அமிழ்து: July 2013



ஒரு மாலை வேளையும், மயங்கிய வாகனமும்!

Sunday, July 28, 2013


மாலை ஆறு மணிக்கு மேல் பீன்யா பகுதியிலிருந்து கிளம்பி நாகவரா-விற்கு திரும்ப நினைத்த போது, என்னுடைய இரு சக்கர வாகனம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. "ஆட்டோ ஸ்டார்ட்" பட்டனை அமுக்கினால் காச நோய் வந்தவரின் கடைசி இருமல் போல இருமி விட்டு அடங்கியது. "ஆட்டோ ஸ்டார்ட்" தன்னால் எதுவும் முடியாது என்பதை உறுதி செய்ததால், "கிக்"கரை முயற்சி செய்யலாம் என்று கிக்கரை தேடினான்.

கிக்கர் கிடைத்தவுடன் காலால் ஏறி மிதிக்க ஆரம்பித்தேன். மிதித்தேன் மிதித்தேன் நான் டயர்டாகும் வரை மிதித்தேன். ஆனால், நியூட்டனின் மூன்றாம் விதியை தவறு என நான் முடிவு செய்யும் தருணமாகவே அது அமைந்தது. வண்டியிடமிருந்து எந்த ரியாக்ஷ்னும் இல்லை.

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன், பாஞ்சு அடிச்சு பத்தரை டன் என்று சிங்கம் ஒன்று, இரண்டு என பஞ்ச்-களை உறுமிக் கொண்டே உதைத்தாலும் நாம் என்ன சூர்யாவா இல்லை, அது தான் என்ன சிங்கம் வில்லன்களா... தான் எதுவுமே செய்யாதது போல் நிற்கும் கரகாட்டக்காரன் "நாதஸ்" போல முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தது. எனக்கிருக்கும் தம்மாத்துண்டு வாகனவியல் அறிவை வைத்துக் கொண்டு ஒரு பெரிய அதிசயத்தை நிகழ்த்த முயன்று கொண்டிருந்தேன்.

இந்த விளையாட்டில் ஒரு அரை மணி நேரம் கழிந்து விட்டது. நன்றாக இருட்ட ஆரம்பித்தது. ஞாயிறு வேறு. எங்காவது மெக்கானிக் ஷாப் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தேன். இருந்தாலும் இந்த ஞாயிறு மாலை நேரத்தில் திறந்திருப்பார்களா என்பதுவும் சந்தேகம்.  இப்பொழுது எனக்கு எந்த பிரச்சினையும், காஷ்மீரிலிருந்து  காவிரி வரை எதுவுமே பிரச்சினையாகவே தெரியவில்லை. எனது இரு சக்கர வாகனத்தை உயிர்பிப்பது தான் நாட்டின் தலையாய பிரச்சினையாக தோன்ற ஆரம்பித்தது. 108 ஆம்புலன்ஸ் போல, இது போன்ற இலவச  வசதியை சாலையில் நிற்கும் வாகனங்களுக்கு 118 என்றோ 119 என்றோ ஒரு எண்ணைக் கொடுத்து எக்ஷ்டண்ட் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

இந்த யோசனையிலேயே கொஞ்ச தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போதே ஒரு கடை கண்களில் பட்டது. எதிர்பார்த்ததைப் போல தமிழரின் கடை தான். விசயத்தைச் சொன்னதும், தான் சிறிது நேரம் இருப்பதாகவும் வண்டியைத் தள்ளி வரும்படி கூறினார். என்னை விட கிட்டத்தட்ட ஒன்றே கால் மடங்கு கூடுதலாக இருக்கும் வண்டியையும் கூடவே என்னுடைய எடையையும் சேர்த்து திரும்பவும் கடைக்கு வந்து சேர்ந்தேன்.

