அமிழ்து: சாவி..!



சாவி..!

சாவி..!




சாவியைத் தனது வாழ்நாளில் ஒரு முறையேனும் தேடாத மனிதன் உண்டா...? பூட்டைக் கண்டறிந்த நாள் முதல் மனிதன் சாவியைத் தேட தொடங்கி விட்டிருப்பான். நான் மட்டும்  விதி விலக்கா என்ன...!

சாவிகள் தான் எப்பொழுதுமே தேடப்படும் பொருளாய் இருக்கின்றன. என்னைப் போல சாவிகளைத் தேடுவோரை விட பூட்டுகளைத் தேடுவோர்  குறைவே... பூட்டுகளும் கதவிலேயே வருவதால் அதில் சிக்கலில்லை. வீட்டுச் சாவி என்றால் பூட்டைத் திறந்தவுடன் சாவியை மறந்தே விடுவோம்..மீண்டும் பூட்ட நினைக்கும் போது தான் சாவியின் ஞாபகம் நிழலாடும்...

சாவிகளின் பிரச்சினை என்னவென்றால், இங்கே தான் வைத்தது போல் இருக்கும், ஆனால் அந்த இடத்தில் இருக்காது...!

ஒன்றுக்கு இரண்டாக, இரண்டாக என்ன மூன்றாக சாவிகள் இருந்தாலும், மூன்றுமே நம்மைப் பார்த்து "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி" என்று எங்கோ ஒளிந்து கொண்டு பாடிக் கொண்டிருக்கும். அதுவும் அவசரத்தில் கிளம்பினால் கண்டிப்பாக அவை கண்ணில் படவே படாது.

இப்படி அவசரத்தில் கிளம்பும் போதெல்லாம் நம்மைப் போன்று சாவியைத் தேடிய மனிதனால் தான் பூட்டும் போது சாவித் தேவையில்லை என்ற வகை பூட்டு கண்டறியப்பட்டிருக்குமோ... ஆனால் அந்த மனிதனுக்கு, வீட்டுக்குள்ளேயே சாவியை வைத்து பூட்டிச் சென்று திரும்பி வந்து திணறியவர்களின் வரலாறு சொல்லப்பட்டதா என்று தெரியவில்லை.

நம்மைப் போன்ற மனிதனின் இந்த மறதி, சாவியே தேவையில்லாத எண்களை வைத்து இயங்கும் பூட்டையும் கண்டு பிடிக்க வைத்து விட்டது. ஆனால் அது மட்டும் பிரச்சினையைத் தீர்த்ததா என்ன? நம்மைப் போல சாவியை மறப்பவர்களுக்கு எண்கள் எல்லாம் எம்மாத்திரம்...!

பூட்டுகள் எப்போதுமே பார்ப்பதற்கு முரடன் போல தெரிந்தாலும், அவைகள் அப்பிராணிகளாகவே எனக்குத் தோன்றும். யாரோ செய்த தவறுக்கு யாரோ தண்டனை அனுபவிப்பது போல, பூட்டிய வீட்டின் சாவி எங்காவது ஒளிந்து கொண்டு கண்டுபிடிக்க முடியாவிட்டால், முதலில் அடி வாங்குவது பூட்டுகள் தான். சுத்தியால் நெளிக்கப்பட்டும், கத்தியால் அறுக்கப்பட்டும் தனது கம்பீரத்தை இழந்து போகும்.

சாவிகள் தொலைந்து விட்டு நம்மை உற்றார் உறவினர்கள் கடிந்து கொள்ள நேரிட்டாலும், சாவிக்கு நாம் கொடுக்கும் சொகுசு பூட்டுக்குக் கொடுப்பதில்லை. நாம் போகுமிடமெல்லாம் சாவியையும் கொண்டு சென்று விடுகிறோம். ஆனால் எவ்வளவு விலையுயர்ந்த பூட்டாய் இருந்தாலும் கடைசியில் தொங்கப் போவது வீட்டின் கதவினிலே தான். அதை எடுத்துக் கொண்டு நாம் சுற்றுலாவா செல்ல இயலும்?

நம்மைப் போன்ற ஆட்கள் தமது வாழ்நாளில் வீட்டுச் சாவியைத் தேடுவதிலேயே ஒரு சதவீதத்தையாவது கழித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்...ஆனால், கமுதி அருகேயுள்ள மீட்டான்குளம் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே வைப்பதில்லை என்கிறார்கள்... அப்படியெனில் அவ்வூர்காரர்களுக்கு அந்த ஒரு சதவீதம் மிச்சப்படுகிறது.

ஆனால் இந்த சிக்கல் எல்லாம் நமது மூதாதையரான ஆதி மனிதர்களுக்கெல்லாம் இல்லவே இல்லை. எப்பொழுது, நான், எனது என்ற சுய நலச் சிந்தனை தோன்ற ஆரம்பித்ததோ அப்போதே மனிதன் பூட்டைத் தேடி ஓட ஆரம்பித்து, நமக்கும் முடியாத ஒரு வேலையையும் வைத்து விட்டான்!

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

1 Comments:

At 1:04 AM, Blogger Rajarajan said...

பூட்டு சாவியை தேடியலைந்தது ஒருபுறம் இருக்கட்டும், கடவுச் சொல்லை மறந்துவிட்டு நாம் படும் பாடு இருக்கிறதே ..

 

Post a Comment