாராளுமன்றத்தில் போய் என்ன செய்யப் போகிறீர்கள், அதனால் தான் இந்த முறை உங்களுக்கு நகி! :)

இருந்தாலும் நீங்களெல்லாம் பின் வாசல் வழியாக நுழைந்து மந்திரி பதவிக் கூட வாங்கி விடுவீர்கள், ஆனால் அதெல்லாம் மக்கள் ஆதரவில் அல்ல என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். அதுவும் ரொம்ப நாட்களுக்கு இல்லை என்பதனையும்!

புது தகவல்: சிதம்பரம் 3354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருகிறார். அதனால் அடிக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும் இந்தியாவிலேயே புகழ்பெற்றவர் எந்த அலையும் இல்லாத போதே இழுத்துக்கோ, பறித்துக்கோ என்று வென்றதே அவருக்கு ஒரு பாடம் தான்!

Labels: , , , , , ,

ஈழம் - கண்ணீர் அஞ்சலி!

Saturday, May 09, 2009


கொத்து கொத்தாய் மனித இனம் செத்துக் கிடக்குது அங்கே
ஓட்டுக்காய் ஆளாய் பறக்குது அரசியல் கூட்டம் இங்கே

அரிய வகை மிருகம் பார்க்க துறை இருக்காம் எங்கும்
ஆதி குடி தமிழனைக் கேட்கக் கூட நாதியில்லையே இங்கும்

என்னினத்தை அழிக்க என் வரியா உனக்கு - அதை
எதிர்த்து நின்றால் தேசியப் பாதுகாப்புச் சட்டமே எனக்கு

இசுலாமியராய் இருந்திருந்தால் - பத்தாண்டுகளிலாவது
ஈழம் வாங்கியிருப்போம்

யூதனாய் பிறந்திருந்தால் - என்றாவது ஒரு நாள்
நாடு கண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்திருப்போம்

தமிழனாய் பிறந்ததினால் - கவிதை மட்டுமே எழுதி
நமது உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறோம்!

Labels: , ,

சாரதி உரிமமும் ஆறு மாதமும்! - பாகம் 1

இரண்டு சக்கர வாகனத்திற்கான உரிமம் என்னுடைய 18ஆவது வயது எப்ப வரும் எனக் காத்திருந்து எடுத்து விட்டேன். ஆனால் நான்கு சக்கர வாகனத்திற்கான் சாரதி உரிமத்துக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் போல!

ஒரு ஆறு வருடத்திற்கு முன்பு, திடீரென்று ஒரு நாள் எனது அலுவலக நண்பர்கள் நாளை மறுநாளே மகிழுந்து வாங்குவதுப் போன்று ரகீம் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து விட்டார்கள். நமக்கு இது பொருக்குமா, நானும் ஜோதியில் ஐக்கியமாகி அடுத்த நாள் காலை ஆறறை மணிக்கு மன்னார்புரம் நால் ரோடில் உள்ள ரகீம் டிரைவிங் ஸ்கூல் வாசல் முன்பு ஆஜரானேன். ஆனால் ஒரு ஈ, காக்கா கூட கண்ணுக்கு எட்டின தூரம் வரைக் காணவில்லை. இப்போது போல் அப்போது ஈ, காக்காகளிடம் செல் போன்கள் கூட இல்லை. எனது அலுவலக மற்றும் டிரைவிங் ஸ்கூல் நண்பர்களிடம் கூட கேட்க முடியாமல் தேமே என்று நின்று கொண்டிருந்தேன். நமது முதல் மகிழுந்து கற்கும் முயற்சியே ஊசாலடிக் கொண்டிருந்த வேளையில் தான் எங்கிருந்தோ வந்தான் என்பது போல் அலுவலக நணபர் ஒருவர் தனது ஆதிகால டிவிஎஸ் 50-இல் மெல்ல மெல்ல வந்துகொண்டிருந்ததை நோக்கிய போது மனதில் சற்றே தைரியம் வந்தது. கொஞ்ச நேரத்தில் ஒரு வழியாக ஆடியாடி ஒரு வெள்ளை அம்பாசிடரும் வந்தது. அதற்குள் இன்னொருவரும் வந்து சேர்ந்தார். ஒருவாறாக மூவரையும் அம்பாசிடரில் அள்ளிப்போட்டுக் கொண்டார் எங்களது பயிற்சியாளர். முதலில் இன்னொரு நண்பருக்குப் பயிற்சி தொடங்கியது.

