அமிழ்து: படித்தது - புத்தகம் - "சயாம் மரண ரயில்" - சண்முகம்



படித்தது - புத்தகம் - "சயாம் மரண ரயில்" - சண்முகம்




 
"தமிழோசை" பதிப்பகம்; ரூ. 150/-
2007-ல் முதல் பதிப்பு; 2010-ல் இரண்டாம் பதிப்பு;

"தமிழோசை" பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகம், இரண்டாம் உலகப் போர் தருணத்தில் (1942-1943) பர்மாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான, கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் தூரமான இருப்புப் பாதையை அமைப்பதில் தமிழர்களின் பங்குபற்றிய சோக வரலாற்றை நாவல் வடிவத்தில் பதிவு செய்துள்ளது.

ஆசிரியர் இவ்வேலையில் பங்காற்றிய பலரைச் சந்தித்து அவர்களது அனுபவத்தைத் தொகுத்து வரலாற்றுக் குறிப்பாக கொடுக்காமல் நாவலாக கதை மாந்தர்கள் வழியாக வழங்கியுள்ளார்.

மலேய, சிங்கப்பூர் மற்றும் பர்மீய தமிழர்கள் (பிரிட்டிஷார், ஆஸ்திரிலேயர் மற்றும் டச்சு  போர்க் கைதிகளும் இவ்வேலைக்குப் பயன்படுத்தப்பட்டனர் ) எப்படி ஜப்பானிய இராணுவத்தால் பிடிக்கப்பட்டு தங்கள் உடல், பொருள், உறவுகள், மனநலம் என சகலத்தையும் இழந்தனர் என்பதை பல கதை நாயகர்கள் வேலு, மாயா, கந்தசாமி, நாகப்பன் போன்றோர் வாயிலாக ஆசிரியர் விளக்குகிறார். இதனூடாக ஒரு தமிழ்-சயாம் இனக் காதலர்களையும் காட்டியுள்ளார் ஆசிரியர்.

நாவல் வடிவத்தில் இருந்தாலும், ஆங்காங்கே கதைக்கு நடுவே தேவையான வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்தாண்டுள்ளார் ஆசிரியர்.


நூலிலிருந்து சில தகவல்கள்:

> ஜப்பான் எப்படியாவது இந்தியாவையும் ஆக்கிரமித்து விட வேண்டும் என்றே இந்த ரயில் பாதையை அமைக்க முயற்சித்துள்ளனர்.  அதற்கு பயன்படுத்தியது இந்திய வம்சாவளித் தமிழர்களை;

> கிட்டத்தட்ட 400 கி.மீ. பாதை பெருங்காடுகளையும், காட்டாறுகளையும், கணவாய்களையும், குன்றுகளைக் குடைந்தும் போடும் இந்தப் பணியில் எளிய கருவிகளே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது;

> போரின் நெருக்கடி காராணமாக 16 மாத கால அவகாசத்தில் 400 கி.மீ. இரயில் பாதை அமைக்கப் பட வேண்டியிருந்தது; ஜப்பானியர்கள் இந்த வேலையில் ஈடுபட்டவர்கள் யாரையும் மனிதர்களாகவே மதிக்கவில்லை; தவறுக்குத் தண்டனைகளாகவும், நோயுற்றவர்களுக்கு மருந்தாகவும் மரணமே தரப்பட்டுள்ளது ஜப்பானியர்களால்;

> கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்கள் இந்தப் பணியில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; ஆனால் திரும்பியதோ சொற்ப ஆயிரங்களே;

> ஆங்கிலேயர்கள் துரைகளாக  கோலோச்சிய காலனி ஆதிக்கக்  கால  கட்டத்தில் அவர்கள் போர்க் கைதிகளாக சரியான உடை, உறைவிடம் மற்றும் உணவுமில்லாமல் கடுமையான உடல் உழைப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்; ஒரு பாக்கேட் சிகரெட்டுக்குக் கூட தமிழர்களிடம் கையேந்தியுள்ளனர்;

> நேதாஜி இந்தியாவிற்கு பிரிட்டனிடமிருந்து விடுதலை வாங்கிவிட வேண்டும் என ஜப்பானுடன் நட்பு பாராட்டினார் என்பது வரலாறு; ஆனால் ஜப்பான் நினைத்தப்படி இரயில் பாதை அமைத்து இந்தியா வந்து பிரிட்டனைத் தோற்கடித்திருந்தால், நமக்கு விடுதலைக் கிடைத்திருக்குமா இல்லை ஜப்பானிடம் கைமாறியிருக்குமா என்று தெரியவில்லை ?

> அமெரிக்க அணு குண்டெறிந்த அந்த நாளிலேயே இக்கொடுமையிலிருந்து தமிழர்களுக்கு விடுதலைக் கிடைத்துள்ளது;


மொத்தத்தில் சோகம், காதல், வீரம், கொடை, செண்டிமெண்ட், தமிழ்ப் பெருமை என தமிழ்ப் படத்திற்கு தேவையான அனைத்தும் உள்ளது இந்த உண்மை கலந்த நாவலில். இந்த நூல், இயக்குனர் முருகதாஸ் போன்றவர்களின் கண்ணில் இன்னும் படவில்லை போலும் ...

இந்த சோக வரலாற்றை சில ஆயிரம் மக்களே பங்காற்றிய மற்ற நாட்டினர் நூலாகவோ(Return from the River Kwai, The Japanese Thrust – Australia in the War of 1939–1945. Canberra: Australian War Memorial, The Forgotten Highlander – My incredible story of survival during the war in the Far East. London, UK:), திரைப்படமாகவோ (The Bridge on the River Kwai), பதிவு செய்திருக்கும் வேளையில், கிட்டத்தட்ட ஒரு இலட்சம் தமிழர்கள் (புத்தகத்தில் குறிப்பிட்டப்படி) பங்குபற்றிய இப்பெரு நிகழ்வை
இன்னும் பலருக்குத் தெரியவில்லை என்பது, நாம் ஆவணப்படுத்தலில் எவ்வளவு தூரம் பின்தங்கி உள்ளோம் என்பதையே காண்பிப்பதாய் உள்ளது.

சில இடுகைகள்: http://www.far-eastern-heroes.org.uk/Reg_Rainer_Returns/html/death_railway.htm; http://en.wikipedia.org/wiki/Burma_Railway

ஒரு கொசுறு செய்தி: இலங்கையில் The Bridge on the River Kwai படமாக்கப்பட்ட சமயத்தில் படப்பிடிப்பைப் பார்க்க நேர்ந்த திரு.பாலு மகேந்திரா, சினிமாவால் கவரப்பட்டு அதனாலேயே தான் சினிமா துறைக்கு வந்தாராம்.

Labels:

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

1 Comments:

At 5:01 AM, Blogger Bytes Group said...

That is true....

But one thing. Why we are always thinks about showing the historical things using Cinema? Why we are not involving people to study more books than watching cinema ....

To my knowledge, I always feel that we don't have a vision. Within family we have a vision to bring our family to a respectable level. But on the whole what is the vision of Tamil folks. Getting uninterrupted Power Supply?

 

Post a Comment