அமிழ்து: April 2007



அழகுச்சங்கிலி

Wednesday, April 11, 2007
குறைக்குடம் அழகுச் சங்கிலியில் என்னையும் இணைத்துள்ளார், நான் அழகாய் நினைத்திருப்பவைகளைப் பற்றி ஒரு முறை யோசிக்கவைத்ததற்கு நன்றி!

எனக்கு அழகாய்ப் படுவது எது என யோசிக்கையில் இயற்கையழகுகள் தான் மேலோங்கி நிற்கிறது.

தங்கமாய் மாறும் சூரிய கதிர்கள்!
சிறு வயதில் கோடை விடுமுறைக்கு திருச்சி முக்கொம்பு அருகிலுள்ள ஊருக்குச் செல்வோம்! கோடை மாலையில் குளியாலாட அங்கும் இங்குமாய் ஆரவாரமற்று ஓடி வரும் காவிரிக்குச் செல்வோம்... தன் கடமையை அன்றும் செவ்வனே முடித்துவிட்ட திருப்தியுடன் வீட்டுக்கு திரும்பும் சூரியனார் தன் கதிர்களை தண்ணீரில் பரப்பி தங்கமாய் மாற்றும் அழகே அழகு! பார்த்துக் கொண்டேயிருக்கலாம்!

அடை மழை!
சிறு தூரல் நச நச...! பெரு மழை குளு குளு! பேருந்தின் உள்ளே கண்ணாடி போட்ட ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டோ மாடி வீட்டின் மாடத்திலிருந்தோ பார்க்கும் போது பெய்யும் அடை மழை அழகோ அழகு!

யானை நடை!
தூண் போன்ற நான்கு கால்களையும் தூக்கி தூக்கி, காதுகளை ஆட்டி வரும் யானையின் அசமந்தமும் அழகே அழகு! சிறு வயதில் வீடு தேடி மணியோசையோடு வரும் யானை என்றுமே அழகு தான்! யானைப் போன்று நடந்து வரும் மனிதர்களைப் பார்ப்பதும் எனக்கு அழகாகவே தெரிகிறது :))

அதிகாலை நகரத்து சாலைகள்!
பகல் நேரங்களில் பர பரத்துக் கிடக்கும் நகரத்துச் சாலைகள் அமைதியாய் அதிகாலையில் இளைப்பாறும் அழகு அருமை. இதற்காகவே பல நாட்கள் எனது அதிகாலைத் தூக்கத்தை துறந்துள்ளேன்.

கிராமத்து வயல்வெளி
நீண்டு செல்லும் மண் சாலையும், அதனை ஒட்டியே நெல் வாசனையோடு கூடவே வரும் வயல்வெளியும் எனக்கு என்றும் மாறா அழகு. உம்ம்ம்... ஆனால் இப்பொழுதெல்லாம் அது போன்ற கிராமங்களுக்கு சென்று ரொம்ப நாளாகிறது.

பயணம்!
பயணம் எப்போதுமே எனக்கு அலாதியான அழகுதான். புது மனிதர்கள், புது சாலைகள்.... வண்டியின் ஜன்னல் நொடிக்கொருமுறை அள்ளித் தெளிக்கும் காட்சிகள் அழகே அழகு!

நான் இந்த அழகுச் சங்கிலிக்கு அழைக்க நினைப்பது
1. மு. கார்த்திக்கேயன்
2. துளசி கோபால்
3. நாமக்கல் சிபி

Labels: ,

உதவித் தேவை - தமிழ் மனங்களுக்கு வேண்டுகோள்!

Thursday, April 05, 2007
சிறு வயதில் போலியாவால் பாதிக்கப்பட்டாலும் தன்னம்பிக்கைப் பாதிக்கப்பட்டாத திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஜெனித்தா செஸ் விளையாட்டில் தேசிய, மாநில, மாவட்ட போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். இவரைப் பற்றி வார இதழ்களும், நாளேடுகளும் எழுதியுள்ளன.
ஊனமுற்றோருக்கான உலக செஸ் போட்டியில் கலந்து கொள்ள ஜெனித்தா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு இப்போது சவாலாக இருப்பது எதிரே விளையாடப்போகும் போட்டியாளரோ, தன்னுடனே இருக்கும் ஊனமோ அல்ல. "பணம்".

