அமிழ்து: August 2013



பஸ் ஸ்நேகம்?!

Friday, August 23, 2013



நண்பர்களுடன் தங்கியிருந்த காலத்தில், திருச்சிக்கு செல்ல டிக்கெட் எதுவும் முன்பதிவு செய்யவில்லயெனில், நண்பர்களுடன் சேர்ந்து ஓசூரிலிருந்து திருச்சிக்கு, இரவு ஒன்பதரை மணிக்குக் கிளம்பும் 3+2 பேருந்தில் செல்வது தான் வழக்கம்.

அடித்துப் பிடித்து பெங்களூரிலிருந்து ஓசூருக்கு எப்படியாவது ஒன்பதரை மணிக்கு சென்று விடுவோம். பேருந்து திருச்சிப் போகும் வரை ஜக ஜோதியாக இருக்கும். இந்த பேருந்தில் செல்லும் போது தான் இளைய தளபதி அவர்களின் திறமையை கில்லி படத்தின் மூலமாகவும், இயக்குனர் விக்ரமன் அவர்களின் படங்களின் பின்னணி இசையின் வீரியம் "உன்னை நினைத்து" படத்தின் மூலமாகவும் புரிந்தது. படங்களைத் தயாரித்தவர்கள் கூட அத்தனை முறை பார்த்திருப்பார்களா என்பது கூட சந்தேகம் தான். எப்படியும் ஓட்டுனர் இரண்டரை படங்களைப் போட்டு விடுவார்.

திருச்சி நெருங்க நெருங்க எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களை போட ஆரம்பித்து விடுவார். அப்பொழுது தூங்க ஆரம்பிக்கும் நமக்கு எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களைக் கேட்டவுடன் இரண்டு லோட்டா தன்னம்பிக்கை டானிக்கை உள்ளே விட்டது போல இருக்கும். பின்பு எப்படி தூங்குவது?

இப்படி ஒரு நாள், ஓசூரில் நண்பர்களுடன் ஏறி 3 பேர் அமரக் கூடிய சீட்டில் அமர்ந்த பொழுது, எங்களுக்கு நேராக இருந்த 2 பேர் உட்காரும் இருக்கையில் ஒரு வயதான தாத்தா மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். வண்டி கிளம்பு முன் ஒரு இளைஞன் வந்து அந்த தாத்தா அருகில் உட்கார முனைந்தான்.

உட்காரும் முன் தாத்தாவை அவன் இன்னும் கொஞ்சம் ஜன்னலோரம் தள்ளி உட்காரச் சொன்னான். தாத்தா ஏதோ முணு முணுக்க, பதிலுக்கு இளைஞனும் முணு முணுக்க இந்திய எல்லைக்குள் வந்துவிட்ட சீன இராணுவத்தினை பார்ப்பது போல பார்த்து விட்டு அவன் அமர சற்று ஒதுங்கினார்.

சிறிது நேரத்தில் பேருந்து கிளம்பியது. அது ஒரு தென் மேற்கு பருவக் காற்றுக் காலம். மழையும் வெளியே தூறிக் கொண்டிருந்தது. பேருந்திற்குள் ஏற்கனவே மழைப் பெய்திருந்தது. பேருந்து கிளம்பியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக குளிர் காற்று அனைவரையும் தழுவத் தொடங்கியது. ஜன்னலை இழுத்து மூட முயன்று கொண்டிருந்தார்கள் சிலர். சிலர் குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள தங்களது பையிலிருந்து ஏதாவது கிடைக்குமா என்றுத் துலாவிக் கொண்டிருந்தார்கள்.

தாத்தா குளிருக்கு இதமாக போர்த்‌திக் கொள்ள ஒரு கம்பளியை வைத்து இருந்தார். படம் ஓட ஆரம்பித்தது. சிலர் தூங்க ஆரம்பித்தார்கள். தாத்தா போர்த்‌திக் கொண்டார். அருகில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞன் தனது இரு கைகளையும் குறுக்காக தனது உடம்பில் கட்டிக் கொண்டு குளிருக்கு கைதியாகி இருந்தான்.

கிருஷ்ணகிரி அருகே மோட்டலில் வண்டி நின்ற போது தாத்தாவும் இளைஞனும் இறங்கவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். இப்பொழுது தாத்தாவுடன் நெருங்கி இருந்தான் இளைஞன். அவரது தோள் மேலே சாய்ந்திருந்தான். குளிருக்கு இதமாக இருந்திருக்கும் போல.


இன்னும் சிறிது தூரம் போக, தாத்தாவின் கம்பளியை கொஞ்சமே கொஞ்சமாக அவன் போர்த்தியிருந்தான்.

சேலம் தாண்டியது இப்போது பார்த்தால் தாத்தா இளைஞன் மேல் சாய்ந்திருந்தார். தாத்தாவின் கம்பளி இன்னும் கொஞ்சம் பகிரப்பட்டிருந்தது.

தொட்டியம் தாண்டியது, தாத்தாவும் இளைஞனும் உண்மையிலேயே தாத்தா, பேரன் ஆகியிருந்தார்கள். தாத்தாவின் போர்வைக்குள் இப்பொழுது இரண்டு பேருமே சென்று விட்டார்கள். தாத்தாவிற்கு பேரனால் இப்பொழுது எந்தத் தொந்தரவும் இல்லைப் போல. தாத்தாவும், பேரனும் நன்றாகத் தூங்கி விட்டார்கள்.

ஒரு வழியாக எம்.ஜி.ஆர். பாட்டு ஓட ஆரம்பித்து திருச்சியும் வந்தது. மத்தியப் பேருந்து நிலையம் வந்தவுடன் தாத்தாவும், பேரனும் இறங்கி ஆளுக்கொரு பக்கமாக சென்று விட்டார்கள், ஒன்றுமே பேசிக் கொள்ளாமல்!