அமிழ்து: March 2010சிறைப் பிடிக்கப்பட்ட ஷேவிங் ரேஷர்!

Monday, March 08, 2010
நமக்கும் முடிவெட்டுதல் மற்றும் ஷேவ் செய்தல் போன்ற விஷயங்களுக்கும் ஏழாம் பொருத்தம் போல. நானே சும்மாயிருந்தாலும் என்னைத் தேடி வந்து புது அனுபவத்தைக் கொடுப்பதாக இவை அமைந்து விடுகிறது.இப்படித் தான் சில வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் தங்கியிருந்த வேளையில் ஒரு சனிக்கிழமை நடந்தது. அன்று மதியம் அறை நண்பருடன் கோரமங்களாவிலுள்ள் கிருஷ்ணா கஃபேயில் மதிய உணவை ஒரு கட்டு கட்டிவிட்டு, ஏதோ பாருக்குப் போய் விட்டு வந்த ரேஞ்சுக்கு பைக்கை மயக்கத்திலேயே ஓட்டி வந்தேன். வழியில் நல்ல வேளை நமது கர்நாடகா போலிஸ் மக்கள் இல்லை. இல்லையெனில் ஊத சொல்லிக்கூட பார்த்திருப்பார்கள். சரி ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்ததும் சாப்பிட்டே சோர்ந்திருந்த நான் தூங்கலாமென்று முயற்சித்து , முடியாமல் போகவே நமது மடிக்கணினியை திறந்து வைத்து விட்டு, கூகுள் சர்வருக்கு வேலைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

இந்த வேளையில் தான் கூகுள் சர்வருக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக "சார், சார்" என்று வெளியில் குரல் கேட்டது. கதவு சரியாக மூடியிருக்காதபடியால் அந்த குரல் கதவுக்கு நேரே தூங்கிக் கொண்டிருந்த நண்பருக்கே அட்ரஸ் ஆகிக் கொண்டிருந்தது.

நானோ அந்த "சார், சார்" எனக்குத் தான் என்று நினைத்து, பதிலுக்கு "ஏஸ்" என்றேன். பதில் குரலைக் கேட்ட அந்த "சார், சார்" மிகவும் உற்சாகமாகி "எக்ஸ்க்யூஸ் மீ சார்" என்றது. சரி, யார் தான் என்று மடிக்கணினியை இறக்கி விட்டு வெளியே சென்று பார்த்தால், அந்த வெயிலிலும் கழுத்தில் டையையூம், காலில் ஷீவையும், ஒரு எக்சிக்யூட்டிவ் பையையும் வைத்துக் கொண்டு ஒரு பையன் நின்றுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்தவுடனே புரிந்தது, இன்று நமது பர்ஸ்க்கு வேலையிருக்கிறது என்று.

இதுப் போன்ற தருணங்களில், நான் என்றுமே ஜெயித்ததில்லை. வந்தவர் கொண்டு வரும் பொருளை விட, அந்த அட்டு சாமனையும் அவர் விற்க வேன்டிய சூழ்நிலை தான் என் முன்னே வந்து போகும். அதனால் அதை வாங்கி என்னிடம் வந்தவரை ஜெயிக்க வைத்துவிடுவேன்.

கன்னடம் தெரியுமா என்றதற்கு புரியும் என்று சொல்லி அவரைக் கன்னடத்திலேயே பேச வைத்தேன். இப்போது புரிந்தது, இன்று நான் வாங்க இருப்பது "ஆட்டோமேடிக் ஷேவிங் ரேஷர்". நடுவில் நானும் என்னுடைய பேச்சுத் திறனை வளர்க்கும் விதமாக அவரிடம் அந்த ஷேவரைப் பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டேன்.

வெறும் வாய் வார்த்தையாக மட்டுமில்லாமல் அதனை டெமோவாக காண்பிக்க எனது கன்னத்தில் வளர்ந்திருந்த ஒரு வார தாடியை உபயோகப்படுத்திக் கொண்டார்.

இந்த நேரத்தில் தான் எங்களது ஒரே மாடியின் அடுத்த வீட்டில் குடியிருக்கும் அண்டை மாநில கேரள சேச்சிகள் வெளியில் சென்று விட்டு வீடு திரும்ப, எனது கன்னம் இன்னொருவர் கையில் மாட்டி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது, அவர்களுக்கு சிரிப்பையும் எனக்கு ஒட்டுமொத்த வெட்கத்தையும் வரவழைத்தது.

