அமிழ்து: எம்.எல்.எம்-மும், மசால் தோசையும், பின்னே நானும்!எம்.எல்.எம்-மும், மசால் தோசையும், பின்னே நானும்!சற்றேறக்குறையப் பத்து வருடங்களுக்கு முன்பு, வழக்கம் போல ஒரு சாகரில் இரவு உணவை, பெங்களூரை ஒரு நாடாக்கினால் அதன் தேசிய உணவாகுவதற்கு எல்லாத் தகுதிகளும் உள்ள மசாலா தோசையுடன் முடித்துக் கொள்ளலாம் என்று நுழைந்தேன்.


Self-Service ஹோட்டலில், கூப்பன் வாங்குவதிலிருந்து மசாலா தோசைக் கையில் கிட்டும் வரை இந்தியாவின் மக்கட் தொகைப் பெருக்கத்‌தை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்க, தோசையை எடுத்துக் கொண்டு ஆள் அரவம் கொஞ்சம் குறைந்து உள்ள ஒரு வட்ட வடிவ நெஞ்சுயுர மேசையத் தேர்ந்தெடுத்தேன்.


பண்டைத் தமிழகத்தில் போருக்குச் செல்லும் வீரனுக்கு வெற்றித் திலகம் இடுவது போல, முன்பெல்லாம் பெங்களூரின் உணவு விடுதிகளில், மசாலா தோசை நமது கைக்கு வருமுன் சப்ளையர் வெண்ணெயால் தோசையின் மேல் ஒரு வெள்ளைத் திலகமிட்டு அனுப்புவார், திலகமிட்ட தோசைகள் திரும்பி வராது என்ற போதிலும்.

தோசையின் சூட்டில், வெண்ணெய் உருகி எங்கே செல்வது எனத் தெரியாமால் தங்கள் கூட்டணியை உடைத்துக் கொண்டு இங்கும் அங்கும் இலக்கில்லாமல் தனித் தனியாக ஓட ஆரம்பிக்கும்.

ஒரு கால் பந்து மைதானத்தைப் பறவைப் பார்வையில் பார்ப்பது போல இதையெல்லாம் கவனித்துக் கொண்டே வலது கை பக்கவாட்டில் உள்ள தோசையை பிட்டு ஒரு சிறு துண்டை வாயில் போடலாம் என்று எத்தனித்த போது தான், நமது அருகில் நெருக்கமாக ஒருவர் வந்து நின்றார். வந்தவர், ஒரு கூல் ட்ரிங்க்ஸ் பாட்டிலை கையில் வைத்திருந்தார்.

திடீரென்று என்னிடம், பெங்களூருவின் பருவ நிலைப் பற்றி  ஆங்கிலத்தில் கவலைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்றைக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குக் கூட தெரியும் காரணங்களை எடுத்து வைத்தார். பின்பு, Global Warming அது இது என பல விஷயங்களைத் தொட்டுக் கொண்டிருந்தார்.


நமக்கோ, இவரிடம் பேச்சுக் கொடுத்தால், நமது தோசையின் வார்ம் போய்விடுமோ என்றப் பதட்டத்தில் ஓ , ஆங், ஊங் என்று ஆமோதித்துக் கொண்டிருந்தேன். பின்னர், என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டார், எங்கு வேலை, சொந்த ஊர் என. எதை நான் சொன்னாலும் அதை வெகுவாகப் பாராட்டினர். அந்த கம்பெனியா க்ரேட்... அந்த ஊரா சூப்பர்... அதுவும் இல்லமால், பெருமையாக இரண்டு வார்த்தைகள் வேறு சொன்னார் எதைச் சொன்னாலும்.


நானோ பெங்களூரு வந்து சில மாதங்கள் தான் ஆகியிருந்தது. ஆகா, இந்த ஊர் மக்கள் 'எவ்வளவு friendly-யாக இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.

 இப்படியாக போய்க் கொண்டிருந்த சம்பாஷனையின் ஊடே நமது கைப் பேசி எண்ணையும் வாங்கிக் கொண்டார் அந்த புது நண்பர். தோசை காலியாக எங்களது நட்புக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைக்க நேர்ந்தது. பின்பு இருவரும் பரஸ்பரம் விடைப் பெற்றுக் கொண்டு, நான் எனது இருப்பிடத்தை நோக்கி நடையைக் கட்ட ஆரம்பித்தேன்.


அந்த வாரயிறுதியில், எனது கைப் பேசிக்குப் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யாரென்றுப் பார்த்தால் அட, நமது ஹோட்டல் நண்பர் தான். பரஸ்பரம் குசலம் விசாரித்து விட்டு இவர் நம்மிடம் என்னப் பேசப் போகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், நமக்கு ஒரு புதிய யோசனையை வைத்தார். நீங்கள் எப்போது ஓய்வுப் பெறப் போகிறார்கள் என்றார். வேலையில் சேர்ந்து மொத்தமாகவே இரண்டரை வருடங்களானவனிடம், ஓய்வைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது. 58 என்று சொல்லி வைத்தேன். உங்களுக்கு அதற்கு முன்பே ஓய்வுப் பெற வேண்டுமானால் முடியுமா என்று அடுத்த பவுண்சரை விட்டார். இது எல்லாமே புதுசாயிருக்கே..என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே இன்று மதியம் ஒரு கூட்டம் இருக்கிறது வந்து விடுங்கள் என்றார்.


இந்த நட்புக்கு வயதே ஒரு வாரம் தான் என்றாலும் "நட்பு"-க்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களாக(!) பார்த்து வளர்ந்த நமக்கு அதைத் தட்ட முடியவில்லை.


