அமிழ்து: "பேஸ்புக் போராளி" (அல்லது) வடை போகல (அல்லது) தட்டிக் கேட்டால் வடை கிடைக்கும்!"பேஸ்புக் போராளி" (அல்லது) வடை போகல (அல்லது) தட்டிக் கேட்டால் வடை கிடைக்கும்!

வடை போகல (அல்லது) தட்டிக் கேட்டால் வடை கிடைக்கும்!இன்று இரவு உணவு எங்கே சாப்பிடலாம் என்று நினைத்த மாத்திரத்திலேயே சாந்தி, ஸ்ரீநிதி, அடிகாஸ் என்று சாகர்களிலேயே பல நாட்களாக சாப்பிட்ட எனது நாக்கு, வெகுண்டெழுந்து வர மாட்டேன் என மக்கர் செய்ய...
திறந்து பல நாட்களாகியும் நமது கால் தடம் படாத கம்மனஹல்லி அடையார் ஆனந்த பவனுக்குச் சென்று விடுவது என்று முடிவு செய்தேன்.

வழக்கம் போல என்ன சாப்பிடுவது என்றுத் தெரியாமல் "மெனு" கார்டைப் பார்த்து முறைக்க, அது என்னை முறைக்க, இதற்கிடையில் அந்த "மெனு" கார்டை கைப்பற்ற இன்னொருவர் துடிக்க, சரி எதற்கு வம்பென டக்கென்று கண்ணில் பட்ட "மினி டிபன்" என்றுவிட்டேன். மினி டிபன் என்பது இட்லி, வடை, கேசரி, பொங்கல், மினி மசாலா தோசை ஆகியவற்றை  உள்ளடக்கியது. சுளையாக அறுபது ரூபாயைக் கொடுத்து விட்டு துண்டுச் சீட்டை வாங்கினேன்.

கர்மசிரத்தையாக இன்னொரு வரிசையில் நின்று அந்த சீட்டுக்கு 48 என்ற நம்பரும் எழுதி வாங்கிக் கொண்டேன் அவர்களது ப்ராசெஸ் படி. இது வரை எல்லாம் சுகமே.

இதற்கிடையில் என்னைப் போன்று "மினி டிபன்" சொல்லிவிட்டுக் காத்திருந்தவர்களுக்கு அவர்கள் கொடுத்தத் தட்டுடன் அதிர்ச்சியும் சேர்ந்து வந்தது... மினி வடை தீர்ந்து விட்டதால் அதற்கு பதிலாக "கார பாத்" வைத்திருந்தார்கள். சிலருக்கு கார பாத் பிடித்திருந்தது போல, சத்தமில்லாமல் வாங்கிச் சென்று விட்டார்கள். சிலர் அங்கே இருந்த பெரிய வடையைச் சுட்டிக்காட்டிக் கேட்க, இது ரெகுலர் வடை, மினிக்கு மினி வடை தான் என்றார்கள்.

அடுத்த மினியை வெளியே அனுப்பவதற்கான முஸ்தீபுகளில் இறங்க ஆரம்பித்தார் சப்ளையர். எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு மினி மாசலுக்காக காத்திருந்தது அந்தத் தட்டு. சுற்றிலும் யாரும் இல்லாததால் அந்த மினி எனக்கே எனக்கானது என்று நானும் மசாலை எதிர்பார்த்து சமையலறை வாசலில் எனது பார்வையை நிலைக் குத்தியிருந்தேன்.

இப்பொழுது இன்னொருவரும் மினிக்கான டோக்கனை கொண்டு வந்துக் கொடுக்க அவரது நம்பர் 51 என்றானது. மினி டிபனுக்கு இப்போது போட்டி உருவானது. எதெற்கெல்லாமோ மனசாட்சி என்பார்கள்... ஆனால், இப்போது எனது மனசாட்சி முதலில் வரும் மினி டிபன் உனக்குக் கிடைக்காது என்றுக் கொக்கரித்தது. நானோ, "நான்" எப்படியும் வாங்கி விடுவேன் என்று அதனிடம் சவால் விட்டேன்.

