அமிழ்து: May 2011இன்றைய தமிழனின் அடையாளம் தான் என்ன?

Saturday, May 28, 2011கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி
என்றார்கள் நம் முன்னோர்கள். நமது இலக்கிய பாரம்பரியம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிலிருந்தே வருகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார். போரும், சக மனிதனைக் கூட மனிதனாக பார்க்காத, சகிப்புத் தன்மையற்ற இன்றைய 21 -ம் நூற்றாண்டின் படித்த உலகம் கொலை வெறியுடன் நர வேட்டை ஆடிக் கொண்டிருக்க, மக்கள் எல்லாம் மாக்களாக வாழ்ந்த காலத்திலேயே இப்படி ஒரு உயர்ந்த சிந்தனையை உதிர்த்தவன் தமிழன்.
து இப்படியிருக்க, சங்க காலப் பாடல்களும் நமது பெருமையை உணர்த்திய வண்ணமே உள்ளது. முறத்தால் புலியை விரட்டினால் தமிழச்சி என்றும், போரில் புற முதுகு காட்டமாட்டான் தமிழன் என்றும், அப்படியே காட்டினாலும் "வடக்கிருந்து உயிர் துறப்பான்" என்றும் எத்தனையோ இலக்கியங்கள் நமது பழம் பெருமையை பேசிய வண்ணம் இருக்கின்றன.

முற்காலமும், சங்க காலமும் இப்படியிருக்க, சற்றுமுன் நடந்த வெள்ளையர்களை எதிர்த்த போராட்டத்தில் கூட தன்னலமற்ற தமிழ்த் தலைவர்களின் பங்களிப்பிருந்தது. கொடிக்காத்த குமரன், கப்பலோட்டிய தமிழன், தில்லையாடி வள்ளியம்மை, வீரன் வாஞ்சிநாதன் என எத்தனையோ பெயர் தெரிந்தவர்கள் இருக்க, ஒவ்வொரு ஊரிலும் நமக்கு தெரிந்த தெரியாத பல தாத்தாக்கள் வெள்ளை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.வெள்ளையர்கள் வெளியேறியவுடன் அமைந்த ஆட்சியிலும் நமக்கு தன்னலமற்ற தலைவர்கள் இருந்தார்கள். மின் விசிறி கேட்க நினைத்திருந்த அம்மாவிற்கு, அதற்கு முன்பே சொந்த ஊருக்கு அனுப்ப பயணச் சீட்டு எடுத்திருந்த முதல்வர் காமராசரைக் கண்டிருந்தது தமிழகம். தான் சமைத்துப் போடுகிறேன் என்று சொன்ன அம்மாவுக்கு "பதவியிலிருக்கும் போது சொந்தங்கள் பக்கத்தில் இருக்கக்கூடாது என்றான்" அந்த முதல்வன். அதனாலேயே காலம் முழுவதும் தனக்கென்று ஒரு சொந்தத்தையும் உருவாக்கிக் கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தான் அந்த தலைவன்.கக்கன் என்ற அன்றைய தமிழக உள்துறை மந்திரி, தனது அந்திம காலத்தில் மதுரை மருத்துவமனையில் யாரும் கேட்பாரன்றி இருந்து பின்பு இறந்து போனார்.

இப்படியாக நமது பண்டைய, சங்க கால, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, என நமது பெருமைகளும் தனித்தன்மைகளும் எத்தனையோ இருக்கிறது. இவையெல்லாம் நமது மூதாதையர்கள் நமக்கு விட்டுச் சென்ற வெகுமதிகள். தங்களை வருத்தி தமிழுக்கும், இனத்துக்கும் தெரிந்தோ தெரியாமலோ பெருமை சேர்த்தார்கள். இவையெல்லாம் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற கூற்றுக்கு வலு சேர்த்தவை.

