அமிழ்து: வீட்டிற்கு வந்த டையனோசர்...!



வீட்டிற்கு வந்த டையனோசர்...!





புதியதாக வாங்கிய தொலைக்காட்சியைப் பொருத்துவதற்காக அந்த கம்பெனியிலிருந்து ஒரு டெக்னீஷியன் வரவேண்டும். வாங்கிய மூன்றாம் நாள் அதாவது ஒரு செவ்வாய்க்கிழமை மாலை ஆறரை மணிக்கு, நான் எனது வீட்டிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எனது அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. வாகனத்தை சற்று ஓரமாக நிறுத்தி விட்டு பேச ஆரம்பித்தேன்.

அவர் தனது பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார். "டையனோசர்" என்பது போல் எனது காதில் விழுந்தது. போக்குவரத்து இரைச்சல் சற்றே அதிகமாக இருந்ததால் நமது காதில் தான் ஏதோ சரியாக சேரவில்லை என்று நினைத்துக்கொண்டு, பேரா முக்கியம்... இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிறேன்.. உடனே  வீட்டிற்கு வர இயலாது. நீங்கள் நாளை வாருங்கள் என்றேன். வழக்கம் போல் நாளை எனபது வந்தால் தான் நிச்சயமாக இருக்க... மாற்றி மாற்றி அவரை (டையனோசரை (!) ) அழைத்து சனிக்கிழமை மதியம் என்று பிக்ஸ் செய்தேன்.

இதற்கிடையில், எனக்கு பெருத்த சந்தேகம்... ஒரு மனிதனுக்கு விலங்கு பெயரை வைப்பார்களா? இருக்கலாம்... எனக்கு தெரிந்த ஒரு பையனுக்குக் கூட "காளை" என்று பெயரிருந்தது... கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத அந்த ஊரில் என்னுடைய பால்ய காலத்தில் இருந்த போது, எங்களைப் போன்ற சிறார்களுக்கு அவன், பெயரைப் போலவே முரட்டுக் காளையாகவே தெரிந்தான்.

சமீபத்தில் கூட சிவக்குமார் புதல்வர்கள் சிங்கம், சிறுத்தை என்றப் பெயர்களில் புழங்கி படங்கள் வெளி வந்தனவே. ஆண்களுக்கு மட்டுமா விலங்குகள் பெயர்கள் வைக்கிறார்கள்? பெண்களுக்கும் கூட மயிலு, குயிலு, சிட்டு என்று பெயர்கள் வைத்து பறவைகள் போல கூவவும் விடுகிறார்கள்...

இந்த பெயர்களெல்லாம் கூட பரவாயில்லை. நாம் வாழும் காலத்தில், அவ்விலங்குகளின் குணாம்சத்தால் கவரப்பட்டோ அல்லது வேறு பல காரணங்களாலோ அவர்களது பெற்றோர்கள் வைத்திருக்கலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக நம்பப்படும் டையனோசரால் ஒரு தகப்பனோ, ஒரு குடும்பமோ கவரப்பட்டு அப்பெயரை தனது அடுத்த தலைமுறைக்கு வைக்குமா?

ஒரு வேளை இவர் அரியலூர் பகுதியைச் சேர்ந்தவரா? எனக்குத் தெரிந்த வரையில் இந்தியாவில் அரியலூரில் மட்டும் தான் டையனோசர் சுவடுகள் கண்டிப்பிடித்ததாக நினைவு. இவரது மூதாதையர்கள் யாரும் டையனோசரை செல்லப் பிராணியாக தங்களது வீட்டில் வளர்த்திருக்கலாம். ஏதோ ஒரு சந்தர்பத்தில் தனது உயிரை விட்டு, அந்த டையனோசர் இவர்களது குடும்பத்துக்கு உதவியிருக்கலாம். அதன் நினைவாக, வழி வழியாக தனது வம்சத்தில் ஒருவருக்கு டையனோசர் என்று பெயர் வைக்க வேண்டும் என்பது மரபாயிருக்கலாம்...? ;)

டையனோசர் என்பது கூட தொண்ணூறுகளின் மத்தியில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜூராசிக் பார்க் படத்தின் மூலமே சாமானிய மக்களுக்கிடையிலும் பிரபல்யம் அடைந்தது. வரும் இந்த டெக்னிசியன் தொண்ணூறுகளின் மத்தியில் பிறந்திருப்பதற்கும் வாய்ப்பு சற்று கம்மியாக இருக்கிறது. அல்லது தமிழ்நாட்டில் நடிகர்களின் தீவிர விசிறிகள் தங்களது பெயர்களை ரஜினி சிவா, கமல் குமார் என்று பெயர் வைத்துக் கொள்வார்களே அது போல இந்த டெக்னிசியனும் டையனோசரால் கவரப்பட்டு டையனோசர் என்று வைத்துக் கொண்டாரோ?!