கைதேர்ந்த மருத்துவர் போல பார்த்தவுடனேயே பிரச்சினையைக் கண்டறிந்து விட்டார். நாளை தான் கிடைக்கும் என்றார். அவரிடம் "ஐயன்மீர், நான் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டும், ஆதலால் இப்பொழுதே ஏதாவது செய்யுங்கள் என்றேன்" உட்சபட்ச மரியாதையுடன். என்னுடைய கோரிக்கையை ஏற்ற அவர் சற்றே முயன்று ஸ்டார்ட் செய்து விட்டார். ஆனால் மென் பொருளாளர்கள் "நோன் இஷ்யு" என்று சொல்லியே மென் பொருட்களை வெளியிடுவது போல, நான் ஸ்டார்ட் எடுத்துக் கொடுப்பேன் நீங்கள் எங்கும் நிற்காமல் சென்று விடுங்கள். நடுவில் எங்காவது நின்று விட்டால், திரும்பவும் எடுக்க முடியுமா என்று கியாரண்டி இல்லை என்று சொல்லி விட்டார்.

ஒரு பக்கம் சந்தோசம் என்றால் இன்னொரு பக்கம் ஒரு சவாலையும் வைத்து விட்டார். வண்டியை எடுத்து விட்டேன். சிறிது தூரம் சென்றவுடன் ஸ்பீட் படத்தின் மூன்றாம்  பாகத்தில் நானே நடிப்பது போல உணர ஆரம்பித்தேன். தென் மேற்கு பருவக் காற்றின் கைங்கரியத்தால் பொத்தலாகிப் போன சாலையின், ஒவ்வொரு குழியிலும் ஏறி இறங்கும் போதும் மெக்கானிக் வார்த்தைகள் ஞாபகம் வந்த வண்ணம் இருந்தது. அந்த வழியில் பல முறை வந்திருக்கிறேன்... ஆனால், எப்பொழுதுமே என் கன்ட்ரோல் இல்லாமல் வண்டி நின்றதில்லை. இருந்தாலும், ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சாலையோர மரங்களும், கடைகளும் பின்னோக்கி செல்லச் செல்ல எனது பயமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து, வீட்டை அடைந்தவுடன் பூஜ்ஜியமாக ஆனது.

ஒரு வழியாக வண்டியை நானே ஆஃப் செய்து விட்டு வீட்டுக்குள் போக நினைக்கும் போது, மெக்கானிக் சொன்னது சரிதானா என சோதித்துப் பார்க்க தோன்றியது... சாவியைத் திருகி, ஆட்டோ ஸ்டார்ட் பட்டனை அமுக்கியவுடன் வண்டி மீண்டும் கரகாட்டக்காரன் நாதஸ் போஸுக்கு மாறியது!

Labels: ,

சிங்கம்-2 பார்த்த அனுபவங்கள்...

Sunday, July 07, 2013


ரொம்ப லேட்டாக படத்துக்கு செல்ல நினைத்ததால், பக்கத்திலிருக்கும் ராக்லைன் மல்டிப்ளெக்சில் டிக்கெட்டுகளைத் தேடிய போது, இரண்டு திரையில் ஓடினாலும் இரவு 9:30 மணி மற்றும் 10:05 மணி இரண்டு காட்சிகளுமே கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது... கடைசியாக 10:05 காட்சிக்கு ரிசர்வ் செய்தாகிவிட்டது...

9:45-க்கு அங்கே சென்றால் பார்கிங் இடம் நிரம்பி வழிந்தது... ஒரு மாதிரியாக வாகனத்தை நிறுத்தி விட்டு மேலே சென்றால், முந்தைய காட்சி இன்னும் ஓடிக் கொண்டிருந்தது. தமிழர், கன்னடியர், தெலுங்கர், மலையாளி என அனைவரும் வந்திருந்தனர். கதவுக்கு வெளியே  எல்லோரும் காத்திருந்தோம்...

ஒருவர் கதவைத் திறந்த உள்ளே செல்ல முயன்ற பொழுது உள்ளேயிருந்து qube சவுண்ட் சிஸ்டமில் உஃப், புஃப், பஃப் என சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது... டி.வி. ட்ரைலரில் "ஒரு பயலும் தப்ப முடியாது" என்று சூர்யா கர்சித்தது மைல்டாக ஞாபகம் வந்து படம் பார்ப்பவர்களையும் விட மாட்டார் என்று கன்பார்ம் செய்தது...

ஒரு வழியாக உள்ளே சென்று  திரையிலிருந்து 4-வது வரிசையில் அமர்ந்தோம். சூர்யா காலையும், கையையும் தூக்கி நடக்கும் போதும் அடிக்கும் போதும் 4-டி இல்லாமலேயே நம்மீது அடி இறங்குவது போல இருந்தது...