ஆனால், இன்று நமது நிலை என்ன? இப்போது நடப்பவை தான் நமது சந்ததியினருக்கு வரலாறு. அந்த வரலாற்றை பெருமைப்படுத்தும் வகையிலா உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு ஐம்பதாண்டுகள் கழித்து படிக்கப் போகும் நமது எள்ளுப் பேரனோ கொள்ளுப் பேரனோ நமது வரலாற்றைப் பற்றி படித்து பெருமைப் படும் வகையிலா உருவாக்கி வருகிறோம்.

நமது அடையாளம்தான் இப்போது என்ன? ஏற்கனவே தமிழன் என்ற அடையாளமிழந்து இந்தியனாகி விட்டோம். வடக்கிந்திய ஊடகங்களும், தேச ஊடகங்கள் என்று சொல்லிக் கொள்கிற ஆங்கில செய்தி அலைவரிசைகளும் சாதனை செய்த தமிழர்களை "இந்தியர்கள்" என்று பெருமைப்பட்டுக் கொள்வதும், ஆ. இராசா போன்றவர்கள் அகப்பட்டால் தமிழன் என்ற முத்திரைக் குத்தி ஒட்டு மொத்த தமிழர்களைகளையும் தலைக் குனிவை ஏற்படுத்துவதும் மறுக்கவியலாது.

சிறிது காலத்தில் இந்தியன் என்ற அடையாளத்தையும் இழந்து "உலகன்" என்ற புது பதத்தை ஏற்படுத்தினால் கூட ஆச்சர்யபடுவதற்கில்லை. சிறு நகரங்களில் கூட வளர்ந்து வரும் பீட்சா கார்னர்களும், பர்கர் கடைகளுமே இதற்கு சாட்சி.

எப்படிப்பட்ட நிலமாக இன்று தமிழ் நிலம் காட்சியளிக்கிறது?

தன்னலம் மற்றும் குடும்ப நலன் சார்ந்த தலைவர்கள் வளர்ந்துள்ள இடமாக,

உலகத்தின் ஊழல் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்த தலைவரின் இடமாக,

ஆதிக்க வெறியும் ஆணவமும் மிகுந்த தலைவர்கள் மிகுந்துள்ள இடமாக,

பதவி சுகத்திற்காக சட்டையைக் கழட்டி வைப்பது போல் தனது சுய மரியாதையை கழட்டிவைக்கும் அடிமைகளின் இடமாக,

நாடெங்கும் மதுக் கடைகள் திறந்து விட்டு தனது கல்லா பெட்டிகளை நிரப்பிக் கொள்ளும் சுய நல அரசியல்வாதிகள் பிறந்த இடமாக,

பிணத்தை எரிக்கும் சுடு காட்டில் கூட கொள்ளை அடித்த ஆட்சியாளர்கள் நிரம்பிய இடமாக,

மக்கள் வரிப் பணத்தைப் பற்றி கவலைப்படாத ஆணவம் மிகுந்தவர்கள் தலைவர்களாக இருக்கும் இடமாக,

மக்களைப் பற்றி கவலைப் படாமல் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கும் அதிகாரிகளின் இருப்பிடமாக,

தான் செய்ய வேண்டிய வேலைக்கே கையூட்டு பெரும் கயமை நிரந்த அரசு ஊழியர்கள் இருக்குமிடமாக,

வெள்ளை எதிர்ப்பு போராட்ட தாத்தாக்கள், நிறைந்திருந்த தமிழகம் இன்று ஊரெங்கும் தாதாக்கள் நிறைந்த இடமாக மாறிக் கிடக்கிறது.

இப்படி அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கமும் இருக்க, பொது மக்களாகிய நாமும் சளைத்தவர்களா?


சக மனிதனை மனிதனாகத் தான் பார்கிறோமா, அவனது பொருளாதார நிலையை மறந்து?

