அமிழ்து: தமிழக தேர்தல் முடிவுகள் - எனது பார்வைதமிழக தேர்தல் முடிவுகள் - எனது பார்வை


வழக்கம் போல இந்த முறையும் தேர்தலுக்கு முந்திய, பிந்திய என அனைத்து கருத்துக் கணிப்புகளும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் என்று அறிவித்தவுடன் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெரும் என சொன்ன ஊடகங்கள் கூட பின்னர் சிறிது இழுபறி என்றும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் கூறி இறுதியாக தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று வரை சொல்லின.

முதலில் ஊடகங்கள்:

ஊடகங்கள் தங்களது நம்பகத் தன்மையை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நடுநிலை என்று நம்ப வைத்த பல ஊடகங்கள் கூட தங்களது சொந்த விருப்பு வெறுப்பிற்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் நடந்து கொண்டு பிடிக்காத கட்சி தலைவர்களை போட்டு தாக்கியதும், மற்றவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடியதும் பிடித்தோ பிடிக்காமலோ பத்திரிகை வாங்கிப் படித்த வாசகர்களுக்கே புரிந்திருக்கும்.

இனி கட்சிகள்:

முதலில் தி.மு.க.:

இந்த தேர்தலில் இப்படிப்பட்ட படு தோல்வியை தி.மு.க. தொண்டர்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். தி.மு.க. பல தேர்தல் களங்களைக் கண்டுள்ளது. தோற்றும் போயுள்ளது. ஆனால் மிக மோசமான தோல்வி என்பது இது தான். இதற்கு முன்னர் தோல்விக்காண காரணங்கள் எம்.ஜி.ஆர். ஆகவோ ஆளுங்கட்சிக்கு எதிரான அலையோ , இராஜீவ் காந்தி கொலையில் உருவான அனுதாப அலையோ என பல காரணங்கள் இருந்தன. இவையெல்லாம் தி.மு.க.வின் தோல்விக்கு, தலைமை தான் காரணம் என்று நேரடியாக சொல்ல இயலாதவை. ஆனால் இந்த தேர்தலில் தி.மு.க.வின் படு தோல்விக்கு காரணம் யார் என நோக்கும் போது அனைத்து விரல்களும் தி.மு.க.வின் தலைமையை நோக்கியே குவிகிறது.தமிழினத் தலைவராக அடையாளம் காண ஆசைப்பட்ட கலைஞர் மு. கருணாநிதி, பெருங்குடும்பத்தின் பாச வலைக்குள் சிக்கி சராசரி குடும்ப தலைவராக மட்டுமே இருக்க முயற்சி செய்ததின் விளைவு, இந்த தேர்தலின் தோல்வி.

மாறனின் மகன் தொடங்கி நேற்று பிறந்த கனிமொழியின் மகன் கூட சினிமா தயாரிப்பாளன் ஆகிவிடுவானோ என்று அஞ்சும் அளவுக்கு சினிமாவிலும் ஆக்டோபஸ் கால் பதித்த வாரிசுகளின் கெடுபிடிகள்.

"திராவிட" எனும் சொல்லாடலில் மக்களைக் கட்டி போட்ட கழகத்திலிருந்து வருபவர், தமது மொழி பேசும் தமிழினம் அண்டை நாட்டில் அடிப்படைப்படை உரிமைக்காக கொன்றழிக்கப் பட்ட போது, காலை உணவிற்கு பின்பும், மதிய உணவிற்கு முன்பும் "உண்ணாவிரதமிருந்து" தனது எதிர்ப்பைக் காட்டி போராட்டக் களத்தில் இருந்தவர்களைக் கேலிக்குள்ளாக்கினார். ஜெயலலிதாவிற்கு ஒரு காவிரி பிரச்சனை உண்ணாவிரதம் என்றால் இவருக்கு இது.

மீனவர்கள் சிங்களக் "காடையர்களால்" சுட்டுக் கொல்லப்பட்ட போதும், தலைவர் "பாசத் தலைவனுக்கு" பாராட்டு விழாவிலும், "மானாட மயிலாட" விலும் மூழ்கிப் போயிருந்தார்.

தனது குடும்பத்தாருக்கும் கட்சிக்கும் பதவி வாங்க டெல்லிக்குப் பயணித்தவருக்கு, தமிழனம் கொல்லப்பட்டபோது தான், தனது சுகவீனம் தெரிந்தது போலும். கடிதமாக எழுதி தள்ளி தபால்காரருக்கு வேலை வைத்தார்.

பள்ளிக்குழந்தைகளுக்கு செருப்பு, சீருடை என எம்.ஜி.ஆர். தந்ததை பின்பற்றி இலவச பஸ் பாஸ் என வழங்க ஆரம்பித்தவர், கடந்த தேர்தலில் தொலைக்காட்சிக்கு வந்து நின்றார். இலவசங்கள் எல்லாவற்றையும் குறை சொல்ல முடியாவிட்டாலும், இந்த தேர்தலில் இவர் அள்ளிவிட ஆரம்பித்தது இது எங்கே கொண்டு போய் விடுமோ என்ற அச்சத்தை, பொது மக்களுக்கு கொடுக்காமல் இல்லை. இதைப் பார்த்த ஜெயலலிதா சும்மா இருப்பாரா? அவரும் தனது பங்குக்கு அள்ளி விட்டார். இது வேறு அரசியல்.

தலைமையே இப்படியிருந்தால், கப்பம் கட்டும் குட்டி அரசர்கள் போலிருந்த மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும், அவர்களது வாரிசுகளும் தங்கள் மாவட்டங்களில் செய்த ஆட்டத்தை சொல்ல வேண்டுமா என்ன? இவர்கள் செய்த நில கபளீகரம் பொது மக்களையும் வெகுவாக பாதித்து வெறுப்பின் உச்சத்தை வாங்கிக் கொடுத்தது.

தேவையில்லாத இலவசங்களைக் கொடுக்க தண்ணி இல்லாத தமிழகத்திற்கு டாஸ்மாக் மூலம் தெருவெங்கும் "தண்ணீரை" ஓட விட்டதை இவரது சாதனை என்பதா? ஒரு காலத்தில் புகைப்பிடிப்பதற்கு பயந்து எங்கெங்கோ சென்று புகைப்பிடிக்கும் "விடலை மாணவர்கள்" இன்று சர்வ சாதரணமாக டாஸ்மாக் செல்வது கண்கூடு. இதன் பாதிப்பு இன்னுமொரு பத்தாண்டுகளில் தான் தெரியப் போகிறது.

பதவியும், அதிகாரமும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பல வருடங்கள் குவிந்திருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தி.மு.க.வின் போக்கு காரணம் என்றால், அதற்கு எப்படி தண்டனை தருவது என்பதான ஜனநாயகத்தின் பதிலடி தான் இந்த படு தோல்வி.

தொடரும் ...

Labels: , , ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

1 Comments:

At 11:57 PM, Blogger Sasi said...

Satis You Blog Is Wonderful....I accept all these true things and Your writings are wonderful...

 

Post a Comment