இடைவேளைக்கு முன்பே திடீரென படத்தை நிறுத்தி விட்டார்கள். அதனைத் தொடர்ந்து ஒரு அறிவிப்பு வெளியானது... சிங்கம் 2 உள்ளேயிருக்க, இன்னொரு சிங்கம் வெளியே இரசிகக் கண்மணிகள் பார்கிங் கிடைக்கமால் அவசரத்தில் சாலையிலேயே நிறுத்தி விட்டு வந்த கார்களை அள்ளிக் கொண்டு செல்வதை அறிவித்தார்கள். இரண்டாம் காரின் எண்ணை வாசித்துக் கொண்டிருந்த போதே இரசிகர்கள் பொறுமையிழந்து படத்தைப் போடச் சொன்னார்கள்.

இதுவரை துரைசிங்கம் திரையில் சட்டத்திற்கெதிராக நடப்பவர்களை துவம்சம் செய்தததை ஆர்வமுடன் இரசித்துக் கொண்டிருந்த எங்கள் வரிசையில் இருந்த ஒருவரின் காரின் எண்ணும் படிக்கப்பட, அள்ளிச் சென்ற காவல் துறையினரை வசவிக் கொண்டே, ஒரு கண்ணில் துரைசிங்கத்தின் சாகசத்தைத் தவற விடாமல் பார்த்துக்கொண்டே சென்றார்.

மீண்டும் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திற்குள்ளாகவே திரும்பவும் நிறுத்தி விட்டு கார்களின் எண்களைப் படிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது, ஏற்கனவே திரையில் பார்த்த துரைசிங்கத்தின் பஞ்ச் டயலாக்குகளும், அவரது ஆக்ஷ்னும் சேர்ந்து எங்களது இரத்தத்தின் சூட்டை ஒரு இரண்டு டிகிரி ஏற்றியிருக்க, ஒட்டு மொத்தமாக எல்லா பொது ஜனங்களும் சேர்ந்து அவரவர் மொழிகளில் இந்த அநியாயத்தை ஓ ஓ ஓ என்று கத்தி தட்டிக் கேட்டோம்.

ப்ரொஜெக்டர் பின்னால் உட்கார்ந்திருந்த ஆப்பரேட்டருக்கு மேலே இருந்து பார்த்தப் போது ஒரு நானூறு துரைசிங்கங்கள் ஒன்றாக கர்சித்து நிற்பது போல இருந்ததோ என்னவோ உடனே படத்தைப் போட்டு விட்டார்.

இடைவேளையிலும் விடாமால் ஒரு துண்டுச் சீட்டில் எண்களை எழுதி இருக்கையில் உட்கார்ந்திருந்த அனைவரிடமும் காட்டி, அவர்கள் அந்த கார்களுக்கு சொந்தக்காரர்களை கண்டறிய கஜினி முகமது போல எங்களை நோக்கி படையெடுத்த வண்ணமே இருந்தார்கள்.

இதற்கிடையே படமும் நகர்ந்த வண்ணம் இருந்தது. முடிவில் துரைசிங்கம் தான் சபதம் செய்ததைப் போல டேனியை தென் ஆப்பிரிக்காவில் கைது செய்து இந்தியா கொண்டு வந்து, அனுஷ்காவைப் பார்த்ததும் டூயட் பாடப் போகிறார் என்ற ஒரு இக்கட்டான நிலையில் படம் முடிந்தது.

அதிர்ஷ்டவசமாக, துரைசிங்கம் சொன்னதைப் போலல்லாமால் அவரிடமும் தப்பித்து, வாகனத்தை தவறான இடத்தில் நிறுத்தி ஒரு சிலரைப் போல வெளியே நின்ற லோக்கல்  சிங்கத்திடமும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து, ஒன்றரை மணிக்கு பத்திரமாக வீடு வந்து சேர்ந்து, படுத்தால்... சிங்கம் 3-யும் ஹரி எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதால், சின்னத்திரையின் நாதஸ்வரம், தென்றல் போன்ற மெகா சீரியல்கள் போல, பெரிய திரையில் மெகா சினிமாக்களாக எடுத்து தமிழில் ஒரு ட்ரண்ட் உருவாக்கப் போகிறாரோ என்று  தோன்றிய சந்தேகத்திலிருந்து மட்டும் தப்ப முடியவில்லை...:)