நமது இனம் ஈழத்தில் அழிக்கப்பட்டபோது ஒரு சிறிய அளவு எதிர்ப்பையாவது நாம் காட்டினோமா? திரும்பவும் இங்கே குறிப்பிடவேண்டியது ஈழத்தில் வாழும் தமிழர்கள், மொழியால் நம்மினமே தவிர அவர்களில் பெரும்பான்மையோர் இந்தியாவிலிருந்து சென்று நாடு கெட்டவர்கள் அல்ல. அவர்கள் ஈழத்தின் பூர்வ குடிகள். இதைப் பற்றி தெரிய வேண்டுமானால் க.ப. அறவாணன் எழுதிய "ஈழம் தமிழரின் தாயகம்" படிக்கலாம். மற்ற பல நூல்களும் கிடைக்கிறது. இந்த உண்மை எத்தனை தமிழர்களுக்கு தெரிந்திருக்கிறது?

தனது இனத்தில் ஒருவனுக்கு ஒரு துயரம் என்றால் யூத சமூகமே எழுந்து நிற்கிறது. பத்துவருடங்கள் நடந்த ஆப்கானிய இரஷ்ய போருக்காக இஸ்லாமிய வீரர்களை நாடு கடந்து பாடு பட வைத்தது. ஆனால் நாம் சிறு கரிசனையாவது காண்பிக்கிறோமா?

சக மனிதனின் உயிருக்கு நமது சமுதாயத்தில் மதிப்பிருக்கிறதா? சாலை விதிகளை மதிக்கிறோமா? நோயினால் ஏற்படும் உயிரிழப்பை விட இன்று யாரோ ஒருவர் மதிக்காத சாலை விதியினால் மற்ற குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்பு எவ்வளவு பெரியது?

நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் சுய ஒழுக்கம் முன்னுக்கு வருகிறதா அல்லது தன்னலம் முன்னுக்கு வருகிறதா?

எங்கும் அவசரம், சாப்பாட்டு கடையில் ஆரம்பித்து சாலை வரை. முன்னால் ஒரு மனிதன் இருந்தால் கூட அவனை இடித்து தள்ளியோ, அவன் காணாத போதோ அவனை எப்படி முந்திச் செல்வது என்பதே யோசனையை இருக்கிறது. சக மனிதனுக்கும் அவனது நேரத்துக்கும் மதிப்பளிக்காத ஒரு இடமாக இருக்கிறதே.கையூட்டைப் பற்றி வாய் கிழிய பேசும் நாம், போக்குவரத்து காவலரிடம் ரூபாய் நூறு கொடுத்து ரசீது வாங்காமல், ஐம்பது கொடுத்து முடித்ததை பெரும் சாதனையாக்கும் சமுதாயமாக அல்லவா உருவாகியிருக்கிறோம்.திரைப்பட நடிகர்களை அத்துறையில் முன்னேற்றி, பின்பு அரசியலுக்கு வரவைத்து ஆட்சிக் கட்டிலிலும் அமரவைத்து அழகு பார்க்கும் தமிழ்ச் சமூகமாக அல்லவா உருவாகியிருக்கிறோம்.

தனது விருப்பத்திற்குரிய நடிகனின் திரைபடத்திற்காக தனது குடும்பத்தைக் கூட பட்டினி போடும் தமிழ் விசிலடிச்சான்குஞ்சுகள் வாழும் இடமாக அல்லவா மாற்றியிருக்கிறோம்.

தனது சௌகரியத்திற்காக விளைநிலங்களை மனைகளாக்கும் கொடூரம் நம்மை எங்கே கொண்டு நிறுத்தப் போகிறதோ? ஆண்டுக்காண்டு 45 % தமிழகம், நகரமாகிக் கொண்டுவருவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது பெருமைப் படும் விதமாக தெரியவில்லை. கிராமங்கள் வளர வேண்டும் என்பதற்கு கிராமங்கள் நகரங்கள் ஆக வேண்டும் என்பதல்ல பொருள்.

மற்ற இனக்குழுக்களும் அப்படி தானே இருக்கிறது என்ற கருத்து வைக்கப்படலாம். இந்த கேள்வி எழுவதை நமது பெருமையை நாம் உணராமல் இருப்பதையே வெளிப்படுத்துகிறது.
அடையாளங்களை நாம் ஏன் சுமக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்.

