அமிழ்து: January 2010



பதிலில்லா கேள்விகள்!

Monday, January 25, 2010




வாழ்க்கையின் சில நொடி தருணஙள் பல வித விடைக் கிடைக்காத கேள்விகளை எழுப்பிவிட்டு சென்று விடுகின்றன. கேள்விகள் யாவும் விடைப் பெறப்படாத கேள்விகளாகவே சுற்றிக் கொண்டிருகின்றன.

சுற்றுலா சென்ற போது என்னை விட சற்றே வயது முதிர்ந்த மனிதன் அதே டிசைனில் மட்டும்மல்லாது அதே நிறத்திலும் சட்டை அணிந்திருந்தான். சில நொடிகளே அச்சட்டையும் அம்மனிதனும் கண்ணில் பட்டாலும், விட்டுச் சென்ற கேள்விகள் ஏராளம்.

அந்தச் சட்டை எப்போது எடுத்திருப்பான், சட்டையின் அளவும் என்னளவை ஒத்ததா? எங்கு வாங்கியிருப்பான்? நான் வாங்கிய கடையிலேயேவா? விலையும் ஒன்றாக இருந்திருக்குமா? விற்கும் போது கடைப் பையன் என்ன சொல்லி விற்றிருப்பான்? தானே வாங்கியதா? வேறு யாவரும் இந்தச் சட்டையை கொடுத்தார்களா? தானே வங்கியது என்றால் நண்பர்களுடன் சென்றா இல்லை குடும்பதினருடனா? குழந்தைகள் சொல்லியா? மனைவி சொன்னதாலா?

வேறு யாரும் கொடுத்தது என்றால் சுப நிகழ்வுக்கா அல்லது ஏதாவது ஒரு துக்க நிகழ்வில் முறை செய்வதற்கா? துக்க நிகழ்வின் நீட்சியாக இருக்கும் இந்த சட்டையை அம்மனிதனால் மகிழ்சியாக அணிந்திருக்க முடிகிறதா?

முதிர்ந்த அந்த மனிதனுக்கும் எனக்கும் ஒரே ரசனையா, அம்மனிதன் இன்னும் மனதளவில் இள வயதுக்காரனா? இல்லை நான் முதிர்ந்து விட்டேனா? என் ரசனையா? சட்டையைப் பார்த்து தான் வாங்கினானா? முழுக்கை சட்டையின், முழுக்கை நடுவிலே இருந்த பொத்தானைப் பார்த்து நானே யோசித்து தானே வாங்கினேன், இவனுக்கு அது தெரியவில்லையா?

நீலத்தில் மஞ்சள் கோடுப் போட்ட அந்தச் சட்டைக்கு பொருத்தமான காற்ச்சட்டை எடுக்க இந்த மனிதனும் அலைந்திருப்பானா? எவ்வளவு நேரம் செலவிட்டிருப்பான் காற்ச்சட்டை எடுக்க? பொருத்தம் பார்த்து எடுத்த அந்த காற்ச்சட்டை தான் இன்று அணிந்திருக்கிறானா?

எப்படி இருவருக்கும் இந்த சட்டையை இன்று போட வேண்டும் என்று தோன்றியது. ஒத்த சட்டையைக் கூட வைத்திருப்பது பெரிய விஷயம் இல்லை என்றாலும், இன்று காலை இந்த சுற்றுலா தளத்துக்கு இதை அணிய வேண்டும் எப்படி தோணிற்று? சட்டைகள் பல இருந்தாலும் இன்று நான் இந்த சட்டையை எப்படி அணிய நினைத்தேன்?

ஒரே சாயலில் ஏழு மனிதர்கள் இருக்கிறார்கள் என்கிறார்களே அதே போல், இதே மாதிரி சட்டை வைத்திருக்கும் மனிதர்கள் எவ்வள்வு பேர் இருப்பார்கள்? அவர்கள் எல்லோரையும் ஓரிடத்தில் சேர்க்க முடியுமா?

அந்த மனிதனை திரும்பவும் காண முடியுமா? அவன் எழுப்பி விட்டக் கேள்விகளை திரும்பவும் பார்த்து அவனிடம் கேட்க முடியுமா? திரும்பவும் இதே சட்டையில் தான் வருவானா? நானும் இதே சட்டையில் மறுபடியும் வரும் போது இவனைக் காண முடியுமா?

சில தருணங்கள் எழுப்பும் விடையளிக்க முடியாத கேள்விகளாலேயே வாழ்க்கையே சுவாரசியாமாகிறாதோ?!

Labels: ,