அமிழ்து



"தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்"



க்ரியா பதிப்பகம் 2004 -ல் மொழிப் பெயர்த்து
(தமிழில்: வெ. ஸ்ரீராம்) வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சமூகவியல் சிந்தனையாளர்களில் ஒருவரான பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பியர் பூர்தியு அவர்களின் "தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்" என்ற புத்தகத்தை க்ரியாவின் இணையதளத்தின் மூலம் ஒரு மாதம் முன்பு வாங்கினேன்.

நூற்று சொச்சப் பக்கங்களே இருந்தாலும் இந்தப் புத்தகத்தை இன்னும் முடிக்க முடியாமல் இருக்கிறேன். புத்தகத்தின் கருத்துச் செறிவு அப்படி. ஒரே பக்கத்தை ஒரு முறைக்கு பல முறை படிக்கிறேன். இது தொலைக்காட்சி என்ற கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ்ச் சூழலில் இது அச்சு ஊடகத்திற்கும் பொருந்துகிறது.

1996 ல் முதலாவதாக பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில் பியர் பூர்தியு கூறியுள்ள கருத்துகள் தற்கால தமிழகத்தின் அச்சு மற்றும் காட்சி ஊடகத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறது. அதைச் சற்றே இந்தக் காலத்து தமிழ் சூழலுக்குப் பொருத்திப் பார்க்கிறேன்.

பியர் பூர்தியுவின் சில கருத்துக்களும், தமிழ்ச் சுழலுக்குப் பொருத்திப் பார்த்தலும் ...

பியர் பூர்தியு: 
 
"கவலைப்படாமலேயே நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள ஒப்புக்கொள்வதன் மூலம் எதையும் சொல்வதற்காக அவர்கள் அங்கு இருக்கவில்லை என்பதையும், ஆனால் வேறு பல காரணங்களுக்காக, குறிப்பாக, தங்களைக் காண்பித்துக் கொள்ளவும் மற்றவர்களால் பார்க்கப்படுவதற்காகவும் தான்..." இருத்தல் என்பது மற்றவர்களால் பார்க்கப்படுவதுதன் என்று பெர்க்லி-யை மேற்கோள் காட்டுகிறார். தொலைக்காட்சித் திரை சுயமோகிக்கான ஒரு நார்சிசஸ் கண்ணாடியாக, சுயமோகத்தைக் கண்காட்சிப்படுத்துவதாக இன்று ஆகிவிட்டது.

தமிழ்ச் சூழல்:  
 
இதை நமது தமிழ் ஊடகங்களில் வரும் கருத்துச் சொல்லிகளைப் பொருத்திப் பார்க்கலாம். தமிழ்ச் சூழலில் திரும்பத் திரும்ப ஒருவர் தனது முகத்தைக் காட்ட பிரயத்தனம் செய்ய வேண்டியதில்லை... நீயா நானா போன்ற நிகழ்சிகளில் அழைக்கப்படும் பிரபல்யங்களைத் தவிர நன்றாகப் பேசும் கூட்டதிலிருப்போருக்கும் இந்த வாய்ப்பு கிட்டுகிறது. இவர்களால் எந்த ஒரு விடயத்துக்கும் நேரிடையாகவோ அல்லது எதிராகவோ பேச முடியும். இங்கு கொள்கை, கருத்து என்பதெற்கெல்லாம் முக்கியத்துவம் இல்லை... முகங்காட்டுவதே முக்கியமாகிறது...

பியர் பூர்தியு: 
 
எல்லோருக்கும் முக்கியமானது போல் இருக்கும் விஷயங்கள் மீது கவனத்தைத் திருப்புவது. இவற்றை ஆம்னிபஸ்  தகவல்கள் என்று சொல்லலாம். இந்த தகவல்கள் யாரையும் திடுக்கிடவைக்காதவை; கட்சிப் பிரிக்காதவை; ஒப்புக் கொள்ளும் தன்மை கொண்டவை... துணுக்குச் செய்தி... தகவல் சரக்கு... நேரம் என்பது சொலைக்காட்சியில் மிகமிக அரிதாகக் கிடைக்கப்பெறும் சரக்கு. இவ்வளவு பயனற்ற விஷயங்களைச் சொல்வதற்கு இவ்வளவு பொன்னான நிமிடங்களைச் செலவிடுவது ஏனென்றால், பொன்னான சில விசயங்களை மறைக்கிற காரணத்தினாலேயே பயனற்ற இந்த விசயங்கள் மிகவும் முக்கியமானவையாகின்றன என்பதால் தான்.