அடையாளங்கள் நமது பாரம்பரியங்கள். நமது தாத்தாவின் சொத்து நமக்கு கிடைத்தால் நமக்கு சந்தோசம் தானே. அது போல் தான் அவர்கள் சேர்த்து வைத்த பெருமைகளும். அப்பெருமைக்கு பெருமை சேர்க்க முடியாவிட்டால் கூட, சேதாரம் ஆகி விடாமல் காக்க வேண்டியது நமது கடமையே.

இந்த கட்டுரையின் நோக்கம் அடையாளம் அறிந்து நம்மை இந்தியா என்ற பல்லினக்கூடம் வாழும் நாட்டில் நம்மைத் தனிமைப் படுத்திக் கொள்ள அல்ல, நமது தனித் தன்மையை நாம் எப்படி இழந்து நம்மை நாமே சிறுமைக்குள்ளாக்கிக் கொள்கிறோம் என்பதை விவாதிப்பதற்கே. அக்குழுக்களிலும் நமது பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. அனால் நாம் அவர்களிடமிருந்து எப்படி தனித்தன்மையுடன் வேறுபடுகிறோம் என்பதே பெருமைக்குரிய விடயம்.

நமது இலக்கிய வளத்தையும், நாம் வந்த வழியையும் பார்த்து விட்டு நமது இன்றைய நிலையை நோக்கும் போது, நமது கண்முன்னே "தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து கொள்ளடா" என்ற பேற்றை நமது சந்ததியினருக்கு கொடுத்து விட்டு செல்லக் கூடாதே என்பதின் ஆதங்கமே இந்த எழுத்து.

புத்தக மதிப்புரை: கிராமத்து தெருக்களின் வழியே - ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!

Saturday, May 21, 2011


பத்து நாட்களுக்கு முன்பு இணையம் வழியாக சில புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்று ந.முருகேசபாண்டியன் எழுதிய கிராமத்து தெருக்களின் வழியே. புத்தகத்தின் பெயருக்கு ஏற்றார் போல மனிதர், நம்மைக் கிராமத்து தெருக்களுக்கு கைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். கிராமம் என்றாலே வயல்வெளி, சூது வாது தெரியாத வெள்ளந்தி மனிதர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ள தமிழ் சினிமாவின் (சிற்சில படங்களைத் தவிர) இலக்கணத்திலே இவரது நூல் பயணிக்கவில்லை.இவர் தனது கிராமமான மதுரைக்கு அருகிலுள்ள சமயநல்லூரில் (50 வருடங்களுக்கு முன்பு கிராமமாக இருந்த) தான் வாழ்ந்த வாழ்க்கையின் பல்வேறு ஞாபங்களை இந்நூலின் மூலம் பதிவு செய்திருக்கிறார். இதில் நூலாசிரியர், கிராமத்தைப் பற்றி எந்த ஒரு மிகைப் படுத்தலும் இன்றி உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருக்கிறார்.

பதினெட்டு அத்தியாயங்களாய் பிரிக்கப்பட்டுள்ள அனுபவங்கள் ஒவ்வொன்றும் இதே போன்று தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் தங்களது ஞாபகப் பெட்டகத்தைத் திறக்க வைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நூலாசிரியர் பதிவு செய்த காலம் அறுபதுகளில் என்றாலும், அந்த அனுபவங்கள், எண்பதுகளின் இறுதியிலும் 90களின் ஆரம்பத்திலும் அவரது அந்த பருவத்திலே இருந்த எனக்கும் பரிச்சயமாகவே உள்ளது.

எனது தந்தையாரின் வேலை நிமித்தமாக எனது பள்ளிப்பருவம் புதுக்கோட்டைக்கும் திருச்சிக்கும் நடுவிலிருந்த கீரனூரில் தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 17 வருடம் அந்த ஊரிலேயே தான் வசித்து வந்தோம். எனது தந்தையாரின் சொந்த ஊர் காவிரி பாசனம் மிகுந்த திருச்சியின் முக்கொம்புவிற்கு அருகிலுள்ள ஒரு வளமையான கிராமம், ஜீயபுரம். ஆனால் நான் வளர்ந்த ஊரோ குடிப்பதற்கே தண்ணீரின்றி பல கிலோ மீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய கட்டாயம்.

கீரனூரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கிராமத்திலிருந்து வருபவர்களுக்கு நகரமாகவும், நகரத்திலிருந்து வருபவர்களுக்கு கிராமமாகவும் தெரியும் ஒரு ஊர்.

நூலாசிரியர் தனது அனுபவத்தை விவரிக்க விவரிக்க எனது கண் முன்னே நான் 15 வருடங்களுக்கு முன் தொலைத்த எனது கீரனூரும் ஜீயபுரமும் வந்து சென்று கொண்டேயிருந்தது என்றால் மிகையல்ல.

பேய்களும் முனிகளும் உறைந்திடும் கிராமத்து வெளிகள் என்பது நம்மை வரவேற்கும் முதல் அத்தியாயமாகும்.இதில் உயிரில்லாத மனிதர்களின் பேய்கள் எவ்வாறு உயிர்ப்புடன் கிராமங்களில் சுற்றி வருகின்றன என்பதை விவரிக்கும் போது, எங்கள் பகுதிகளில் நாங்கள் கேட்ட வெள்ளையம்மா வெள்ளச்சியை ஞாபகப்படுத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

எங்கள் பகுதிகளில் மாலை ஆறு மணிக்கு மேல் நெடுஞ்சாலையில் போகும் வாகனங்களை வழி மறிக்கும் வெள்ளையம்மா, மல்லிகைப்பூ சூடியுள்ள பெண்ணாகப் பார்த்து "பிடித்து" விடும். இந்த கதையைக் கேட்டு ஏதோ ஒரு பயம் அடி வயிற்றில் பரவும். பொதுவாக இதுப் போன்ற கதைகள் பகலெல்லாம் விளையாடி விட்டு மின்சாரம் இல்லாத அந்த இருட்டு நேரத்தில் தான் அதிகமாகப் பரிமாறிக் கொள்ளப்படும். இந்த கதைகள் சிறுவர்களைத் தாண்டி பெரியவர்களாலும் நம்பப்பட்டு தான் வந்தது.

முடிவற்ற பயணங்கள்
என்ற இரண்டாம் அத்தியாயம் சொல்வதைப் படித்த போது எனக்கு அருகிலுள்ள நார்த்தமலைக் கோவிலில் கோடை வெயிலில் நடைப்பெறும் பூச்சொரிதல் விழாவையும், பின்பு வரும் தேர்த் திருவிழாவையுமே ஞாபகப்படுத்தியது. பாரப்பட்டியிலிருந்து வண்டி வண்டியாக வில்லு வண்டியில் சென்று திருவிழாக் கொண்டாடிய அந்த கிராமத்து மக்கள் கண்முன் வந்து சென்றார்கள்.

மூன்றாம் அத்தியாயம் தெருக்களில் உயிர்த்திடும் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. கிராமத்து அரசாங்கத்துப் பள்ளிகளில் செருப்பு அணிந்து செல்லும் மாணவனைப் பார்த்து "பந்தா" செய்கிறான் என்று சொல்வதும், செருப்பு, உள்ளாடைகள் ஆகியவை ஆடம்பரப் பொருட்களாகவே பார்க்கப்பட்டு வந்தது என்பது என் அனுபவமும் கூட.

குழந்தைகளின் விளையாட்டு உலகங்களைப் பற்றியான விவரிப்புகள் அனைத்தும் குழந்தைப் பருவத்திற்கு அதுவும் இருபது வருடங்களுக்கு முந்தைய எனது கிராமத்து குழந்தைப் பருவத்திற்கு செல்ல முடியாதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது.