ஆக்ஸிலேட்டர், ப்ரேக், க்ளட்ச் போன்றவற்றை பொதுவாக எல்லோருக்கும் சொல்லி வைத்தார். சீட்டின் நுனியில் உட்கார்ந்துக் கொண்டு தான் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தோம். இதற்கு ஒரு காரணம் பயம் என்றாலும் இன்னொரு காரணம் போகிற வழியில் ஏற்றிக்கொள்ளப்பட்ட இன்னும் இருவர். ஒரு வழியாக நமது நண்பரின் 15 நிமிட நேரம் முடிய அடுத்ததாக நமது முறை. முதலில் க்ளட்ச் என்று சொல்லப்படுகிற ஒரு பொருளையே கண்டுக் கொள்ளாமல் இருந்ததால் பயிற்சியாளரின் சீற்றத்துக்கு ஆளானேன். இந்த இத்யாதிகள் எல்லாம் எப்படி நினைவில் வைத்துக் கொள்ளவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் யாரோ ஒருவர் வலமிருந்து இடமாக ABC என்றது ரொம்ப எளிதாக தோன்றியது. இப்படியாக முதல் நாள் பயிற்சி முடிந்து அலுவலகத்துக்குச் சென்றால் அங்கேயும் இதைப் பற்றித் தான் பேச்சு. எப்படி வளைப்பது, கியர் மாற்றும் போது என்ன செய்ய வேண்டும் என்று ஏகப்பட்ட குழப்பங்களுக்கு விடைத் தேடிக் கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் பயிற்சியின் போது, முதலில் ஓட்ட நான் அழைக்கப்பட்டேன். சாவியைப் போட்டு நாசூக்காகத் திருவிவிட்டு வண்டிக் கிளம்பாததால் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பயிற்சியாளரைப் பார்க்க, அவரோ, "என்னங்க தொட்டுக் குடுக்குறீங்க சும்மா நல்லா திருவுங்க" என்றார். அந்த வண்டியை ஸ்டார்ட் செய்ய ஒவ்வொரு முறையும் நமது புஜ பல பராக்கிராமத்தைக் காண்பிக்க வேண்டும் என்பது பின்னர் தான் புரிந்தது.

ஒரு மாதமான அந்தப் பயிற்சிக் காலத்தைக் கூட முடிக்க முடியாமல் இயற்கையோ அல்லது திருச்சி மாநகராட்சிக் குடிநீர் வாரியம் செய்த சதியோ தெரியவில்லை, மஞ்சட் காமாலையில் ஒரு மாதம் படுத்து விட்டேன். இதற்கிடையில் நமது நணபர்களனைவரும் உரிமம் வாங்கி விட்டார்கள்.

எனது மஞ்சட் காமாலையின் மகிமையால் நான் ஒரு மாதம் அலுவலகம் பக்கமும் தலை வைக்கவில்லை.



பொன்மலைப்பட்டி நாட்டு வைத்தியர், ஆங்கில மருத்துவம், பத்திய சாப்பாடு என்று இருந்து நமது உடலின் எடையும் கிறு கிறுவென குறைந்துவிட நமக்கு சாரதி உரிமம் எல்லாம் நினைவிலேயே இல்லை. இருந்திருந்தாலும் அந்த ஐம்பதாண்டு கால அம்பாசிடர் காரை நினைத்திருந்தாலே நான் போயிருந்திருக்கமாட்டேன்.

இவ்வாறாக ஆறு மாத காலம் போய்விட்டபடியால், இன்னுமொரு முறை LLR அதற்குப் பின் உரிமம் என்பது எல்லாம் மலையைப் பிறட்டும் வித்தையை விட பெரியதாகத் தெரிந்தபடியால் அந்த பக்கமே தலை வைக்கவில்லை.

மெக்சிகோவிலிருந்து... - மெக்சிகன் விசா

Tuesday, September 23, 2008



இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவிற்கு போக வேண்டிய வாய்ப்பு வாராது வந்த மாமணியாய் கிடைத்த போது, முதலில் நினைவுக்கு வந்தது ஆங்கில படங்களில் வரும் கெள பாய் தொப்பி தான்.

