அமிழ்து: இன்றைய தமிழனின் அடையாளம் தான் என்ன?



இன்றைய தமிழனின் அடையாளம் தான் என்ன?




கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி
என்றார்கள் நம் முன்னோர்கள். நமது இலக்கிய பாரம்பரியம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிலிருந்தே வருகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார். போரும், சக மனிதனைக் கூட மனிதனாக பார்க்காத, சகிப்புத் தன்மையற்ற இன்றைய 21 -ம் நூற்றாண்டின் படித்த உலகம் கொலை வெறியுடன் நர வேட்டை ஆடிக் கொண்டிருக்க, மக்கள் எல்லாம் மாக்களாக வாழ்ந்த காலத்திலேயே இப்படி ஒரு உயர்ந்த சிந்தனையை உதிர்த்தவன் தமிழன்.




து இப்படியிருக்க, சங்க காலப் பாடல்களும் நமது பெருமையை உணர்த்திய வண்ணமே உள்ளது. முறத்தால் புலியை விரட்டினால் தமிழச்சி என்றும், போரில் புற முதுகு காட்டமாட்டான் தமிழன் என்றும், அப்படியே காட்டினாலும் "வடக்கிருந்து உயிர் துறப்பான்" என்றும் எத்தனையோ இலக்கியங்கள் நமது பழம் பெருமையை பேசிய வண்ணம் இருக்கின்றன.

முற்காலமும், சங்க காலமும் இப்படியிருக்க, சற்றுமுன் நடந்த வெள்ளையர்களை எதிர்த்த போராட்டத்தில் கூட தன்னலமற்ற தமிழ்த் தலைவர்களின் பங்களிப்பிருந்தது. கொடிக்காத்த குமரன், கப்பலோட்டிய தமிழன், தில்லையாடி வள்ளியம்மை, வீரன் வாஞ்சிநாதன் என எத்தனையோ பெயர் தெரிந்தவர்கள் இருக்க, ஒவ்வொரு ஊரிலும் நமக்கு தெரிந்த தெரியாத பல தாத்தாக்கள் வெள்ளை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.



வெள்ளையர்கள் வெளியேறியவுடன் அமைந்த ஆட்சியிலும் நமக்கு தன்னலமற்ற தலைவர்கள் இருந்தார்கள். மின் விசிறி கேட்க நினைத்திருந்த அம்மாவிற்கு, அதற்கு முன்பே சொந்த ஊருக்கு அனுப்ப பயணச் சீட்டு எடுத்திருந்த முதல்வர் காமராசரைக் கண்டிருந்தது தமிழகம். தான் சமைத்துப் போடுகிறேன் என்று சொன்ன அம்மாவுக்கு "பதவியிலிருக்கும் போது சொந்தங்கள் பக்கத்தில் இருக்கக்கூடாது என்றான்" அந்த முதல்வன். அதனாலேயே காலம் முழுவதும் தனக்கென்று ஒரு சொந்தத்தையும் உருவாக்கிக் கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தான் அந்த தலைவன்.



கக்கன் என்ற அன்றைய தமிழக உள்துறை மந்திரி, தனது அந்திம காலத்தில் மதுரை மருத்துவமனையில் யாரும் கேட்பாரன்றி இருந்து பின்பு இறந்து போனார்.

இப்படியாக நமது பண்டைய, சங்க கால, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, என நமது பெருமைகளும் தனித்தன்மைகளும் எத்தனையோ இருக்கிறது. இவையெல்லாம் நமது மூதாதையர்கள் நமக்கு விட்டுச் சென்ற வெகுமதிகள். தங்களை வருத்தி தமிழுக்கும், இனத்துக்கும் தெரிந்தோ தெரியாமலோ பெருமை சேர்த்தார்கள். இவையெல்லாம் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற கூற்றுக்கு வலு சேர்த்தவை.

ஆனால், இன்று நமது நிலை என்ன? இப்போது நடப்பவை தான் நமது சந்ததியினருக்கு வரலாறு. அந்த வரலாற்றை பெருமைப்படுத்தும் வகையிலா உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு ஐம்பதாண்டுகள் கழித்து படிக்கப் போகும் நமது எள்ளுப் பேரனோ கொள்ளுப் பேரனோ நமது வரலாற்றைப் பற்றி படித்து பெருமைப் படும் வகையிலா உருவாக்கி வருகிறோம்.