ஆம், அவர் இப்போட்டிக்காக வருகிற மே மாதம் போலந்து செல்ல வேண்டும். இதற்கு ரூ. 1,75,000 (ஒரு உதவியாளருடன்) தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடரசின் உதவிக்காக அமைச்சர்களையும் சந்திக்கவிருக்கிறார்கள். இந்நிலையில் திருச்சியிலிருக்கும் நண்பன் மூலமாக எனக்குக் கிடைத்த தகவல்களை இங்கு தந்துள்ளேன்.
வாசிக்கும் உள்ளங்கள் உதவும் என்ற நம்பிக்கையோடு வங்கி விவரங்களை இணைத்துள்ளேன். உங்களுக்கு மேலும் தகவல் தேவைப்படின் பின்னூட்டமிடுக.
அவரது தந்தையின் கைப்பேசி எண் +91-9367790793 (G. KANICKAI IRUDAYA RAJ)

வங்கிக் கணக்கு எண் : 10322416465
வங்கி: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)
கணக்கு வைத்திருப்போர் பெயர்(Joint account): K. JENNITHA ANTO and her father G. KANICKAI IRUDAYA RAJ


Labels: , , , ,

நிலவில் பாட்டி வடை சுடுகிறாரா?

Sunday, April 01, 2007

ஆமாங்க சுடுது தான் போலிருக்கு! நேத்து நைட்டு தூக்கம் வராம வீட்டுக்கு வெளிய எட்டிப்பார்த்தப்பத்தான் தெரிஞ்சது நம்மள தவிர இன்னொருத்தரும் முழிச்சிருக்காருன்னு... யாருமில்ல நம்ம நிலா சாரு தான்...

ரொம்ப நாள நானும் பாக்கிறேன் அவரு மட்டும் அப்படியே இருக்காரு... அப்ப அப்ப காணாமப் போனாலும் "gun" மாதிரி அண்ணன் திரும்பி வந்தர்றாரு. கூடவே பாட்டியும் வந்திருது... இன்னைக்கும் பாட்டி எண்ணெய் சட்டியோட உக்காந்திருக்கு... பாட்டி வடை சாப்பிடுறியானு கேக்குற மாதிரி இருந்துச்சு...
நல்ல வாசனை வேற! இருந்தாலும் வேணாமுன்னு சொல்லிட்டேன்...

"local"-ல வடை சாப்பிட்றப்பவே வயிறு மூணு நாளைக்கு தூங்க மாட்டேங்குது... இதில "மூன் "-லேர்ந்து வடை வாங்கி சாப்பிட்டு அதுனால எதுனா பிரச்சினையானா டாக்டர்ட்ட கூட சொல்ல முடியாது "மூன் பாட்டி" கொடுத்த வடையினால தான் பிரச்சனையினு. ஆமா அவரு மட்டும் என்ன நம்பவா போறாரு...

அதனால பாட்டிக்கிட்ட வடையெல்லாம் வேணாம் நீ சில விசயங்கள மட்டும் தெளிவு பண்ணுனு சொல்லிக் கேட்டுகிட்டேன். பாட்டியும் பெரிய மனசு பண்ணி அது பிறந்து வளர்ந்த கதையிலிருந்து, வடை சுட்ற வரைக்கும் சொல்லி முடிச்சுது.

பாட்டி பொறந்தது வளர்ந்தது எல்லாம் மூன்லேயே தானாம். பாட்டி, பாட்டின்றதால அதுக்கு அது அம்மா, அப்பாவப் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியல... ஆனா ஒரு விசயம் மட்டும் அதுக்கு ஞாபகமிருக்கு... அதுக்கு எண்ணெய்ச் சட்டி அடுப்பெல்லாம் கொடுத்து தொழில் ஆரம்பிச்சுக் கொடுத்தவரு நம்ப ஆம்ஸ்ட்ராங் தானாம்.

பாட்டி, ஆம்ஸ்ட்ராங் அங்க போறப்ப சும்மா ரோமிங்கில இருந்திருக்கு... ஆம்ஸ்ட்ராங் கடுப்பாயிருக்காரு... என்னடா நம்ப அவ்வளவு தூரத்திலிருந்து இங்கே வந்திருக்கோம், நமக்கு ஒரு சிங்கிள் வடைக் கூட சுட்டுக் கொடுக்காம இது பாட்டுக்கு சுத்திக்கிட்டு இருக்குனு. அன்னைக்கு முடிவுப் பண்ணிட்டாரு... பாட்டிக்கு கால் கட்டு போட்றனுமுனு.

ஒரு அடுப்புயும் அட்வைஸையும் பண்ணி கடை ஆரம்பிச்சுக் கொடுத்திருக்காரு. அவரு கிளம்பறப்ப ஒரு வார்த்தை சொல்லியிருக்காரு... நான் வந்துட்டேனில்ல... இனிப் பாரு எல்லாம் கூட்டம் கூட்டமா வருவானுங்கனு. அத நம்பித்தான் பாட்டி இன்னும் வடைக் கடைய மூடமாயிருக்காம்.

பாட்டிக் கதை சொல்லி முடிக்க, பக்கதிலே கோயில் மணிச்சத்தம்... மணியப்பாத்தா காலைல ஏழு...

அய்யகோ! எனக்கு மட்டும் ஏன் கனவுல கூட "பாட்டி" வந்து கதை சொல்லிட்டுப் போகுது!

Labels: , ,