இவ்வளவு அவமானத்துக்குப் பிறகும் வாங்க வேண்டுமா என்று தோன்றினாலும் அவர் அரை குறையாக ஷேவ் வேறு செய்து விட்டபடியால் வழக்கமான நமது இளகிய மனது வாங்கத் தூண்டியது.

இதற்கிடையில் அந்தப் பையனின் சீனியர் ஒருவர் வந்து விட்டார் என்னை மடக்க. நான் ஏதோ மிகவும் "கஷ்டமர்" என்று நினைத்து, அவரும் தனது தொழில் திறமையைக் காட்ட ஆரம்பித்தார். ஏற்கனவே இதனைக் கேட்டு சோர்வடைந்திருந்த எனது காதுகள் அழ ஆரம்பித்தது அவைகளுக்கே ஒரு முறைக் கேட்டிருக்கும்.

ஒரு வழியா ஃப்ளாஷ் பேக் போல் இவரும் சாமனின் அருமை பெருமைகளைச் சொல்லி முடிக்க நான் வாங்கிவிடுகிறேன் என்று கெஞ்சாத குறைதான். இதையெல்லாம் நமது அறை நண்பர் அரைத் தூக்கத்திலேயே அரை குறையாக காதில் வாங்கிக்கொண்டு தூக்கத்திலேயே சிரித்துக் கொண்டிருந்திருப்பார் போலும்! இன்னைக்கு மாட்னான்டா என்று.

விலை தான் ஒரு ஐநூறு என்றார்கள் இருவரும். இதனால் துணுக்குற்ற நான் சற்றே ஜகா வாங்க, சீனிய்ர் உடனே கிடைத்த ஒரு "ஸ்மைலிங் மவுத்" காரன (இளிச்ச வாயன தான் கொஞசம் நாகரிகமா சொல்றேன்) விட்டு விடக்கூடாது என்று கம்பெனி டிஸ்கவுண்ட் என்ற பாணஸ்திரத்தை எடுத்து விட்டார். ஒரு நூற்றைம்பது உடனடி தள்ளுபடியாகக் கிடைக்க உடனே பணத்தைக் கொடுத்து அந்த ஷேவிங் ரேஷரை எனதாக்கிக் கொண்டேன்.

ஒன்றை வாங்கி அவர்களுக்கு உதவி விட்டோம் என்று எனது தயாளத் தன்மையை நினைத்து கஷ்டப்பட்டு நானே எனது முதுகில் தட்டிக் கொண்டேன்.

சரி கிளம்பி விடுவார்கள் என்று பார்த்தால், சீனியர் திரும்பி ஆரம்பித்தார். இன்று சனிக் கிழமை, தமிழ்நாட்டுக்காரர்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்கள். இன்னொன்று வாங்கி யாருக்காவது கிஃப்ட் கொடுக்கலாம்ல என்றார். போர்வைக்குள்ளிருக்கிற நண்பரைக் காண்பித்து அவருக்குக் கூட கொடுக்கலாம் என்றார். ஆஹா நம்பள பாத்தா இவனுக்கு ரொம்ப நல்லவனா தெரியுது போல என்று எனது பொருளாதார நிலைமையை சுருக்கமாக விளக்கி வெளியேற வைத்தேன்.

போனவுடன் கதவைத் தாளிட்டு மெதுவாக அந்த மெஷினை ஆன் செய்து என் கன்னத்தில் படற விட்டேன். ஒரு வாரமாக வளர்ந்திருந்த தாடி ஆகையால் எந்திரம் மிகவும் கஷ்டப்பட்டது. இந்த வேடிக்கை எல்லாம் நமது நண்பர் போர்வைக்குள்ளிருந்தே கவனித்திருக்கிறார். திடீரென்று மெஷின் தனது மூச்சை நிறுத்தியது.
ஆனால் அது கவ்விப் பிடித்திருந்ததோ எனது தாடியை!

