அமிழ்து: June 2012



பிரேக்காந்தர ஒந்து இதே, கொத்தா?

Friday, June 08, 2012
)


அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பி வந்து கொண்டிருந்தேன். குறுகிய சாலை தான் என்றாலும் பேருந்து போன்றவை செல்லும் வகையில் தான் அது இருக்கும். எனக்கு முன்னர் ஒரு ஆட்டோ ஒன்று மித வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னர் நான் மித என்றால் மித அப்படி ஒரு மித வேகத்தில் சென்று கொண்டிருந்தேன்.

எனது இந்த மித மித வேகத்துக்குக் காரணம், பள்ளிப் பிராயத்திலிருந்து "மித வேகம், மிக நன்று" என்று நான் தமிழக அரசுப் பேருந்துகளில் பலமுறை படித்துப் படித்து மனதில் ஊறியதால் என்று நீங்கள் தப்பாக எண்ண வேண்டும். இதற்கு காரணம் நமது இருசக்கர வாகனமே.

பாவம் அதுவும் என்ன செய்யும். அதையும் கவனித்தால் தானே. பெட்ரோல் போடுவதும், எப்போதாவது இரு சக்கரங்களுக்கும் காற்று அடிப்பதையுமே பெரிய கவனிப்பு என்று  நினைக்கும் என்னைப் போன்ற எஜமானனிடம், பெட்ரோல் போட்டால் ஓடுவதே அது செய்யும் பெரிய தியாகம் தான்.

வண்டியின் சீட்டு மட்டும், நான் தவறாமல் உட்காருவதால் கொஞ்சம் அழுக்கில்லாமல் இருக்கும். மற்றபடி வண்டியின் ஹாரனைத் தவிர மற்ற ஆயிரத்தெட்டு பாகங்களும், தாமும் வண்டியின் ஒரு பாகம் தான் என்று எனது கவனத்தைப் பெற துடித்து எழுப்பும் ஒலிகள் எனக்கு கேட்கிறதோ இல்லையோ, பக்கத்தில் வரும் நமது சக ஓட்டுனர்களின் காதுகளை ஈர்த்து என்னை ஏற இறங்கப் பார்க்கச் செய்யும்.

இப்படி தான் ஒரு நாள் எனது பக்கத்து வீட்டுக்காரர் என்னை அழைத்து "ஏன்றி மனைக்கே ஸ்வல்ப முந்தே பரனல்வா" (ஏங்க, வீட்டுக்கு கொஞ்சம் சீக்கிரம் முன்னாடியே வரலாம்ல?) என்று கேட்டார். எனக்கோ மொழித் தெரியாத ஊரில் நம்மீது ஒரு வயதான ஜீவன் அக்கறையுடன் வீட்டுக்கு சீக்கிரம் வரச் சொல்கிறதே என்று மெய்சிலிர்த்து நின்றிருந்த நிலையில் அவர் தொடர்ந்து கொண்டிருந்தார் கன்னடத்தில். "வயசான காலத்துல தூங்க விடுறாங்களா, நேரங்கெட்ட நேரத்துல வீட்டுக்கு வந்து நம்ப தூக்கத்த கெடுக்கிறானுங்க" என்று சொல்லிக் கொண்டே சென்ற போது தான் நமது "வண்டிச் சத்தம்" அண்டை அயலாரையும் அடைந்தது தெரிந்தது.


பிரேக்கைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். சில சமயங்களில் எனக்கே நான் மிதிப்பது பிரேக் லிவர் தானா என்று சந்தேகம் வரும் வகையில் கீழே எனது காலுக்கும் அந்த பிரேக் கட்டைக்கும் நடக்கும் போராட்டத்தைப் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல் மேலே எனது பைக் போய்க் கொண்டிருக்கும். 

பின்பு சில பல சாகசங்களைச் செய்து தான் நிறுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக ஸ்பீடு பிரேக்கர்களில் பிரேக் லிவர் ஸ்பீட் பிரேக்கரைத் தொடும் அளவுக்கு மிதித்தால் கூட எந்த வித ரெஸ்பான்சும் இல்லாமல் எதுவுமே நடவாதது போல் அசால்டாக செல்லும் எனது பைக்கின் மீது அப்பொழுது தான் கோபம் பொத்துக் கொண்டு வரும். இருந்தாலும் அதுவும் என்ன வைத்துக்கொண்டா வஞ்சனைச் செய்கிறது என்று மனதைத் தேற்றிக் கொள்வேன்.

சரி மீண்டும் சாலைக்கு வருவோம்...

இப்படியாக ஆட்டோவைப் பின் தொடர, ஒரு திருப்பத்தில் ஆட்டோ சடன் பிரேக் போட, மித வேகத்தில் சென்றாலும் மேலே சொன்னதைப் போல, இந்தப் பேரதிர்வைத் தாங்கக் கூடிய அளவுக்கு நமது வண்டியில் சக்தி இல்லாததால், அந்த KA ரிஜிஸ்ரேஷன் ஆட்டோவில், இந்த TN வண்டி பின்னாடி முத்தமிட்டு நிற்க,

இந்த அதிர்வை உணர்ந்த ஆட்டோ டிரைவர் கேட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த கேள்வி தான்

"பிரேக்காந்தர  ஒந்து இதே, கொத்தா?" (ப்ரேக்குன்னு ஒண்ணு இருக்கு, தெரியுமா?

நமது பதில் இதை விட ரொம்ப சிம்பிள் தான்....

"பிரேக்காந்தர  ஒந்து இதே அந்த, கொத்து! ஆதரே இ பைக்கி-நல்லி பிரேக்காந்தர ஒந்து இல்லாந்த நிமகே கொத்தா?" (ப்ரேக்குன்னு ஒண்ணு இருக்கறது தெரியும்... ஆனா இந்த பைக்குல ப்ரேக்குங்ரா ஒண்ணு இல்லைன்னு உங்களுக்கு தெரியுமா?)

எதிர் கேள்வியை எதிர் பார்க்காத அந்த ஆட்டோ டிரைவர், மேலே எதுவும் கேட்காமல் பறந்து விட்டார். ஆனால் எனக்கு மட்டும் ஒன்று புரியவில்லை.

எனது பதிலுக்குப் பிறகு ஒன்றுமே கேட்காமல் அவர் விரைந்தது,

நான் வேறு எதையாவது மேலும் கன்னடத்தில் பேசி விடுவேனோ என்ற பயமா அல்லது நான் சொன்ன பதிலாலா என்று இன்று வரைத் தெரியவில்லை, எனக்கு.

உங்களுக்கு...!?