அமிழ்து: May 2013



கர்நாடகத் தேர்தல் - 2013

Sunday, May 05, 2013


இன்று கர்நாடகத் தேர்தல். தமிழ் நாடு போலல்லாமல் இங்கு எந்தக் கூட்டணியும் இல்லை.

பி.ஜே.பி., காங்கிரஸ் என இரு தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சியாகிப் போன ஜனதா தள் (மதச்சார்பற்றது), எட்டியூரப்பா கட்சியான  கே.ஜே.பி, ரெட்டி சகோதரர்கள் பின்புலமுள்ள பி.எஸ்.ஆர். காங்கிரஸ் என எல்லோருமே கிட்டத்தட்ட 224 தொகுதிகளிலும் தனித்தனியாகத் தான் போட்டியிடுகிறார்கள்.

கம்யுனிஸ்டுகளுக்கு இங்கு பலம் இல்லை. தமிழகம் போல் சாதிக் கட்சிகளுக்கும் அதிக செல்வாக்கில்லை. காரணம், பலம் பொருந்திய லிங்காயத்துகளும், வொக்கலிக்காகளும் இரண்டு தேசியக் கட்சிகளிலும் இருக்கின்றனர். மான்டியா பகுதிகளில் வாழும் கௌடாக்களை ஜனதா தள் (மதச்சார்பற்றது) கவருகிறது.

ஜனதா தள்  (மதச்சார்பற்றது) தவிர்த்து இங்கு பெரிய மாநிலக் கட்சிகள் இல்லை, இந்தத் தேர்தலுக்கு முன் புதிதாக முளைத்துள்ள இரண்டு கட்சிகளைத் தவிர்த்து. இங்கு அந்தத் தேவையும் ஏற்பட வில்லை என்றே தோன்றுகிறது. தேசியக் கட்சிகளாக இருந்தாலும் மாநிலத்திற்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது, அவை மாநிலக் கட்சிகளாகவே செயல்படுகின்றன.

இப்போது தோன்றிய இந்த இரண்டு கட்சிகளுமே தங்களது சொந்த விருப்பு வெறுப்பிற்காகவே பி.ஜே.பி.யிலிருந்து பிரிந்தனவே ஒழிய மாநில நலனிற்கு பங்கம் என்பதற்காக அல்ல.

காங்கிரஸ் இந்த முறை ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். கேட்கிற  வரையில் ஆளும் பி.ஜே.பி.-க்கு எதிரான அலை வீசுவதாகவே தெரிகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள், பேரவையிலேயே பி.ஜே.பி அமைச்சர்கள் (!) வீடியோ பார்த்து மாட்டிக் கொண்டது, ஐந்து வருடத்தில் மூன்று முதல்வர்கள் என காங்கிரஸ் மேல் சொல்லப்படும் குற்றங்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று  நிரூபித்திருக்கிறார்கள்.

இதனால் முதல் முறை தனித்துப் பதவியேற்ற பி.ஜே.பி-க்கும், பல முறை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று மக்கள் உணருகிறார்கள்.

இதைத் தவிர பி.ஜே.பி-யிலிருந்து பிரிந்து இரண்டு கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. லிங்கயாத்துகளின் முக்கிய தலைவரான எட்டியூரப்பாவின் புதியக் கட்சி பி.ஜே.பி-யின் லிங்காயத்து ஓட்டுகளுக்கு வேட்டு வைக்கலாம். முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும்  லிங்காயத்து சமூகத்தைச் சார்ந்தவர் தான் என்றாலும் லிங்காயத்து ஓட்டுகளைத் தக்க வைக்க முடியுமா என்றுத் தெரியவில்லை. எட்டியூரப்பா கட்சி பெறும் ஒவ்வொரு ஓட்டும் அந்தந்த தொகுதியில் காங்கிரசையோ அல்லது ஜனதா தள்-கட்சியோ வெற்றிக் கோட்டைத் தொட ஏது செய்யும்.

ரெட்டி சகோதரர்கள் பின்புலமுள்ள பி.எஸ்.ஆர். காங்கிரஸ் வட கர்நாடக பகுதியில் பி.ஜே.பி-யின் தோல்விக்கு துணை போகலாம். கட்சித்  தொடங்கியவுடன் பி.எஸ்.ஆர். காங்கிரசின் தலைவர் ஸ்ரீராமுலு பி.ஜே.பி. மூலம் தான் வகித்து வந்த சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இராஜினமா செய்து விட்டு நடந்த தேர்தலில் மீண்டும் பி.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது பலத்தை ஏற்கனவே  நிரூபித்துள்ளார்.

ஆனால் இவையெல்லாம் ஓட்டுகளாக மாறி காங்கிரசை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துமா? இல்லை கிங் மேக்கராக துடிக்கும் குமாரசாமியின் கனவை நினைவாக்குமா?

கொசுறு:

கர்நாடக தேர்தல் பற்றி எழுதி விட்டு தமிழர்கள் பற்றி சொல்லவில்லை என்றால் எப்படி?

அறுபது தொகுதிகளில் தமிழர்கள் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி. தேசியக் கட்சிகள் இரண்டும் தமிழர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஜனதா தள் மற்றும் கே.ஜே.பி சில இடங்களை ஒதுக்கியுள்ளது. கோலாரில் ஜனதா தள் சார்பில் போட்டியிடும் தமிழரான முன்னாள் சட்டசபை உறுப்பினர்  பக்தவத்சலம் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இவர் ஏற்கனவே அ.இ.அ.தி.மு.க.-விலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர அ.இ.அ.தி.மு.க-வும் 5 இடங்களில் போட்டியிடுகிறது.