மெஷின் ஆனும் ஆகமாட்டேன் என்றது. முடியை இழுக்கும் வலியைப் பொறுக்க முடியாமல் ஒசாமா பின் லேடனை நேருக்கு நேர் ஜார்ஜ் புஷ் பார்த்ததற்கு இணையாக நான் பெருங்குரலெடுக்க, போர்வையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தார் எனது நண்பர். என்னைப் பார்த்தவுடன் அவருக்கு சிரிப்பு தான் வந்தது. நான் நின்ற கோலம் அப்படி. தலையை சற்றே சாய்த்து வைத்து கண்ணாடியையும் பார்க்க முடியாமல் நான் நிற்க, ஏதோ வழி தெரியாமால் பறந்து வந்த சிறிய ரக விமானம் என் கன்னதில் தரையிரங்கியதைப் போல் சற்று முன் வாங்கிய மெஷின் ஜம்மென்று நின்று குத்திட்டு நின்றுக் கொண்டிருக்க அவரது முதல் ரியாக்ஷ்னாக சிரிப்பைத் தவிர வேறு எதுவும் எதிர்ப்பார்ப்பதில் நியாயமில்லை.


அவரும் சற்று முயற்சித்துத் தோற்றவுடன், விமானத்தை வழங்கிய அந்த இருவரும் இருக்கிறார்களா என்று பார்த்து வருகிறேன் என்று சென்றார். இதற்கிடையில் எனது கற்பனைக் குதிரை சிறகுகளே இல்லாமல் பறக்க ஆரம்பித்தது, இப்படியாக...

ஒரு பத்து வருடம் கழித்து நாளிதழ்களுடன் ஞாயிறு தோறும் வரும் இலவச இணைப்புகளின் ஒரு பக்க செய்தி ஆகிவிடுவேனோ? "சேவிங் ரேஷருடன் வாழும் அபூர்வ மனிதன் - கவர் ஸ்டோரி" என்று?

தாடி வளர வளர ஷேவிங் ரேஷரும் இன்னும் தொங்க ஆரம்பித்து விடும், அதை எப்படி தாங்கிப் பிடிப்பது?

சாப்பிடும் போதும் தூங்கும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை என பட்டியல் போட்டுக் கொண்டிருந்தேன்.

எனது அபரிதமான கற்பனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக நண்பர் வந்தார் ஆனால், அந்த ஆட்களைத் தான் காண முடியவில்லை. மீண்டும் முயன்ற எனது நண்பர் எப்படியோ நாசூக்காக ஒரு கத்திரியின் உதவியுடன் சில மணித்தியால ஷேவிங் ரேஷர் சிறையிலிருந்து விடுதலைக் கொடுத்தார்.

அதற்குப் பிறகு அந்த மெஷினை அந்த அட்டைப் பெட்டியிலேயே சிறைப் பிடித்திருக்கிறேன் இன்று வரையிலும். தனது தவறை உண்ர்ந்து அந்த மெஷின் பெட்டிக்குள்ளாகவே கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கக்கூடும்.

கும்ப மேளா - அவர் வருவாரா? நித்யானந்தா ...?

Wednesday, March 03, 2010
மார்ச் 4ந்தேதி கும்பமேளாவுக்கு ரெடியான நித்யானந்தாவை அநியாயமாக முன்னாடியே அம்பலப்படுத்தி அவர தலைமறைவாக வைச்சிட்டாங்க. தலைமறைவான இராஜசேகர் அது தாங்க "பரமஹம்ஸ நித்யானந்தா" (:)!)...

தன்னுடைய வெப் சைட்டில் (http://www.dhyanapeetam.org/web/Kumbamela2010_USAschedule.asp) போட்டுள்ளது போல கும்ப மேளாவுக்கு தனது பக்த கோடிகளுடன் அவர் வருவாரா? ரஞ்சிதாவும் கூட வருவாங்களா? நாளைக்கு மத்தியானம் ப்ரஸாந்தி எக்ஸ்பிரஸில் போகப் போறதா போட்ருக்காங்க! ஆசி வாங்கனும்னா நாளைக்கு பெங்களூர் சிட்டி ஸ்டேஷனுக்குப் போகும்படி பக்த கோடிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெரிதாக பார்க்க இமெஜின் மேல் சொடுக்கவும்

Labels: , ,