அவையாவும் நாங்கள் விளையாடிய விளையாட்டுகள்! "கொக்கு பற பறவென" கத்திக் கொண்டும், கைகளை வானத்தை நோக்கி தூக்கிக் கொண்டும், நகங்களில் வெள்ளைப் பூ கேட்டு, வானத்திலே பறக்கும் வெள்ளைப் பறவைகளைத் துரத்திக் கொண்டு பூமியிலே நாங்கள் ஓடியது ஞாபகத்திற்கு வருகிறது. இதைத் தவிர பல்லாங்குழி, கல்லாங்காய், தாயம், நாடு பிடித்தல், கல்லா மண்ணா, பே-பே மற்றும் அதனுடன் சேர்ந்து வரும் பாடல், டன் டன் யாரது திருடன், கண்ணாமூச்சி, எப்பொழுதுமே எங்களது விருப்பத்திற்குரிய விளையாட்டாயிருந்த ஐஸ்பால் என்று எல்லாமுமே ஞாபகத்திற்கு வருகிறது. கிரிக்கெட்டும் நாங்கள் விளையாடினோம் என்றாலும், எங்களுக்கு பல விதமான விளையாட்டுகள் இருந்து கொண்டேயிருந்தன. சலிக்காமல் நாங்கள் விளையாடினோம்.

இதே போல நாடகங்கள் பற்றிய் ஆசிரியர் குறிப்பிடும் போதும், எனக்கு எங்கள் ஊர் பகுதிகளில் நடக்கும் "வள்ளித் திருமண நாடகங்களின்" சுவரொட்டிகள் ஞாபகத்திற்கு வருகிறது.

திரைப்படத்தையும், கொட்டகைகளையும் பற்றிக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது. எங்கள் ஊரிலிருந்த ஒரே சினிமா கொட்டகையில், எங்களது வாத்தியாரே பெண்கள் வரிசைக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். எங்கள் வாத்தியாரின் சொந்தக்காரரின் சினிமாக் கொட்டகை என்பதால், பள்ளி முடித்து நேராக கொட்டகைக்கு வந்து மாலை மற்றும் இரவுக் காட்சிக்கும் டிக்கெட் கொடுப்பார்.

நூலாசிரியார் குறிப்பிட்டுள்ளது போல தங்கள் தாயாருடன் படம் பார்க்க வந்த மாணவர்களை அடுத்த நாள் பள்ளியில் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பார். சரியாக பதில் சொல்லவில்லையெனில், பிரம்படியும், வயிற்றில் கிள்ளும் கிடைக்கும்.

கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையில் சுற்றி சுழன்று வரும் ஜாதி மற்றும் குடும்பம் பற்றியான சிந்தனைகள், ஆம்புலன்ஸ் எல்லாம் இல்லாத அந்த காலங்களில் குப்பை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட கொலையுண்ட மற்றும் அனாதைப் பிணங்கள் பற்றிய என பல குறிப்புகள். தமிழ்க் கிராமத்து சமூகம் திட்டுவத்றகு உபயோகப்படுத்திய வார்த்தைகளைக் கூட அப்படியே பதிப்பித்திருக்கிறார் ஆசிரியர்.

கிராமத்தைச் சார்ந்து வாழும் நடோடி மனிதர்களான குடுகுடுப்பைக்காரர், பூம் பூம் மாட்டுக்காரர், மிதிவண்டியை இறங்காமல் ஓட்டும் சாகசக்காரர் என பலரைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

180 பக்கங்களுள்ள இந்த புத்தகம் கிராமத்தில் வாழ்ந்து அனுபவித்தவர்களுக்கு தங்கள் நினைவுகளைக் கிளர்வதாயும், அந்த அனுபவம் இல்லாதவர்களுக்கு புது வித அனுபவத்தை விருந்தாக்குவதாயும் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சிறப்பம்சங்கள்:

1. தேவையில்லாத அலங்கார வார்த்தைகளின்றி மிகவும் சாதாரண நடையில் கொண்டு செல்லப்பட்டிருக்கும் எழுத்து நடை
2. மிகைப்படுத்தலில்லாத, உள்ளது உள்ளப்படியே கிராமத்து வாழ்க்கையை விவரித்திருப்பது