பெரிய தொப்பியும், ஷுவும், அதை விட பெரிய மீசையும் வைத்துக் கொண்டு, சற்றே மாநிறமாயும் குதிரை மீதேறி வரும் இவர்களின் ஆடையைக் கழற்றி, வேட்டி, சட்டையை அணிய வைத்தால் இந்தியர் என்றும் சொல்லக்கூடிய அளவில் தான் இருப்பார்கள்.

முதற்படியாக, தில்லி சென்று மெக்சிகன் விசா எடுத்து வர முடிவு செய்தாகிவிட்டது. இதன் மூலம் வட இந்தியாவிற்கு எனது பாதம் பதியும் வாய்ப்பும் கிட்டியது. இந்தி கற்றுக்கொள்ள இதுவரை தேவையில்லாததால், நமது செந்தமிழுடனும், ஆங்கிலத்துடனும் தில்லி சென்றேன். கூட வந்த ஆந்திர நண்பனுக்கும் இந்தி என்பது ஏட்டளவிலே! பையனுக்கு படிக்க வருகிறது, பாவம் இந்தியில் பேச வேண்டுமென்றால் "mute" தான்... இத்தனைக்கும் அவன் பள்ளிப் பருவத்திலிருந்தே இந்தி படித்திருக்கிறான். தில்லியில் கூட படித்தும் இருக்கிறான். நமது அரசியல்வாதிகளைத் திட்டுபவர்களே, எல்லாமே தனி மனித விருப்பம் இருந்தால் தான் கற்றுக் கொள்ளமுடியுமே தவிர யாரும் திணிக்க முடியாது எனபதற்கு இவன் ஒரு சான்று. சரி இதைப் பிறகு வைத்துக் கொள்ளலாம்.

ஒரு வழியாக மெக்சிகன் தூதரகத்தை அடைந்த போது, அந்த வாட்ச்மேன் மிகவும் அன்புடன் வரவேற்றார். இவரைக் கூட மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்திருப்பார்களோ என்றே தோன்றிற்று. நமது ஆந்திர நண்பனே முதலில் இண்டரிவியூக்குச் சென்றான். கேள்விக் கேட்பவர் இந்தியர் தான். என்ன நினைத்தாரோ தெரியவில்லை சரமாரியாக கேள்விகளைத் தொடுத்து ஆந்திர மிளகாயைக் கடித்ததுப் போல் அவனது ஆதி முதல் அந்தம் வரை வியர்க்க வைத்து வேடிக்கைப் பார்த்தார். இருந்தாலும், நமது ஆந்திர நண்பனின் பதில்களால் டர்ஜாகிப் போயிருப்பார் போல, அடுத்து சென்ற நம்மிடம் "மூச்", ஒரு கேள்வியும் இல்லை. நம்மிடமும் கேள்விகள் தொடர்ந்திருந்தால், அவரின் காது மடல்களிலிருந்து குருதி ஒழுகியிருக்கும்! தப்பித்தார்!

ஒரு நாள் கழித்து பாஸ்போர்ட்டைத் திரும்பி வாங்கிக் கொள்ளலாம் என்றதால் சந்தோசமுடன் தில்லி செங்கோட்டை, ஆந்திர பவன், கர்நாடக பவன் (இது எல்லாம் ஆந்திர நண்பனின் ஏற்பாடு தான் சாப்பாட்டிற்காக... ) மற்றும் இந்தியா கேட் என்று சுற்றிப் பார்த்தோம். தில்லி வெயில் சென்னை வெயிலுடன் மல்லுக் கட்டுகிறது.

ஒரு நாள் விட்டு பாஸ்போர்ட்டை வாங்கச் சென்ற போது வாட்ச்மேனுக்கு சரியாக அடையாளம் தெரிந்தது. கலெக்சன் தானே ச்சாலோ என்றார். பாஸ்போர்ட்டை வாங்கி அதில் விசாவைப் பார்த்த போது ஏதோ மெக்சிகோவையே ஸ்பானியர்களிடம் போரிட்டு கைப்பற்றியது போல் உவகையடைந்தேன்.

