அமிழ்து: May 2014"செட்" ஆக போகும் 37 எம்.பி.க்கள்!

Monday, May 19, 2014
நான் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும் போது, எங்களது உயிரியல் வாத்தியார், "நம்ப பசங்க எல்லாம் செட்டா போகணும்னு சொல்லுவார், எங்கேனா, மெடிக்கல் காலேஜுக்கு"... அப்ப, அத இந்த காதில வாங்கி அந்த காதிலேயே விட்டு விட்டோம்... ஆனா, இப்ப தான் செட்டா போறத பத்தி யோசிச்சா அதோட மகிமைப் புரியுது...

எனக்கெல்லாம் ஸ்கூலிலிருந்து புதுசா கல்லூரியில் சேர்ந்து போது, முதல் சில மாதங்கள் இனம் புரியாத தயக்கம், பயம் எல்லாம் இருந்தது. எல்லாமே புது ஆளுங்க... யாருக்கிட்டா பேசுறது, எப்படி பேசுறது அப்படினு... பழகிற வரைக்கும் ஒவ்வொரு நாளையும் கல்லூரியில் கடத்துறது ஒரு யுகத்த கடத்துற மாதிரி இருக்கும்.

ஆனா, எங்க பள்ளிக்கூட வாத்தியார் சொன்ன இந்த மாதிரி செட்டா போயிருந்தா அந்தப் பிரச்சினை எல்லாம்  இருந்திருக்காதோ என்னவோ.

ஆனால், இந்த பிரச்சினை எல்லாம் இல்லாமால், தமிழகத்தில் இப்போ

சமீபத்தில் செட்டா போகப் போறது அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேர். கிட்டத்தட்ட எல்லாருமே புது முகம் மூவரைத் தவிர்த்து... இவங்களுக்கெல்லாம் புது டெல்லி, பாராளுமன்றம் எல்லாம் புதுசா இருக்கும், பாஷை புரியல என்ற கஷ்டமெல்லாம் வேண்டாம்.

ஜெயித்த அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் எல்லாம் டூர் மாதிரி ஒண்ணா போய் ஒண்ணா வரலாம்... ஒத்தையா, ரெட்டையா மாட்டிக்கிட்டு புது காலேஜுல முழிக்கிற மாதிரி முழிக்க வேண்டிய அவசியமில்லை, கூட்டமே கூட இருக்கு... பொழுது போக்குக்கும் பிரச்சினை இல்லை...பக்கத்தில இருக்கிற இரத்தத்தின் இரத்தத்துக் கிட்டவே பேசிக்கலாம். ரொம்ப போர் அடிச்சா தனியா சிக்குற ஹிந்தி பேசுற எம்.பி.யக் கூட ராகிங் பண்ணலாம.

இதையெல்லாம் விட பெரிய விடயம், சட்டமன்றத்தில் உள்ள இவர்களது நண்பர்கள் போல, அம்மாவை "அசத்தப் போவது யாரு, அமைச்சர் பதவிப் பெறப் போவது யாரு" எனத் தொலைக்காட்சிப் போட்டி நடத்தத் தேவையில்லை. அமைச்சர்கள் போல தலைக்கு மேல் கத்தித் தொங்கும் நிலையும் இல்லை. அது ஏன், அம்மாவை அகம் குளிரச் செய்யப் புதுப் புது வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முதல் நாள் இரவு முழுவதும் தங்களுடைய எடு பிடிகளைப் பிழியும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.-க்களின்

நிலை மாதிரி கூட இல்லை.

வெக்கேஷனுக்கு பாட்டி வீட்டுக்கு வந்தப் பள்ளிப் பிள்ளைகள் போல என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஜாலியாக. அம்மாவின் கண் பார்வையில் இல்லை. எப்படி வேண்டுமானாலும் உட்காரலாம். அடிக்கடி லொட்டு, லொட்டு என்று மேசையத் தட்ட வேண்டிய அவசியமில்லை. யாராவது அம்மாவைப் புகழ்ந்தால் கூட முகத்தை மிகவும் மலர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டிய தொந்தரவும் இல்லை.

இதைத் தவிர்த்து தி.மு.க., தே.மு.தி.க. போன்றவை இல்லை. அவர்கள் என்னவாவது சொன்னால், அவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. நான் உண்டு என் வேலை உண்டு என நாடாளுமன்றம் கூட்டத் தொடர் முடிந்தவுடன் அவரவர் நண்பர்களுடன் கிளம்பி ஊர் வந்து விடலாம் வெக்கேஷனை முடித்துக் கொண்டு!


ஹையா செம ஜாலி!

Labels: , , , ,