எனது மகனுக்கு கண்டிப்பாக இந்த அனுபவங்கள் கிடைக்காது. அவனுக்கு இணையமும், ப்ளே ஸ்டேஷனும் போதுமாயிருக்கலாம். அவனது அனுபவம் வேறாய் கூட இருக்கலாம். என்னால் எல்லாவற்றையும் சொல்ல இயலாவிட்டாலும் கூட இப்படியும் தமிழ்ச் சமூகம் சில வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்தது என்று சொல்வதற்கும், வாசித்துக் காட்டுவதற்குமான ஒரு பொக்கிஷம் இந்த புத்தகம் என்றால் அது மிகையல்ல.புத்தகத்தின் பெயர்:கிராமத்து தெருக்களின் வழியே
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ.90 /-
இணையத்தில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-031-5.html, http://www.uyirmmai.com/Publications/Default.aspx

Labels: ,

தமிழக தேர்தல் முடிவுகள் - எனது பார்வை - 2

Tuesday, May 17, 2011


தேர்தல் நேரத்தில், தேர்தலுக்கு பின்பு தி.மு.க. இருக்காது என அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. இருக்காது தி.மு.க. வும் சொல்லிகொண்டிருந்தார்கள்.

இப்போது பார்த்தால், தி.மு.க-வின் நிலை தான் அப்படி உள்ளது. பதவி சுகம் கண்ட தி.மு.க. அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் அடுத்த தேர்தல் வரை தி.மு.க. தக்க வைத்துக் கொள்ளமுடியுமா என்றே தெரியவில்லை. ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளால், பல அமைச்சர்கள் அணி மாற வாய்ப்புள்ளது. இளவயது, சட்ட மன்ற முன்னால் உறுப்பினர்களும் தங்களது எதிர்காலத்தைக் கணக்கிட்டு தே.மு.தி.க-வில் சங்கமம் ஆகலாம். எந்தவித பதவியும் இல்லாத உடன்பிறப்புகள், தி.மு.க.வின் தலைமையை நம்பி கட்சியை விட்டுச் செல்லாமல் இருக்கலாம்.

கிட்டத்தட்ட 12 வருடம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் இருந்தாலும் மீண்டும் 1989 -ல் ஆட்சி அமைக்க கலைஞர் கருணாநிதியால் முடிந்தது என்ற நிலைமை இப்போது இல்லை. அப்போது அ.தி.மு.க. பிரிந்து இரு அணியாக நின்றது ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் உடன்பிறப்புகளின், தலைமை மீதும், இரண்டாம் கட்ட தலைவர்கள் மேல் கொண்ட தளராத நம்பிக்கையுமே. அந்த காலங்களில் எல்லாம் கட்சியின் தேர்தல் செலவுக்காக கடைசி மட்ட தொண்டனிடம் கூட தலைமையே கையேந்தும் நிலை இருந்தது. இதனாலும் கூட தொண்டனுக்கும், தலைமைக்கும் ஒருவித நெருக்கம் இருக்கவே செய்தது. தொண்டனிடம் காசு எதிர்பார்க்கும் கம்யூனிசம் போன்ற தலைமை இன்று இல்லை. இது பணக்காரத் தலைமை. தொண்டனுக்கும் தலைமைக்கும் வெகு தூரம். தலைமைக்கு இன்று பல தொழில்கள் உள்ளது. அதில் ஒன்று அரசியல் என்றாகிவிட்டது.

தலைமையே இப்படி இருந்தால், இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களது சொந்த ஊரில் தனிக் காட்டு இராஜாக்களாக கொடி கட்டி பறக்க ஆரம்பித்தார்கள். சேலம் என்றால் வீரபாண்டி ஆறுமுகம், திருச்சி கே.என்.நேரு, தூத்துக்குடி பெரியசாமி, குமரி சுரேஷ் ராஜன் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவர், இவர்களைத் தாண்டி யாரும் உட்கட்சியிலேயே அரசியல் செய்ய முடியாது.