தமிழ்ச் சூழல்:
 
தமிழகத்தில் மக்கள் அறிய வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க, எந்த ஒரு செய்தி நேரத்திலும் "சைனாவின் வினோத மனிதன்" என்றோ மெக்சிக்கோவின் நாய்ச் சண்டைப் பற்றியோ முற்றும் முழுவதுமாக செய்தி நேரத்திற்கு சுவைச் சேர்க்கவோ இன்னப்பிற காரணங்களுக்காகவோ பொன்னான செய்தி நேரம் உபயோகப்படுத்தப்படுகிறது.

பியர் பூர்தியு: 
 
காட்டப்பட வேண்டியதே காட்டுவது போல் இருந்தாலும், அதைக் காட்டும் விதத்தில் அது காட்டப்படாமலேயே போய்விடுகிறது... அல்லது அந்தத் தகவல் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தில் எதார்த்தத்திற்குப் புறம்பான ஒரு அர்த்தம் அதற்குக் கற்பிக்கப்பட்டு விடுகிறது. 

தமிழ்ச் சூழல்:  
 
சமீபத்தில் தமிழக முதல்வர் அமைச்சர்களை மாற்றிக் கொண்டிருந்த வரிசையில் சபாநாயகரையும் மாற்றியது விவாதத்துக்கு உள்ளான pOthu தினமலர் பத்திரிக்கையின் தலைப்புச் செய்தி புதிதாக வரப் போகும் சபாநாயகரின் சாதியைப் பெரிது படுத்தி ஆளும் வர்க்கத்துக்கும் நல்ல பிள்ளையாகவும், படிப்பவர்களுக்கும் வேறு வித அர்த்தத்தைக் கற்பித்தது.


பியர் பூர்தியு:   துறைச் சார்ந்த அங்கீகாரம்
 
சிலருக்கு மக்களிடையே பிரபலமடைவதற்கு தொலைகாட்சி ஊடகங்கள் உதவி செய்து அதன் மூலம் எழுத்தாளர்களாகவோ, பாடகர்களாகவோ, நாட்டியக்காரர்களாகவோ அங்கீகாரம் அளிப்பதன் மூலம் காலம் காலமாக இந்தத் துறை சார்ந்த அங்கீகாரம் அளிப்பதற்கு என்று உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்களுடன் தொலைக்காட்சி போட்டியில் இறங்குகிறது. இதனால் அங்கீகாரம் பெறத் தேவையான தகுதிகள் என்ன என்பதில் குழப்பம் ஏற்படுகிறது...

தமிழ்ச் சூழல்:  
 
தமிழ்ச் சூழலில் பல்வேறு தொலைக்காட்சியில் வரும் பட்டிமன்ற பேச்சாளர்கள், இசை மற்றும் நாடிய போட்டிகளில் வரும் நடுவர்கள்...

பியர் பூர்தியு:  மிகைப்படுத்துதல்
 
சாதாரண சொற்களைக் கொண்டு நகர்புற நடுத்தர வர்க்கத்தையோ, பாமர மக்களையோ வாய்ப் பிளக்க வைக்கமுடியாது. அதற்கு அசாதாரணமான சொற்களைப் பயன் படுத்த வேண்டும்.

தமிழ்ச் சூழல்:  
 
தமிழ்ச் சூழலில் செய்திகளில் உபயோகிக்கப்படும் "இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது" போன்ற பிரயோகங்கள்.

பியர் பூர்தியு: 
 
பரபரப்பை நம்பியிருக்கும் பத்திரிக்கைகளின் பிரதான மேய்ச்சல் நிலமான துணுக்குச் செய்திகளும் இரத்தமும் பாலியலும் திடுக்கிடும் நிகழ்வுகளும் குற்றங்களும் எப்போதுமே நன்றாக விலை போயிருக்கின்றன. 

தமிழ்ச் சூழல்
 
இரவு பத்து மணிக்கு மேல் வரும் குற்றம் நடந்தது என்ன, போலிஸ் டைரி போன்ற நிகழ்ச்சிகளும் வருணனையாளர் அதை விவரிக்கும் அமானுஷ்ய என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்களும்...

இதை பகுதி ஒன்று என்று வைத்துக் கொள்ளலாம், மீதிப் பக்கங்களையும் படித்து விட்டு நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

Labels: , ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

3 Comments:

At 3:12 PM, Blogger Mahendhiran G said...

Good analogy and interpreted very well to match the current media trend. Good work..:-)

 
At 3:14 PM, Anonymous Anonymous said...

Good analogy and interpreted very well to correlate the current media trend. Good Job Sathis.

-- Mahendhiran G

 
At 8:43 AM, Blogger அமிழ்து - Sathis M R said...

உன்னுடைய நேரத்திற்கும் கருத்துக்கும் நன்றி மகேந்திரன்... :)

 

Post a Comment