டையனோசர் என்ற இவரது பெயரை அலுவலகத்திலும், வீட்டிலும் முழுமையாகத் தான் கூப்பிடுவார்களா? "டை" அல்லது "டையன்" என்று கூப்பிடுவார்களா? "டை" என்று எப்படி சொல்ல முடியம்? இப்படியாக நான்கு நாட்களில் தொலைக்காட்சியைப் பொருத்துவதை விட "டையனோசர்" என்று பெயர் தாங்கி நிற்கும் இந்த மனிதனைப் பார்க்கும் ஆர்வமே அதிகமாகிவிட்டது.

சனிக்கிழமையும் வந்தது. எங்கே மறந்து விடுவாரோ என்று காலையிலேயே ஒரு முறை அழைத்து நினைவூட்டினேன். அப்போது கூட அவரது பெயரை வைத்து என்னால் உறுதியாக அழைக்க முடியவில்லை. இன்று கண்டிப்பாக வந்து விடுவேன் என்றார். டையனோசருக்காக காலையிலிருந்து காத்திருந்தேன்.

அவரிடமிருந்து தான் அழைப்பு வந்தது. "டையனோசர்"... எப்படி சார் வர்றது என்று வீட்டுக்கு பக்கத்தில் நான் சொன்ன "லேன்ட் மார்க்"-லிருந்து கேட்டார். நீங்கள் அங்கேயே இருங்கள் நான் வந்து பிக்-அப் செய்கிறேன் என்று சொல்லி அவர் நின்ற இடத்திற்கு சென்றேன்.

பரஸ்பர அறிமுகம்... இப்போது கூட "டையனோசர்" என்று சொல்லி கைக் குலுக்கினார். ஆள் நாற்பதுகளின் தொடக்கத்தில் தான் இருக்க வேண்டும் கண்டிப்பாக தொண்ணூறுகளின் மத்தியில் பிறந்திருக்க வாய்ப்பில்லை. குங்குமப் பொட்டு வேறு வைத்திருந்தார். பார்த்தால் சினிமாவின் பரம விசிறி டைப் என்றும் சொல்வதற்கில்லை.

இப்போது கூட பேரை வைத்து அழைக்காமல் நீங்க, வாங்க என்று சமாளித்து விட்டேன்.

எல்லாம் முடிந்து கிளம்ப தயாரானார். எனக்கு "டையனோசர்" பெயர் காரணம் தெரியவில்லை என்றால் அன்று தூக்கம் வருமா தெரியவில்லை...

தொலைக்காட்சியில் எந்த பிரச்சினை என்றாலும் என்னை அழையுங்கள். அதே நம்பர் தான் என்றார்.

இப்பொழுது கேட்டேன்... சாரி, உங்க பேர திரும்பி ஒரு முறை சொல்றீங்களா?

டையனோசர்...

என்னது...? என்றேன் நான் திரும்ப...

டையனோசர்...?!

இல்ல, கொஞ்சம் மெதுவா சொல்லுங்க.. 

தயானந்த் சார்...என்று சொல்லி அவர் கிளம்ப...

நான் மட்டும் தயானந்த் சார், தயானந்த் சார் என்று  திரும்பி திரும்பி சொல்லிப் பார்க்க "ந்த்" கழன்று தயானசார், தயானசார் என்றாகி சிறிது நேரத்தில் டையனோசர் என்று செட்டில் ஆனது...

உங்களுக்கு... ;) ? !

Labels: ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

8 Comments:

At 6:35 AM, Blogger Rajarajan said...

என்ன கொடும சட்டிஸ்கர் .. சாரி.. சதிஸ் சார் இது ... என் கூட படித்த சிலவர்களை நினைவுக்கு வர வைத்துவிடீர்கள் .. கோட்டாலமுத்து( கோட்டை) , சொரிமுத்து (சொரிஜி), ஹை கோர்ட் துரை ... பதிவுக்கு மிக்க நன்றிகள்.

 
At 8:11 AM, Blogger Mahendhiran G said...

Machi...nice narration...:-)

 
At 8:51 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

@ராஜன், உங்களது ஆட்டோகிராபை இந்தப் பதிவு சிறிது மீட்டதில் மிக்க மகிழ்ச்சி! இந்தப் பெயர் காரணங்களை பின்பு உங்களைப் பார்க்கும் பொது கேட்டுத் தெரிந்துக் கொள்கிறேன்.

 
At 8:52 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

நன்றி மகேந்திரன்!... :)

 
At 12:50 AM, Blogger venkat said...

Nice Satish :)

 
At 12:51 AM, Blogger venkat said...

Nice Satish :)

 
At 1:01 PM, Blogger Sasi said...

தயனாந்து என்ற பெயரை வைத்து என்னமா எழுதறிங்க!!!!! Simply Great !!!!

 
At 1:04 PM, Blogger Sasi said...

தயானந்த் என்ற பெயரை வைத்து என்னமா எழுதறிங்க !!!! Simply Great !!!

 

Post a Comment