அமிழ்து: ஒரு மாலை வேளையும், மயங்கிய வாகனமும்!ஒரு மாலை வேளையும், மயங்கிய வாகனமும்!மாலை ஆறு மணிக்கு மேல் பீன்யா பகுதியிலிருந்து கிளம்பி நாகவரா-விற்கு திரும்ப நினைத்த போது, என்னுடைய இரு சக்கர வாகனம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. "ஆட்டோ ஸ்டார்ட்" பட்டனை அமுக்கினால் காச நோய் வந்தவரின் கடைசி இருமல் போல இருமி விட்டு அடங்கியது. "ஆட்டோ ஸ்டார்ட்" தன்னால் எதுவும் முடியாது என்பதை உறுதி செய்ததால், "கிக்"கரை முயற்சி செய்யலாம் என்று கிக்கரை தேடினான்.

கிக்கர் கிடைத்தவுடன் காலால் ஏறி மிதிக்க ஆரம்பித்தேன். மிதித்தேன் மிதித்தேன் நான் டயர்டாகும் வரை மிதித்தேன். ஆனால், நியூட்டனின் மூன்றாம் விதியை தவறு என நான் முடிவு செய்யும் தருணமாகவே அது அமைந்தது. வண்டியிடமிருந்து எந்த ரியாக்ஷ்னும் இல்லை.

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன், பாஞ்சு அடிச்சு பத்தரை டன் என்று சிங்கம் ஒன்று, இரண்டு என பஞ்ச்-களை உறுமிக் கொண்டே உதைத்தாலும் நாம் என்ன சூர்யாவா இல்லை, அது தான் என்ன சிங்கம் வில்லன்களா... தான் எதுவுமே செய்யாதது போல் நிற்கும் கரகாட்டக்காரன் "நாதஸ்" போல முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தது. எனக்கிருக்கும் தம்மாத்துண்டு வாகனவியல் அறிவை வைத்துக் கொண்டு ஒரு பெரிய அதிசயத்தை நிகழ்த்த முயன்று கொண்டிருந்தேன்.

இந்த விளையாட்டில் ஒரு அரை மணி நேரம் கழிந்து விட்டது. நன்றாக இருட்ட ஆரம்பித்தது. ஞாயிறு வேறு. எங்காவது மெக்கானிக் ஷாப் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தேன். இருந்தாலும் இந்த ஞாயிறு மாலை நேரத்தில் திறந்திருப்பார்களா என்பதுவும் சந்தேகம்.  இப்பொழுது எனக்கு எந்த பிரச்சினையும், காஷ்மீரிலிருந்து  காவிரி வரை எதுவுமே பிரச்சினையாகவே தெரியவில்லை. எனது இரு சக்கர வாகனத்தை உயிர்பிப்பது தான் நாட்டின் தலையாய பிரச்சினையாக தோன்ற ஆரம்பித்தது. 108 ஆம்புலன்ஸ் போல, இது போன்ற இலவச  வசதியை சாலையில் நிற்கும் வாகனங்களுக்கு 118 என்றோ 119 என்றோ ஒரு எண்ணைக் கொடுத்து எக்ஷ்டண்ட் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

இந்த யோசனையிலேயே கொஞ்ச தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போதே ஒரு கடை கண்களில் பட்டது. எதிர்பார்த்ததைப் போல தமிழரின் கடை தான். விசயத்தைச் சொன்னதும், தான் சிறிது நேரம் இருப்பதாகவும் வண்டியைத் தள்ளி வரும்படி கூறினார். என்னை விட கிட்டத்தட்ட ஒன்றே கால் மடங்கு கூடுதலாக இருக்கும் வண்டியையும் கூடவே என்னுடைய எடையையும் சேர்த்து திரும்பவும் கடைக்கு வந்து சேர்ந்தேன்.

கைதேர்ந்த மருத்துவர் போல பார்த்தவுடனேயே பிரச்சினையைக் கண்டறிந்து விட்டார். நாளை தான் கிடைக்கும் என்றார். அவரிடம் "ஐயன்மீர், நான் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டும், ஆதலால் இப்பொழுதே ஏதாவது செய்யுங்கள் என்றேன்" உட்சபட்ச மரியாதையுடன். என்னுடைய கோரிக்கையை ஏற்ற அவர் சற்றே முயன்று ஸ்டார்ட் செய்து விட்டார். ஆனால் மென் பொருளாளர்கள் "நோன் இஷ்யு" என்று சொல்லியே மென் பொருட்களை வெளியிடுவது போல, நான் ஸ்டார்ட் எடுத்துக் கொடுப்பேன் நீங்கள் எங்கும் நிற்காமல் சென்று விடுங்கள். நடுவில் எங்காவது நின்று விட்டால், திரும்பவும் எடுக்க முடியுமா என்று கியாரண்டி இல்லை என்று சொல்லி விட்டார்.

ஒரு பக்கம் சந்தோசம் என்றால் இன்னொரு பக்கம் ஒரு சவாலையும் வைத்து விட்டார். வண்டியை எடுத்து விட்டேன். சிறிது தூரம் சென்றவுடன் ஸ்பீட் படத்தின் மூன்றாம்  பாகத்தில் நானே நடிப்பது போல உணர ஆரம்பித்தேன். தென் மேற்கு பருவக் காற்றின் கைங்கரியத்தால் பொத்தலாகிப் போன சாலையின், ஒவ்வொரு குழியிலும் ஏறி இறங்கும் போதும் மெக்கானிக் வார்த்தைகள் ஞாபகம் வந்த வண்ணம் இருந்தது. அந்த வழியில் பல முறை வந்திருக்கிறேன்... ஆனால், எப்பொழுதுமே என் கன்ட்ரோல் இல்லாமல் வண்டி நின்றதில்லை. இருந்தாலும், ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சாலையோர மரங்களும், கடைகளும் பின்னோக்கி செல்லச் செல்ல எனது பயமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து, வீட்டை அடைந்தவுடன் பூஜ்ஜியமாக ஆனது.

ஒரு வழியாக வண்டியை நானே ஆஃப் செய்து விட்டு வீட்டுக்குள் போக நினைக்கும் போது, மெக்கானிக் சொன்னது சரிதானா என சோதித்துப் பார்க்க தோன்றியது... சாவியைத் திருகி, ஆட்டோ ஸ்டார்ட் பட்டனை அமுக்கியவுடன் வண்டி மீண்டும் கரகாட்டக்காரன் நாதஸ் போஸுக்கு மாறியது!

Labels: ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

4 Comments:

At 11:54 PM, Blogger Shals said...

Hmm.. Nice.. I liked it :-)

 
At 11:55 PM, Blogger Shals said...

Nice.. I liked it.. :-)

 
At 11:55 PM, Blogger Shals said...

Nice. I liked it :-)

 
At 5:44 AM, Blogger Sasi said...

Nice....

 

Post a Comment