நமது அடையாளம்தான் இப்போது என்ன? ஏற்கனவே தமிழன் என்ற அடையாளமிழந்து இந்தியனாகி விட்டோம். வடக்கிந்திய ஊடகங்களும், தேச ஊடகங்கள் என்று சொல்லிக் கொள்கிற ஆங்கில செய்தி அலைவரிசைகளும் சாதனை செய்த தமிழர்களை "இந்தியர்கள்" என்று பெருமைப்பட்டுக் கொள்வதும், ஆ. இராசா போன்றவர்கள் அகப்பட்டால் தமிழன் என்ற முத்திரைக் குத்தி ஒட்டு மொத்த தமிழர்களைகளையும் தலைக் குனிவை ஏற்படுத்துவதும் மறுக்கவியலாது.

சிறிது காலத்தில் இந்தியன் என்ற அடையாளத்தையும் இழந்து "உலகன்" என்ற புது பதத்தை ஏற்படுத்தினால் கூட ஆச்சர்யபடுவதற்கில்லை. சிறு நகரங்களில் கூட வளர்ந்து வரும் பீட்சா கார்னர்களும், பர்கர் கடைகளுமே இதற்கு சாட்சி.

எப்படிப்பட்ட நிலமாக இன்று தமிழ் நிலம் காட்சியளிக்கிறது?

தன்னலம் மற்றும் குடும்ப நலன் சார்ந்த தலைவர்கள் வளர்ந்துள்ள இடமாக,

உலகத்தின் ஊழல் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்த தலைவரின் இடமாக,

ஆதிக்க வெறியும் ஆணவமும் மிகுந்த தலைவர்கள் மிகுந்துள்ள இடமாக,

பதவி சுகத்திற்காக சட்டையைக் கழட்டி வைப்பது போல் தனது சுய மரியாதையை கழட்டிவைக்கும் அடிமைகளின் இடமாக,

நாடெங்கும் மதுக் கடைகள் திறந்து விட்டு தனது கல்லா பெட்டிகளை நிரப்பிக் கொள்ளும் சுய நல அரசியல்வாதிகள் பிறந்த இடமாக,

பிணத்தை எரிக்கும் சுடு காட்டில் கூட கொள்ளை அடித்த ஆட்சியாளர்கள் நிரம்பிய இடமாக,

மக்கள் வரிப் பணத்தைப் பற்றி கவலைப்படாத ஆணவம் மிகுந்தவர்கள் தலைவர்களாக இருக்கும் இடமாக,

மக்களைப் பற்றி கவலைப் படாமல் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கும் அதிகாரிகளின் இருப்பிடமாக,

தான் செய்ய வேண்டிய வேலைக்கே கையூட்டு பெரும் கயமை நிரந்த அரசு ஊழியர்கள் இருக்குமிடமாக,

வெள்ளை எதிர்ப்பு போராட்ட தாத்தாக்கள், நிறைந்திருந்த தமிழகம் இன்று ஊரெங்கும் தாதாக்கள் நிறைந்த இடமாக மாறிக் கிடக்கிறது.

இப்படி அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கமும் இருக்க, பொது மக்களாகிய நாமும் சளைத்தவர்களா?


சக மனிதனை மனிதனாகத் தான் பார்கிறோமா, அவனது பொருளாதார நிலையை மறந்து?

நமது இனம் ஈழத்தில் அழிக்கப்பட்டபோது ஒரு சிறிய அளவு எதிர்ப்பையாவது நாம் காட்டினோமா? திரும்பவும் இங்கே குறிப்பிடவேண்டியது ஈழத்தில் வாழும் தமிழர்கள், மொழியால் நம்மினமே தவிர அவர்களில் பெரும்பான்மையோர் இந்தியாவிலிருந்து சென்று நாடு கெட்டவர்கள் அல்ல. அவர்கள் ஈழத்தின் பூர்வ குடிகள். இதைப் பற்றி தெரிய வேண்டுமானால் க.ப. அறவாணன் எழுதிய "ஈழம் தமிழரின் தாயகம்" படிக்கலாம். மற்ற பல நூல்களும் கிடைக்கிறது. இந்த உண்மை எத்தனை தமிழர்களுக்கு தெரிந்திருக்கிறது?

தனது இனத்தில் ஒருவனுக்கு ஒரு துயரம் என்றால் யூத சமூகமே எழுந்து நிற்கிறது. பத்துவருடங்கள் நடந்த ஆப்கானிய இரஷ்ய போருக்காக இஸ்லாமிய வீரர்களை நாடு கடந்து பாடு பட வைத்தது. ஆனால் நாம் சிறு கரிசனையாவது காண்பிக்கிறோமா?