வாங்கி விட்டு வெளியே வந்த போது, நமது வாட்ச்மேனிடம் ஒரு பையனும் அப்பாவும் நின்று கொண்டிருந்தார்கள். ஜாடையைப் பார்த்தால் தமிழாக தெரிந்ததால் அங்கும் இங்கும் நோட்டமிட்ட போது மாட்டியது அவரது கக்கத்தில் இருந்த பை! "செந்தமிழி"ல் ஏதொ ஒரு "டெக்ஸ்டைல்ஸ்" திருக்கோவிலூர் என்று எழுதியிருந்தது. அவர்கள் வாட்ச்மேனிடம் விசாவைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்த வேளையில், அதை வாங்கியதில் ஒரு நாள் அனுபவம் இருந்ததால், டகால் என்று அவர்கள் சம்பாஷனையில் இடையில் புகுந்து எனது கருத்தைப் பதிந்தேன். எங்கோ வடகோடியில் அதுவும் மெக்சிகன் தூதரக வாயிலில் தமிழ் குரல் கேட்க நேர்ந்ததில் ஒரு நிமிடம் கே.பி. சுந்தராம்பாள் குரலைக் கேட்டதற்கிணையாகப் புல்லரித்துப் போனார் அவர். எப்படி நாங்க தமிழுனு தெரியுமுனு வெள்ளந்தியான அவரது கேள்விக்கு அறிவு ஜீவித்தனமான நமது பதிலைப் பார்த்து அவர் ஆடிப்போனாலும், பையன் ஏற இறங்க எங்களிருவரையும் பார்த்து விட்டு உள்ளே அப்பாவை இழுத்துக் கொண்டு போனான்!

Labels: ,

கொர்... கொர்...!

Sunday, February 10, 2008


பயணமே வாழ்வின் பாதியாகி விட்ட எனது இன்றைய நிலைமையில் அடுத்தவர் விடும் குறட்டைக்கெல்லாம் கவனம் செலுத்தவதென்பது கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும் கடந்த வாரம் பேருந்துப் பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவம் குறட்டையின் இன்னொரு முகத்தை எனக்குப் பரீட்சயப்படுத்தியது.

வழக்கமாக பயணச்சீட்டு முன்கூட்டியே ரிஸர்வ் செய்யாத நேரங்களில் 3+2 சீட்டுக்களைக் கொண்ட சேலம் கோட்டப் பேருந்துகளே திருச்சியிலிருந்து பெங்களூர் செல்லும் எனது பயணத்திற்கு ஆபத்பாந்தவன்கள்!

ஆனால் இந்த முறை வரும் போது தேர்தல் நேரத்து பிரச்சாரத் தலைவன் போல நடுவில் சில ஊர்களுக்கும் சென்று வந்ததால், திரும்பிப் போகும் போது பேருந்தில் முன்கூட்டியே டிக்கெட் கிடைத்தால் தேவலாமென்று தோன்றிற்று. ஆனால் ஞாயிறு இரவு ஏழு மணிக்கு மேல் தோன்றிய இந்த யோசனை "அபத்தம்" என்பதை விட மேலானது என்பது, இது போன்ற காலத்தில் தமிழகத்தின் மூலை முடுக்ககளிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு அடிக்கடி பயணம் செய்யும் மக்கள் உணருவார்கள்!

ஆனால், அண்டை அயலாரின் அன்பை எங்களது குடும்பம் பேணி வந்ததன் பலனாக, கடைசி நேரத்தில், KPN-ன் வோல்வொ பேருந்தில் எனக்காக ஒரு இருக்கை தயாரானது.

IIM-மில் சீட் கிடைத்ததைப் போல் துள்ளிக் குதித்த நான், பேருந்தின் பயண நேரம் 11 மணி தான் என்பதால், எனது மகிழ்ச்சித் தியாலங்களை சில மணி நேரம் வீட்டிலேயேயிருந்து extend செய்து கொண்டேன்!