51 -ம் நம்பர்காருக்கு இட்லி பிடிக்காது போலும்...அதற்கு பதிலாக முன்பு பலரும் கேட்டுத் தோற்றுப் போன அந்த வடைக் கிடைக்குமா என்று கேட்டார். சப்ளையர் சற்றே நக்கலாக இட்லிக்கு வடை மாற்றா என்று பட்டிமன்றத் தலைப்பைப் போலக் கேள்விக் கேட்டுவிட்டு 51 -ன் முகத்தைப் பார்த்தார்.

51, இப்போது சலிக்காமல் கடையிலிருந்த பலவற்றையும் கேட்டுப் பார்த்தது. கடைசியில் சப்ளையரே சலித்துப் போய் ஒரு கரண்டி வெஜ் பிரியாணியை வைத்து விட்டு, 51 -ன் இட்லி எதிர்ப்புக்கு சற்றே முற்றுப் புள்ளி வைத்தார்.

இவரது கான்பிகரேஷன் வித்தியாசமாக இருந்ததால் அடுத்த மினி எனக்குக் கிடப்பதில் சிக்கல் இல்லை என்று இறுமாந்திருந்தேன்.

இப்பொழுது இரண்டு மினி தோசைகள் வந்தது... நல்லது, எந்தப் போட்டியும் இல்லை. முதலில் 51 -க்கு வைத்தால் கூட உடனடியாக நமக்கும் கிடைத்துவிடும் என்பதாலும் எனது "நானுக்கும்" மீசையில் மண் ஒட்டப் போவதில்லை என்பதாலும் சிறிது மகிழ்ந்திருந்தேன்.51 -க்கு தோசையையும் வைத்து அனுப்பி விட்டார்கள்.

ஆனால் கண நேரத்தில் எங்கிருந்தோ வந்த சிறுவன் 49 என்று சொல்ல, சப்ளையரும் தோசையின் மேலிருந்த துண்டுச்சீட்டை சரிப் பார்த்து அந்த மினியை 49 -க்குக் கொடுக்க ... நான் ஒரு பத்து நிமிடமாகப் பார்த்துப் பார்த்து வைத்திருந்தது  இப்பொழுது ஒரு சிறுவனின் வயிற்றினுள்  ஐக்கியமாவதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. உள்ளே மனசாட்சி வேறு சலங்கை கட்டிக் கொக்கரிக்க... எனக்குள்ளிருந்த "பேஸ்புக் போராளி" உயிர்த்தெழ ...நியாயத்தைத் தட்டிக் கேட்க ஆரம்பித்தேன்.

உங்கள் ஊரில் 48 யை விட 49 -உம், 51 -உம் தான் சிறிய எண்களா?
நீங்கள் எழுதித் தந்த டோக்கனை நீங்களே மதிக்கவில்லையே என்று சில அறிவு, உணர்வு மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல கேள்விகளை சரமாரியாக கேட்க, அங்கிருந்த மேலாளர் ஒரு ரெண்டு நிமிடம் சார், வந்து விடும் என்றார்.

ஆங்கிலத்தில் சொல்லுவது போல் லிட்டரலாக அங்கிருந்த மேசையின் மேல் தட்டிக் கேட்டு எனது வாதத்தினை முடித்தேன்.

இப்பொழுது எனது மனசாட்சியும் இல்லை, "நானும்" தன்னிடத்தை "வெக்கேட்" செய்திருந்தது. எனக்கு இப்போது போட்டியாளர்களும் யாருமில்லை.

மேலாளரே இப்போது தட்டில் எல்லாவற்றையும் அடுக்கினார். ஆச்சரியமாக, பலருக்கு மறுக்கப்பட்ட அந்த வடை எனது தட்டை வந்து தஞ்சம் அடைந்தது.

மேலாளர் அந்த வடையைப் போட்டு எனது வாயை அடைக்க முனைந்தாரா தெரியவில்லை!

ஆனால்  ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம் ஆகிறது.

"தட்டிக் கேட்டால் நீதிக் கிடைக்கிறதோ இல்லையோ, வடை கிடைக்கிறது! " - வடை போகல!


« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

1 Comments:

At 3:46 PM, Anonymous Anonymous said...

ippadi ungalalum mattravaruku unavai vittu koduthu santhosathai thara mudiyum. sila samayagalil ippadi naamum kadavulaaki vidukiroam.

 

Post a Comment