அமிழ்து: புத்தக மதிப்புரை: கிராமத்து தெருக்களின் வழியே - ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!புத்தக மதிப்புரை: கிராமத்து தெருக்களின் வழியே - ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!பத்து நாட்களுக்கு முன்பு இணையம் வழியாக சில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்று ந.முருகேசபாண்டியன் எழுதிய கிராமத்து தெருக்களின் வழியே. புத்தகத்தின் பெயருக்கு ஏற்றார் போல மனிதர், நம்மைக் கிராமத்து தெருக்களுக்கு கைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். கிராமம் என்றாலே வயல்வெளி, சூது வாது தெரியாத வெள்ளந்தி மனிதர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ள தமிழ் சினிமாவின் (சிற்சில படங்களைத் தவிர) இலக்கணத்திலே இவரது நூல் பயணிக்கவில்லை.இவர் தனது கிராமமான மதுரைக்கு அருகிலுள்ள சமயநல்லூரில் (50 வருடங்களுக்கு முன்பு கிராமமாக இருந்த) தான் வாழ்ந்த வாழ்க்கையின் பல்வேறு ஞாபங்களை இந்நூலின் மூலம் பதிவு செய்திருக்கிறார். இதில் நூலாசிரியர், கிராமத்தைப் பற்றி எந்த ஒரு மிகைப் படுத்தலும் இன்றி உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருக்கிறார்.

பதினெட்டு அத்தியாயங்களாய் பிரிக்கப்பட்டுள்ள அனுபவங்கள் ஒவ்வொன்றும் இதே போன்று தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் தங்களது ஞாபகப் பெட்டகத்தைத் திறக்க வைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நூலாசிரியர் பதிவு செய்த காலம் அறுபதுகளில் என்றாலும், அந்த அனுபவங்கள், எண்பதுகளின் இறுதியிலும் 90களின் ஆரம்பத்திலும் அவரது அந்த பருவத்திலே இருந்த எனக்கும் பரிச்சயமாகவே உள்ளது.

எனது தந்தையாரின் வேலை நிமித்தமாக எனது பள்ளிப்பருவம் புதுக்கோட்டைக்கும் திருச்சிக்கும் நடுவிலிருந்த கீரனூரில் தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 17 வருடம் அந்த ஊரிலேயே தான் வசித்து வந்தோம். எனது தந்தையாரின் சொந்த ஊர் காவிரி பாசனம் மிகுந்த திருச்சியின் முக்கொம்புவிற்கு அருகிலுள்ள ஒரு வளமையான கிராமம், ஜீயபுரம். ஆனால் நான் வளர்ந்த ஊரோ குடிப்பதற்கே தண்ணீரின்றி பல கிலோ மீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய கட்டாயம்.

கீரனூரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு நகரமாகவும், நகரத்திலிருந்து வருபவர்களுக்கு கிராமமாகவும் தெரியும் ஒரு ஊர்.

நூலாசிரியர் தனது அனுபவத்தை விவரிக்க விவரிக்க எனது கண் முன்னே நான் 15 வருடங்களுக்கு முன் தொலைத்த எனது கீரனூரும் ஜீயபுரமும் வந்து சென்று கொண்டேயிருந்தது என்றால் மிகையல்ல.

பேய்களும் முனிகளும் உறைந்திடும் கிராமத்து வெளிகள் என்பது நம்மை வரவேற்கும் முதல் அத்தியாயமாகும்.இதில் உயிரில்லாத மனிதர்களின் பேய்கள் எவ்வாறு உயிர்ப்புடன் கிராமங்களில் சுற்றி வருகின்றன என்பதை விவரிக்கும் போது, எங்கள் பகுதிகளில் நாங்கள் கேட்ட வெள்ளையம்மா வெள்ளச்சியை ஞாபகப்படுத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

எங்கள் பகுதிகளில் மாலை ஆறு மணிக்கு மேல் நெடுஞ்சாலையில் போகும் வாகனங்களை வழி மறிக்கும் வெள்ளையம்மா, மல்லிகைப்பூ சூடியுள்ள பெண்ணாகப் பார்த்து "பிடித்து" விடும். இந்த கதையைக் கேட்டு ஏதோ ஒரு பயம் அடி வயிற்றில் பரவும். பொதுவாக இதுப் போன்ற கதைகள் பகலெல்லாம் விளையாடி விட்டு மின்சாரம் இல்லாத அந்த இருட்டு நேரத்தில் தான் அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப்படும். இந்த கதைகள் சிறுவர்களைத் தாண்டி பெரியவர்களாலும் நம்பப்பட்டு தான் வந்தது.

முடிவற்ற பயணங்கள்
என்ற இரண்டாம் அத்தியாயம் சொல்வதைப் படித்த போது எனக்கு அருகிலுள்ள நார்த்தமலைக் கோவிலில் கோடை வெயிலில் நடைப்பெறும் பூச்சொரிதல் விழாவையும், பின்பு வரும் தேர்த் திருவிழாவையுமே ஞாபகப்படுத்தியது. பாரப்பட்டியிலிருந்து வண்டி வண்டியாக வில்லு வண்டியில் சென்று திருவிழாக் கொண்டாடிய அந்த கிராமத்து மக்கள் கண்முன் வந்து சென்றார்கள்.

மூன்றாம் அத்தியாயம் தெருக்களில் உயிர்த்திடும் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. கிராமத்து அரசாங்கத்துப் பள்ளிகளில் செருப்பு அணிந்து செல்லும் மாணவனைப் பார்த்து "பந்தா" செய்கிறான் என்று சொல்வதும், செருப்பு, உள்ளாடைகள் ஆகியவை ஆடம்பரப் பொருட்களாகவே பார்க்கப்பட்டு வந்தது என்பது என் அனுபவமும் கூட.

குழந்தைகளின் விளையாட்டு உலகங்களைப் பற்றியான விவரிப்புகள் அனைத்தும் குழந்தைப் பருவத்திற்கு அதுவும் இருபது வருடங்களுக்கு முந்தைய எனது கிராமத்து குழந்தைப் பருவத்திற்கு செல்ல முடியாதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது.

அவையாவும் நாங்கள் விளையாடிய விளையாட்டுகள்! "கொக்கு பற பறவென" கத்திக் கொண்டும், கைகளை வானத்தை நோக்கி தூக்கிக் கொண்டும், நகங்களில் வெள்ளைப் பூ கேட்டு, வானத்திலே பறக்கும் வெள்ளைப் பறவைகளைத் துரத்திக் கொண்டு பூமியிலே நாங்கள் ஓடியது ஞாபகத்திற்கு வருகிறது. இதைத் தவிர பல்லாங்குழி, கல்லாங்காய், தாயம், நாடு பிடித்தல், கல்லா மண்ணா, பே-பே மற்றும் அதனுடன் சேர்ந்து வரும் பாடல், டன் டன் யாரது திருடன், கண்ணாமூச்சி, எப்பொழுதுமே எங்களது விருப்பத்திற்குரிய விளையாட்டாயிருந்த ஐஸ்பால் என்று எல்லாமுமே ஞாபகத்திற்கு வருகிறது. கிரிக்கெட்டும் நாங்கள் விளையாடினோம் என்றாலும், எங்களுக்கு பல விதமான விளையாட்டுகள் இருந்து கொண்டேயிருந்தன. சலிக்காமல் நாங்கள் விளையாடினோம்.

இதே போல நாடகங்கள் பற்றிய் ஆசிரியர் குறிப்பிடும் போதும், எனக்கு எங்கள் ஊர் பகுதிகளில் நடக்கும் "வள்ளித் திருமண நாடகங்களின்" சுவரொட்டிகள் ஞாபகத்திற்கு வருகிறது.

திரைப்படத்தையும், கொட்டகைகளையும் பற்றிக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது. எங்கள் ஊரிலிருந்த ஒரே சினிமா கொட்டகையில், எங்களது வாத்தியாரே பெண்கள் வரிசைக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். எங்கள் வாத்தியாரின் சொந்தக்காரரின் சினிமாக் கொட்டகை என்பதால், பள்ளி முடித்து நேராக கொட்டகைக்கு வந்து மாலை மற்றும் இரவுக் காட்சிக்கும் டிக்கெட் கொடுப்பார்.

நூலாசிரியார் குறிப்பிட்டுள்ளது போல தங்கள் தாயாருடன் படம் பார்க்க வந்த மாணவர்களை அடுத்த நாள் பள்ளியில் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பார். சரியாக பதில் சொல்லவில்லையெனில், பிரம்படியும், வயிற்றில் கிள்ளும் கிடைக்கும்.

கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையில் சுற்றி சுழன்று வரும் ஜாதி மற்றும் குடும்பம் பற்றியான சிந்தனைகள், ஆம்புலன்ஸ் எல்லாம் இல்லாத அந்த காலங்களில் குப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட கொலையுண்ட மற்றும் அனாதைப் பிணங்கள் பற்றிய என பல குறிப்புகள். தமிழ்க் கிராமத்து சமூகம் திட்டுவத்றகு உபயோகப்படுத்திய வார்த்தைகளைக் கூட அப்படியே பதிப்பித்திருக்கிறார் ஆசிரியர்.

கிராமத்தைச் சார்ந்து வாழும் நடோடி மனிதர்களான குடுகுடுப்பைக்காரர், பூம் பூம் மாட்டுக்காரர், மிதிவண்டியை இறங்காமல் ஓட்டும் சாகசக்காரர் என பலரைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

180 பக்கங்களுள்ள இந்த புத்தகம் கிராமத்தில் வாழ்ந்து அனுபவித்தவர்களுக்கு தங்கள் நினைவுகளைக் கிளர்வதாயும், அந்த அனுபவம் இல்லாதவர்களுக்கு புது வித அனுபவத்தை விருந்தாக்குவதாயும் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சிறப்பம்சங்கள்:

1. தேவையில்லாத அலங்கார வார்த்தைகளின்றி மிகவும் சாதாரண நடையில் கொண்டு செல்லப்பட்டிருக்கும் எழுத்து நடை
2. மிகைப்படுத்தலில்லாத, உள்ளது உள்ளப்படியே கிராமத்து வாழ்க்கையை விவரித்திருப்பது


எனது மகனுக்கு கண்டிப்பாக இந்த அனுபவங்கள் கிடைக்காது. அவனுக்கு இணையமும், ப்ளே ஸ்டேஷனும் போதுமாயிருக்கலாம். அவனது அனுபவம் வேறாய் கூட இருக்கலாம். என்னால் எல்லாவற்றையும் சொல்ல இயலாவிட்டாலும் கூட இப்படியும் தமிழ்ச் சமூகம் சில வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்தது என்று சொல்வதற்கும், வாசித்துக் காட்டுவதற்குமான ஒரு பொக்கிஷம் இந்த புத்தகம் என்றால் அது மிகையல்ல.புத்தகத்தின் பெயர்:கிராமத்து தெருக்களின் வழியே
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ.90 /-
இணையத்தில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-031-5.html, http://www.uyirmmai.com/Publications/Default.aspx

Labels: ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

0 Comments:

Post a Comment