சரியான நேரத்துக்கு நான் சென்று விட்டாலும் எனது இருக்கையை முந்தைய பயணத்தின் பயணி ஆக்கிரமத்துக் கொள்ள நேர்ந்ததால், 11.15க்கே அந்த இருக்கையில் பட்டாபிஷேக விழா எதுவும் இல்லாமல் எளிமையாக முடிசூட்டிக் கொண்டேன்! சுற்றும் முற்றும் பார்த்த போது என்னைப் போலவே மற்ற தேசத்து ராஜாக்களும், ராணிகளும் தங்களுக்கு தாங்களே முடி சூட்டிக் கொண்டிருந்தார்கள்.

என்னருகிலிருந்த அண்டை நாட்டு ராஜா மிகவும் நாசூக்கானவர் போல் தெரிந்தார். இருந்தாலும் அவரைத் தொல்லைத் தரும் சில செயல்களில் நான் ஈடுபட நேர்ந்தது. எனது சிம்மாசனம் சாளரத்திற்கருகில் நிலவொளியைப் பார்க்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்ததால், எனது உடுப்புகளை வைக்க எடுக்கவென சில தடவைகள் அவரைத் தாண்டிச் சென்று அவருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் துர்பாக்கிய நிலைக்கு ஆட்பட்டேன். சினமேதும் கொள்ளாத அவர் தனது வஞ்சத்தைப் பயணத்தில் தீர்க்கப்போகிறார் என்ற தகவலேதும் அந்த நேரத்தில் தெரியாத நான், அவரின் பெருந்தன்மையை எண்ணியபடியே எனதிருக்கையில் அமர்ந்திருந்தேன்.

வோல்வோ பேருந்து அலுங்கி குலுங்கி திருச்சி நகரத்து சாலைகளின் அழகைப் பறைசாற்றிய வண்ணம் ஊர்ந்து கொண்டிருந்தது. இதனிடையே, நம்மருமை நண்பர், 90 டிகிரியில் இருந்த தமது இருக்கையை, மழலைக் கிறுக்கிய "சாய்ந்த L" வடிவத்துக்குக் கொண்டு வந்திருந்தார். பாதம் வைப்பதையும் நீட்டி விட்டு கால்களிரண்டையும் பரப்பி கைகளைக் குறுக்காகக் கட்டிக் கொண்டும் தனது வசதி குறைந்த கட்டிலில் இன்றிரவு சயனத்திற்குத் தயாரானார்.

பேருந்து மெதுவாக நகரத்தை விட்டு தாண்டி கரூர் சாலையில் காவிரியாற்றின் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தது! பொதுவாகவே பயணத்தில் தூக்கமென்பது சற்று
மெனக்கெட்டவுடனேயே எனக்கு வரும். பல சமயங்களில் கொட்டக் கொட்ட முழித்திருந்து நான் ஓட்டுநருக்குத் தெரியாமலேயே வெளியிலிருந்தே ஆதரவு கொடுத்திருக்கிறேன். இன்றும் அப்படியே கண்ணை இறுக மூடிக்கொண்டு எனது திறமையெல்லாம் பயன்படுத்தி உறங்க முனைந்து கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் தான், மிகவும் மெதுவாக ஒரு சப்தம் தொடங்க ஆரம்பித்தது. மெல்ல மெல்ல அது உச்சஸ்தாயியை அடைந்த போது, முன்னும் பின்னும் சிலர் முணு முணுப்பதும் கேட்டது.



சும்மாவே தூக்கம் வராத எனக்கு, நமது அருமை நண்பரின் குறட்டைச் சத்தம், இன்றிரவு பெருத்த சவாலாகவே விளங்கும் என்பது குறட்டையின் வீச்சையும் தடவைக்கு தடவை அதிகமாகும் அதன் வீரியத்திலும் உணர முடிந்தது.

அண்டை மன்னன் தொடுத்த குறட்டைப் போரில் புறமுதுகிட்டு ஓடிய எனது தூக்கம், திரும்பி வருவதற்கான சாத்தியமே இல்லாத நிலையில், அவர் விடும் குறட்டையின் இசை
நயத்தில் சிறிது நணைய ஆரம்பித்தேன்.

சுருதி தப்பாமல் அவர் எழுப்பும் ஓ(இ)சையில் சங்கீத இலக்கணங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தன. நான் பெரிய சங்கீத விற்பனன் இல்லையெனினும், தலையாட்ட வைக்கும் எதுவுமே இசை என்பதாக எடுத்துக் கொண்டால், இதையும் அந்த வகையில் சேர்க்கலாம்.

