அமிழ்து: தமிழக தேர்தல் முடிவுகள் - எனது பார்வை - 2



தமிழக தேர்தல் முடிவுகள் - எனது பார்வை - 2



தேர்தல் நேரத்தில், தேர்தலுக்கு பின்பு தி.மு.க. இருக்காது என அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. இருக்காது தி.மு.க. வும் சொல்லிகொண்டிருந்தார்கள்.

இப்போது பார்த்தால், தி.மு.க-வின் நிலை தான் அப்படி உள்ளது. பதவி சுகம் கண்ட தி.மு.க. அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் அடுத்த தேர்தல் வரை தி.மு.க. தக்க வைத்துக் கொள்ளமுடியுமா என்றே தெரியவில்லை. ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளால், பல அமைச்சர்கள் அணி மாற வாய்ப்புள்ளது. இளவயது, சட்ட மன்ற முன்னால் உறுப்பினர்களும் தங்களது எதிர்காலத்தைக் கணக்கிட்டு தே.மு.தி.க-வில் சங்கமம் ஆகலாம். எந்தவித பதவியும் இல்லாத உடன்பிறப்புகள், தி.மு.க.வின் தலைமையை நம்பி கட்சியை விட்டுச் செல்லாமல் இருக்கலாம்.

கிட்டத்தட்ட 12 வருடம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் இருந்தாலும் மீண்டும் 1989 -ல் ஆட்சி அமைக்க கலைஞர் கருணாநிதியால் முடிந்தது என்ற நிலைமை இப்போது இல்லை. அப்போது அ.தி.மு.க. பிரிந்து இரு அணியாக நின்றது ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் உடன்பிறப்புகளின், தலைமை மீதும், இரண்டாம் கட்ட தலைவர்கள் மேல் கொண்ட தளராத நம்பிக்கையுமே. அந்த காலங்களில் எல்லாம் கட்சியின் தேர்தல் செலவுக்காக கடைசி மட்ட தொண்டனிடம் கூட தலைமையே கையேந்தும் நிலை இருந்தது. இதனாலும் கூட தொண்டனுக்கும், தலைமைக்கும் ஒருவித நெருக்கம் இருக்கவே செய்தது. தொண்டனிடம் காசு எதிர்பார்க்கும் கம்யூனிசம் போன்ற தலைமை இன்று இல்லை. இது பணக்காரத் தலைமை. தொண்டனுக்கும் தலைமைக்கும் வெகு தூரம். தலைமைக்கு இன்று பல தொழில்கள் உள்ளது. அதில் ஒன்று அரசியல் என்றாகிவிட்டது.

தலைமையே இப்படி இருந்தால், இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களது சொந்த ஊரில் தனிக் காட்டு இராஜாக்களாக கொடி கட்டி பறக்க ஆரம்பித்தார்கள். சேலம் என்றால் வீரபாண்டி ஆறுமுகம், திருச்சி கே.என்.நேரு, தூத்துக்குடி பெரியசாமி, குமரி சுரேஷ் ராஜன் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவர், இவர்களைத் தாண்டி யாரும் உட்கட்சியிலேயே அரசியல் செய்ய முடியாது.

தலைமையின் குடும்பமே மத்தி, மாநிலம் என்று எல்லாப் பதவியிலும் இருக்கும் போது இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களது குடும்பத்திற்காக விடுக்கும் விண்ணப்பத்தை எவ்வாறு தலைமையால் மறுக்க இயலும். தி.மு.க.வில் தொண்டன் என்பவன் தொண்டனாக தொடங்கி தொண்டனாகவே முடிய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. அலைக்கற்றை ஊழல் விவாகரத்தில், மற்ற சாமனியனைப் போல் அவனும் வாய் பிளந்தே இருந்திருப்பான். தலைமையின் கொள்கையை தாங்கிப் பிடிக்க கொடி தூக்கிய அன்றைய தொண்டனுக்கு, இன்று கொள்ளைக்காக கொடி தூக்கும் சோதனை.

1989 வாக்கில் இருந்த தொண்டர்கள் எல்லாம் இப்போது இல்லை. கொள்ளைக்காக கொடி தூக்கிய தொண்டனை பதவியில் இல்லாத தலைமையினால் கட்டுப்படுத்த முடியுமா? தி.மு.க.வின் பலம் தலைவர்கள் இல்லை, அதன் தொண்டர்கள் தான் என்பதை தி.மு.க.மறந்து விடக்கூடாது.

தி.மு.க-என்ன செய்யலாம்?


தி.மு.க. 2016 வரை கட்சியை தாங்கிப் பிடிக்க வேண்டுமென்றால், கலைஞர் கருணாநிதியின் குடும்பம் கட்சியிலிருந்து விலகியிருக்க வேண்டும், கருணாநிதி உட்பட, ஸ்டாலினைத் தவிர.

தி.மு.க. என்றப் பெயரைக் கேட்டாலே முகம் சுளிப்பவர்கள் கூட, ஸ்டாலின் மேல் ஒரு நம்பிக்கை உள்ளது தெரிகிறது.

கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் இல்லாத தி.மு.க-வினால், நடுநிலை மக்களின் மீதான தி.மு.க.வின் குறையலாம், ஊழல் கரையை கொஞ்சமாவது குறைத்து நம்பிக்கையை வரச் செய்யலாம்.

எதிர் கட்சி என்ற அந்தஸ்துக் கூட இல்லாத இன்றைய நிலையில் அரசியல் செய்ய வேண்டும் என்பது மிகவும் சிரமமான விடயம் தான் என்றாலும், தனது பணியை செவ்வனே செய்ய வேண்டும்.

மக்களால் கொடுக்கப்பட்ட இந்த கட்டாய ஓய்வைப் பயன்படுத்தி, இலவசங்களைத் தவிர்த்து ஆக்கப் பூர்வமான திட்டங்களை யோசிக்கலாம்

இது மாதிரி எதையாவது செய்தாலொழிய, அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையான மக்களின் மனப்போக்குடன் ஒத்த ஆட்சி செய்தால், அ.தி.மு.வுக்கு. எதிர் கட்சி என்ற அந்தஸ்தையாவது அடுத்த தேர்தலில் பெற இயலும்.

அ.தி.மு.க. சரியாக செயல்படாத பட்சத்தில் தே.மு.தி.க-வுடன் கூட்டணி போட்டு அடுத்த தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு எதிர் கட்சி ஆகிவிடலாம் :) .

Labels: ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

0 Comments:

Post a Comment