சக மனிதனின் உயிருக்கு நமது சமுதாயத்தில் மதிப்பிருக்கிறதா? சாலை விதிகளை மதிக்கிறோமா? நோயினால் ஏற்படும் உயிரிழப்பை விட இன்று யாரோ ஒருவர் மதிக்காத சாலை விதியினால் மற்ற குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்பு எவ்வளவு பெரியது?

நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் சுய ஒழுக்கம் முன்னுக்கு வருகிறதா அல்லது தன்னலம் முன்னுக்கு வருகிறதா?

எங்கும் அவசரம், சாப்பாட்டு கடையில் ஆரம்பித்து சாலை வரை. முன்னால் ஒரு மனிதன் இருந்தால் கூட அவனை இடித்து தள்ளியோ, அவன் காணாத போதோ அவனை எப்படி முந்திச் செல்வது என்பதே யோசனையை இருக்கிறது. சக மனிதனுக்கும் அவனது நேரத்துக்கும் மதிப்பளிக்காத ஒரு இடமாக இருக்கிறதே.



கையூட்டைப் பற்றி வாய் கிழிய பேசும் நாம், போக்குவரத்து காவலரிடம் ரூபாய் நூறு கொடுத்து ரசீது வாங்காமல், ஐம்பது கொடுத்து முடித்ததை பெரும் சாதனையாக்கும் சமுதாயமாக அல்லவா உருவாகியிருக்கிறோம்.



திரைப்பட நடிகர்களை அத்துறையில் முன்னேற்றி, பின்பு அரசியலுக்கு வரவைத்து ஆட்சிக் கட்டிலிலும் அமரவைத்து அழகு பார்க்கும் தமிழ்ச் சமூகமாக அல்லவா உருவாகியிருக்கிறோம்.

தனது விருப்பத்திற்குரிய நடிகனின் திரைபடத்திற்காக தனது குடும்பத்தைக் கூட பட்டினி போடும் தமிழ் விசிலடிச்சான்குஞ்சுகள் வாழும் இடமாக அல்லவா மாற்றியிருக்கிறோம்.

தனது சௌகரியத்திற்காக விளைநிலங்களை மனைகளாக்கும் கொடூரம் நம்மை எங்கே கொண்டு நிறுத்தப் போகிறதோ? ஆண்டுக்காண்டு 45 % தமிழகம், நகரமாகிக் கொண்டுவருவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது பெருமைப் படும் விதமாக தெரியவில்லை. கிராமங்கள் வளர வேண்டும் என்பதற்கு கிராமங்கள் நகரங்கள் ஆக வேண்டும் என்பதல்ல பொருள்.

மற்ற இனக்குழுக்களும் அப்படி தானே இருக்கிறது என்ற கருத்து வைக்கப்படலாம். இந்த கேள்வி எழுவதை நமது பெருமையை நாம் உணராமல் இருப்பதையே வெளிப்படுத்துகிறது.
அடையாளங்களை நாம் ஏன் சுமக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்.

அடையாளங்கள் நமது பாரம்பரியங்கள். நமது தாத்தாவின் சொத்து நமக்கு கிடைத்தால் நமக்கு சந்தோசம் தானே. அது போல் தான் அவர்கள் சேர்த்து வைத்த பெருமைகளும். அப்பெருமைக்கு பெருமை சேர்க்க முடியாவிட்டால் கூட, சேதாரம் ஆகி விடாமல் காக்க வேண்டியது நமது கடமையே.

இந்த கட்டுரையின் நோக்கம் அடையாளம் அறிந்து நம்மை இந்தியா என்ற பல்லினக்கூடம் வாழும் நாட்டில் நம்மைத் தனிமைப் படுத்திக் கொள்ள அல்ல, நமது தனித் தன்மையை நாம் எப்படி இழந்து நம்மை நாமே சிறுமைக்குள்ளாக்கிக் கொள்கிறோம் என்பதை விவாதிப்பதற்கே. அக்குழுக்களிலும் நமது பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. அனால் நாம் அவர்களிடமிருந்து எப்படி தனித்தன்மையுடன் வேறுபடுகிறோம் என்பதே பெருமைக்குரிய விடயம்.

நமது இலக்கிய வளத்தையும், நாம் வந்த வழியையும் பார்த்து விட்டு நமது இன்றைய நிலையை நோக்கும் போது, நமது கண்முன்னே "தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து கொள்ளடா" என்ற பேற்றை நமது சந்ததியினருக்கு கொடுத்து விட்டு செல்லக் கூடாதே என்பதின் ஆதங்கமே இந்த எழுத்து.
« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

0 Comments:

Post a Comment