பாகவதர் பாடுவதைப் போன்று ஒரே வகையான ஓசை பல முறை எழுப்பினாலும், தூக்கத்திலேயே மாடுலேஷனை அப்போதைக்கு அப்போது மாற்றி கேட்பவருக்கும் தொய்வில்லாமல், நிலையறிந்து அவர் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. இத்துனூன்டு வாய்லேர்ந்து இவ்வளவு பெரிய இசையா என்று விவேக் ஒரு படத்தில் சொல்லுவது போன்று பல தரப்பட்ட ஓசை தாளம் தப்பாமல் மாற்றி மாற்றி ஒலிக்க ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் மாயக் கண்ணனின் புல்லாங்குழலிசைக்கு மயங்கிய பசுக்கள் போல, சுற்று வட்டாரத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவரது ஓசையைக் கேட்டு கண்ணயர்ந்தனர்.

இன்னும் தூக்கம் வராததால் என்னைப் போன்ற முழித்திருக்கும் அந்த குறட்டைச் சத்தத்தை எண்ண ஆரம்பித்தேன். ஒன்று, இரண்டு... ஆயிரம் என அந்த இரவைப் போல் எண்ணிக்கை நீண்டதே ஒழிய, தூக்கம் மட்டும் தூரத்திலேயே இருந்தது.



கணவனின் குறட்டைக்கே கோர்ட் படியேறி அவனது தூக்கத்தைக் கலைக்கும் மேற்கத்திய மனைவி போலல்லாமல், பெயர் தெரியாத ஒரு மனிதனின் குறட்டையுடனும் ம்காத்மா காந்தி படிப்பித்த சகிப்புத்தன்மையுடனும் பயணம் செய்து கொண்டிருந்த நானும் சில மணி நேரம் கண்ணயர்ந்திருக்கிறேன்.

"மடிவாளா!" என்றக் குரல் கேட்டவுடன் அவருக்கு தொந்தரவு செய்ய நேர்ந்தாலும், இப்போது ஏனோ ஒரு குற்றவுணர்வும் இல்லாமல் இறங்கிக் கொண்டிருந்தேன். குறட்டைச் சத்தம் மட்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது..!

Labels: , , ,

வாரயிறுதி கவிதைகள்!

Sunday, January 27, 2008



வாரம் தவறாமல்
வரும் சனி ஞாயிறுகளுக்கு
இல்லையா?! - விடுமுறை!

வாரயிறுதி நாட்களில்
பூட்டிடப்படும் எனது வாய்
வணிகத்திற்காக மட்டும் திறந்து கொள்கிறது!

டோக்கனை வாங்கிய சப்பளையரை சுற்றி
எட்டு ஜோடிக் கண்கள் சுழல்கிறது -
என்னுடைய ஒன்றையும் சேர்த்து!

டோக்கனைக் கொடுத்து உணவு பெருவதற்குள்,
ஒவ்வொரு முறையும்
பயம் தொற்றுகிறது-
கொடுக்காமலிருந்து விடுவாரென!

உட்கார்ந்தாலும் நின்றாலும் சாப்பிடுவது
தனியே தானென்பதால்
நின்றபடியே சாப்பிடும் உணவகத்துக்கே
செல்லுகிறேன் காதுகளை மட்டும் கூர்மையாக்கி!

இந்தியாவிலே ஜனத்தொகை
100 கோடிக்கும் மேலாம் - பரவாயில்லை
எனக்கு மட்டும் தொல்லையில்லை!

Labels:

பட்டது போதும்!

Saturday, January 26, 2008
குறைவாயிருக்கும் மின்னொளி,
குளிரூட்டியபடியே யிருக்கும் அறை,
பலவாறாக வந்திருப்பவர்களின் அசாத்திய மெளனம்!
திடீரென கேட்கும் இரைச்சல்,
கூடவே வரும் காலடித் தடம்,
நாசியைத் துளைக்கும் துர் வாசனை,
மூன்று நாளானது விடுங்கள் - நான்
புறப்பட்ட இடத்துக்கே போய்விடுகிறேன்!

Labels: