அமிழ்து: October 2011



எனது புத்தக வாசிப்பு அனுபவம் - உறங்கா நகரம் - வெ. நீலகண்டன்

Sunday, October 23, 2011

இந்த முறை உடுமலை.காம் வழியாக வாங்கிய புத்தகங்களில் வெ.நீலகண்டன் எழுதிய உறங்கா நகரம், ஊர்க்கதைகள் ஆகிய புத்தகங்களும் அடங்கும். இரண்டுமே குங்குமம் இதழில் தொடராக வந்தவை என்பது புத்தகங்கள் கையில் கிடைத்தவுடன் தான் தெரிந்தது.

இணையத்தில் வாங்கும் போது, பல தடவை புத்தங்களின் தலைப்பை வைத்தே வாங்கிவிடுவேன். இந்த முறையும் அப்படித்தான். இது ஒரு வகையில் எனக்கு நல்லது தான். சில புத்தங்களை நேரில் பார்க்கும் போது வாங்கத் தோணுவதில்லை. அதனாலே பல நல்ல புத்தங்களை நான் தவற விட்டிருக்கலாம்.

உண்மையைச் சொல்லப் போனால், இவ்விருப் புத்தங்களையும் கூட நான் தவற விட்டிருப்பேன். நல்ல வேளையாக இணையத்திலேயே வாங்கிவிட்டேன்.

சந்தியா புத்தகத்தின் வாயிலாக வெளியிடப்பட்டிருக்கின்ற இவ்விருப் புத்தகங்களையும் எழுதிய வெ. நீலகண்டன் அவர்கள் குங்குமம் வார இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றுகிறார்.

உறங்கா நகரத்தை வந்த ஓரிரு நாளில் படித்து முடித்துவிட்டேன். இப்பொழுது ஊர்க்கதைகளை ஆரம்பித்திருக்கிறேன்.


சென்னை நகரை எனக்கு எப்போதும் பிடிக்கும். அதற்கு காரணம் பெங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இறங்கியதுமே தொற்றிக் கொள்ளும் பரபரப்பு. இதற்கு அதிகாலையும் விதி விலக்கல்ல. பூங்கா நிலையத்தில் உள்ளூர் இரயில் வண்டி ஏற வருவதற்குள் அந்த அதிகாலையிலே பிச்சைக்காரர் முதல் பேப்பர் போடுபவர், டீக்கடைகாரர், பிளாட்பாரம் கடைக்காரர் என அனைவருமே வியாபாரத்தை ஆரம்பிப்பதுதான். உண்மையிலே அது உறங்கா நகரம் தான்.

இதை நான் சேலத்து பேருந்து நிலையத்திலும் கண்டிருக்கிறேன். அர்த்த இராத்திரி 12 மணிக்கு பெங்களூர் பேருந்து வந்து நின்றதும், அந்த பொழுதிலும், கர்ம சிரத்தையாக, ஒரு மனிதர் வந்து பொது அறிவுப் புத்தகம், இந்திய வரைபடம், ஆங்கில அரிச்சுவடி என எதையாவது விற்றுக் கொண்டிருப்பார். வியப்பாக இருக்கும். அந்த இரவிலும் ஒரு மனிதர் தனது பிள்ளைகளின் அறிவை வளர்க்க அதனை வாங்கிக்கொண்டிருப்பார். எனது மற்ற மாநில நண்பர்களிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டிருத்த போது அவர்களுக்கு இது புதிதாக இருந்தது.


சென்னை போன்ற பெரு நகரங்களில் பகல் நேர மனிதர்கள் தங்களது கடமையைச் செவ்வனே செய்ய எவ்வளவோ இரவுப் பறவைகள் தங்களது தூக்கத்தைத் துறந்து உழைத்துக் கொட்டுகின்றன. ஆனால் இந்த இரவுப் பறவைகள் பகல் நேரத்தில் கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விடுகின்றன. பகல் நேர பறவைகளுக்கும் இந்த இரவு மனிதர்களை சிந்திக்க நேரமில்லை.

வெ.நீலகண்டன் அவர்கள் இந்த நூலில், நமது நகர வாழ்க்கையில் சட்டென கடந்து செல்லும் அது போன்ற போல பல விளிம்பு நிலை மனிதர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு சற்றே அவர்களின் வாழ்க்கைக்கு உள்ளேயும் செல்கிறார்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் எப்பேர்பட்ட மனிதர்களின் வாழ்விலும் ஏதோ வகையில் வந்து சென்று அவர்கள் மனதிலோ, நினைவிலோ எந்தத் தடமும் பதிக்கமால், பதிக்கமுடியாமல் கடந்து செல்லும் பல்வேறு விளிம்பு நிலை மனிதர்களின் தொகுப்பு தான் இப்புத்தகம்.

இப்புத்தகத்தில் விளிம்பு நிலை மனிதர்களுடன், கால் சென்டரில் வேலை செய்பவர்கள், காவற்துறை, விமான நிலையம், அஞ்சல் துறை, தீயணைப்பு துறை, மின்சாரத்துறை ஆகியவற்றில் இரவுப் பணியாற்றும் மனிதர்களின் வாழக்கையைப் பற்றியும் பதிவிட்டிருக்கிறார்.

இரவுப் பணியாற்றும் விளிம்பு நிலை மனிதர்கள் ஆனாலும் சரி, அரசுத் துறையில் இருப்பவர்களும் சரி, அவர்களை இணைக்கும் ஒரே கோடு பொருளாதாரத் தேடலே! தூக்கத்தைத் தொலைத்து, உறவைத் தொலைத்து, உடலை வருத்தும் இந்த பல்வேறு இரவு மனிதர்களின் ஒரு நாள் இரவை நமது கண் முன்னே நிறுத்துகிறார் ஆசிரியர்.

பகலில் இழந்த தனது அதிருஷ்டத்தை இரவில் குறி சொல்லித் தேடும் குடு குடுபைக்காரர்களாகட்டும்,
சுகமோ துக்கமோ சென்னையின் கீதமான கானாவைப் பாடிப் பிழைப்போராகட்டும்,
சத்தமேயில்லாமல் சென்னையின் அந்நிய செலவாணியை ஈட்டிக்கொடுக்கும் துறைமுகத் தொழிலாளர்கள் ஆகட்டும்,
கடலுக்குள் கால் பாதிக்கும் மீனவ சமுதாயகமட்டும்,
விடிய விடிய தனது கண்களை அகலத் திறந்து வைத்திருக்கும் காவலாளியாகட்டும்,
செய்தித்தாளுக்கும், பாலுக்காகவுமே எப்போது விடியும் எனக் காத்திருக்கும் பலருக்கு காலையிலே "பால்" வார்க்கும் பேப்பர், பால் பையன்களாகட்டும்,
சென்னை மட்டுமல்ல, சுற்று வட்டார ஊர்களுக்கும் விடிந்தவுடன் பசியாரவைக்கும் கோயம்பேடு சந்தையின் இரவு வாழ்வாகட்டும்,
அம்பத்தூரின் பழைய தொழில்களாகட்டும் அல்லது பள பளக்கும் புதிய கணினி நிறுவனங்களாகட்டும்,
சாலை போடுவோராகட்டும்,
பகலின் குப்பைகளைப் விடிவதற்குள் பெருக்கி அடுத்த நாளின் குப்பைகளுக்கு தயார் படுத்தும் துப்புரவுத் தொழிலாளர்களாகட்டும்...

இப்படி அன்றாட நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாக (நா)(மா)றிவிடாமல் இருக்கவும், உயிர்ப்புடன் வைக்கவும் உதவுபவர்கள் இந்த விளிம்பு நிலை மனிதர்களே. நூலாசிரியர் இவ்விளிம்பு நிலை மனிதர்களுடன் தான் சந்தித்ததை சுவைப்பட எழுதியுள்ளதோடல்லாமல், அவர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளிய காரணங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார்.

விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி மட்டுமல்லாமல், மற்ற துறை சார்ந்த இரவுப்பணி அலுவலர்களின் இரவு அலுவலைப் பற்றியும் தொட்டு அவர்களது அன்றாடப் பணிச்சூழலையும் நம் கண் முன்னே நிறுத்துகிறார்.

வெ. நீலகண்டன் அவர்கள் எழுது நடை ஒவ்வொரு பத்தியிலும் எளிமையாகத் தொடங்கினாலும் அழுத்தமான கருத்தை எதிர்பாராத சொற்றொடர்களில் வைத்து மிக அழகாக முடிக்கிறார்.

வெ. நீலகண்டன் அவர்களின் இந்தத் தொகுப்பு எனக்கு தெரியாத சில விடயங்களைத் தெரியப்படுத்தியும், என்னை நான் சுய பரிசோதனை செய்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகது.


இனிமேல் வெ.நீலகண்டன் அவர்களின் எந்த ஒரு புத்தகத்தையும் நான் வாங்கிவிடுவேன் என்பதுவும் உண்மை.

தலைப்பு: உறங்கா நகரம்
ஆசிரியர்: வெ. நீலகண்டன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்
விலை: ரூ. 80 /-

Labels: ,