மதிய உணவை முடித்துக் கொண்டு, சமர்த்தாக அவர் சொல்லிய இடத்திற்கு சொன்ன நேரத்திற்குச் சென்று விட்டேன். அது ஒரு வீடு... நமது நட்பு நம்மைக் கண்டு கொண்டுவிட்டார். அங்கே அவரைப் போல சிலரும் என்னைப் போல சிலரும் அந்த வீட்டருகே உலாத்திக் கொண்டிருந்தார்கள். நானும் சேர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் உலாத்த ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில், நமது நட்பு வந்து உள்ளே அமரச் சொன்னார்.


என்னைப் போன்ற தற்காலிக நட்புகள் முன்னே உட்கார வைக்கப்பட்டோம். பின் வரிசையில் எங்களைப் பிடித்து சாரி கூட்டி வந்தவர்கள் உட்கார்ந்துக் கொண்டார்கள்.


ஒரு இளைஞர் பாடம் எடுக்க ஆரம்பித்தார்... direct marketing, விளம்பரம், வாழ்கையில் ஓய்வு, நமது விருப்பங்களை எந்த ஒரு பொருளாதார கட்டயாமும் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்வது எப்படி..என வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் விரும்பும் அனைத்தையும் தொட்டுச் சென்றார்.

இவை எல்லாவற்றிருக்கும் நாம் செய்ய வேண்டியது சில நண்பர்களை இதில்
இணைத்து விடுவது தான் என்று அதையும் அவர் எளிதாக விளக்கினார். நாம் இதெல்லாம் கல்லூரிக் காலத்திலேயே பார்த்து இருந்ததால் இதைப் பற்றி முன்னமே நமக்கு ஒரு பார்வை இருந்தது.  நமக்கு நம்பிக்கையும் இல்லை.

கூட்டம் முடிந்த உடன் நமது நட்பு உடனேயே சேரச் சொல்லிக் கேட்டார். இது உண்மையிலேயே பலன் அளிக்கலாம். ஆனால், என்னால் முடியும் என்ற நம்பிக்கையில்லை என்றேன். சில வாரங்கள் தொடர்ந்து அழைத்தார். நம்மால் முடியாது என்று நாசுக்காக சொல்லிக் கொண்டிருந்தான். சிறிது காலத்தில் அந்த தற்காலிக நட்புக்கு முற்றுப் புள்ளி அந்த நண்பராலேயே ஒரு நல்ல நாளில் வைக்கப்பட்டது.

இப்படியாக பத்து வருடம் கடந்த விட்ட நிலையில்...

கடந்த வாரம் ஓரிரவு உணவிற்காக ஒரு சாகர் உணவு விடுதியை அடைந்தேன். மசாலா தோசையை வாங்கி உண்ண ஆரம்பித்த போது தான், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் போலவே ரிபீட் ஆக ஆரம்பித்தது. இள வயது ஆள் ஒருவர் அதே பழைய பஜனையை ஆரம்பித்தார். அதுவும் பெங்களூரின் கால நிலை மாற்றத்திலிருந்து ... எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருந்தேன். கடைசியாக விடைப் பெரும் முன், எதிர்ப்பார்த்ததைப்  போலவே கைப் பேசி எண்ணைக் கேட்டார்.

எம்.எல்.எம்-மிற்கு தானே கேட்கிறீர்கள் எனக்கு அதில் விருப்பமில்லை என்று சொன்னேன். இந்த ஆள் புதியவர் போல... இப்படிக் கேட்டவுடன் மிகுந்த ஏமாற்றத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்...

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மசாலா தோசைக்கு வைக்கப்படும் வெண்ணை இப்பொழுதெல்லாம் வைக்கப்படுவதில்லை ...

மசாலாவின் உள்ளே வைக்கப்படும் சிறு முந்திரிப் பருப்பு, கடலை போன்றவை வைக்கப்படுவதில்லை ...

ஏன், மசாலாவின் அளவுக் கூட குறைந்து விட்டது

மசாலா தோசை மட்டும் அல்ல, நானும் கூட பல மாற்றங்களைக் கண்டு விட்டேன் ... எடைக் கூடியிருக்கிறது ...

அந்த காலக் கட்டங்களில், தலையில் கின்னஸ் அளவிற்கு முடியில்லாமல் இருந்தாலும் கூட, முடி இல்லை என்று சொல்லாத அளவிற்கு இருந்த எனது தலைக் கூட மேலே சில சொத்துகளை இழந்து புது பெயரை வாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது...

இப்படியாக நிறைய மாற்றம் நம்மைச் சுற்றி...

ஆனால், இந்த எம்.எல்.எம். ஆட்கள் மட்டும்....?!

Labels: , ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

2 Comments:

At 8:24 AM, Blogger Rajarajan said...

மருத்துவமனை வரவேற்ப்பறையில் பிரசவத்துக்காக என் மனைவியை அனுமதிக்கக் காத்திருந்தபோது ஒரு நண்பர் (திருச்சிக்காரர் என்று சொன்னார்) "நட்புடன்" பேசி என் கைப்பேசி எண்ணை வாங்கிச்சென்றார் .. பின்பு கூப்பிட்டு எம் எல் எம் என்று சொன்னபோது ஒரு கடி கடித்துவிட்டேன். எனக்குப் பிடிக்காத விஷயம் எவனப் பாத்தாலும் வியாபாரம் பேசுவது ...

நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லாத பக்கம் ... நல்ல கம்பெனி ... சொன்னவன் மட்டும் இப்ப என் கையில கிடைச்சான் ...

எடை கூடிச்சுன்னு சத்தமா சொல்லாதீங்க .. எவனாவது நாள் பேரு "pakage"ன்னு சொல்லிட்டு வந்திரப்போரன்.

 
At 8:24 AM, Blogger Rajarajan said...

This comment has been removed by a blog administrator.

 

Post a Comment