தலைமையின் குடும்பமே மத்தி, மாநிலம் என்று எல்லாப் பதவியிலும் இருக்கும் போது இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களது குடும்பத்திற்காக விடுக்கும் விண்ணப்பத்தை எவ்வாறு தலைமையால் மறுக்க இயலும். தி.மு.க.வில் தொண்டன் என்பவன் தொண்டனாக தொடங்கி தொண்டனாகவே முடிய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. அலைக்கற்றை ஊழல் விவாகரத்தில், மற்ற சாமனியனைப் போல் அவனும் வாய் பிளந்தே இருந்திருப்பான். தலைமையின் கொள்கையை தாங்கிப் பிடிக்க கொடி தூக்கிய அன்றைய தொண்டனுக்கு, இன்று கொள்ளைக்காக கொடி தூக்கும் சோதனை.

1989 வாக்கில் இருந்த தொண்டர்கள் எல்லாம் இப்போது இல்லை. கொள்ளைக்காக கொடி தூக்கிய தொண்டனை பதவியில் இல்லாத தலைமையினால் கட்டுப்படுத்த முடியுமா? தி.மு.க.வின் பலம் தலைவர்கள் இல்லை, அதன் தொண்டர்கள் தான் என்பதை தி.மு.க.மறந்து விடக்கூடாது.

தி.மு.க-என்ன செய்யலாம்?


தி.மு.க. 2016 வரை கட்சியை தாங்கிப் பிடிக்க வேண்டுமென்றால், கலைஞர் கருணாநிதியின் குடும்பம் கட்சியிலிருந்து விலகியிருக்க வேண்டும், கருணாநிதி உட்பட, ஸ்டாலினைத் தவிர.

தி.மு.க. என்றப் பெயரைக் கேட்டாலே முகம் சுளிப்பவர்கள் கூட, ஸ்டாலின் மேல் ஒரு நம்பிக்கை உள்ளது தெரிகிறது.

கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் இல்லாத தி.மு.க-வினால், நடுநிலை மக்களின் மீதான தி.மு.க.வின் குறையலாம், ஊழல் கரையை கொஞ்சமாவது குறைத்து நம்பிக்கையை வரச் செய்யலாம்.

எதிர் கட்சி என்ற அந்தஸ்துக் கூட இல்லாத இன்றைய நிலையில் அரசியல் செய்ய வேண்டும் என்பது மிகவும் சிரமமான விடயம் தான் என்றாலும், தனது பணியை செவ்வனே செய்ய வேண்டும்.

மக்களால் கொடுக்கப்பட்ட இந்த கட்டாய ஓய்வைப் பயன்படுத்தி, இலவசங்களைத் தவிர்த்து ஆக்கப் பூர்வமான திட்டங்களை யோசிக்கலாம்

இது மாதிரி எதையாவது செய்தாலொழிய, அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையான மக்களின் மனப்போக்குடன் ஒத்த ஆட்சி செய்தால், அ.தி.மு.வுக்கு. எதிர் கட்சி என்ற அந்தஸ்தையாவது அடுத்த தேர்தலில் பெற இயலும்.

அ.தி.மு.க. சரியாக செயல்படாத பட்சத்தில் தே.மு.தி.க-வுடன் கூட்டணி போட்டு அடுத்த தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு எதிர் கட்சி ஆகிவிடலாம் :) .

Labels: ,

தமிழக தேர்தல் முடிவுகள் - எனது பார்வை

Friday, May 13, 2011

வழக்கம் போல இந்த முறையும் தேர்தலுக்கு முந்திய, பிந்திய என அனைத்து கருத்துக் கணிப்புகளும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் என்று அறிவித்தவுடன் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெரும் என சொன்ன ஊடகங்கள் கூட பின்னர் சிறிது இழுபறி என்றும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் கூறி இறுதியாக தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று வரை சொல்லின.

முதலில் ஊடகங்கள்:

ஊடகங்கள் தங்களது நம்பகத் தன்மையை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நடுநிலை என்று நம்ப வைத்த பல ஊடகங்கள் கூட தங்களது சொந்த விருப்பு வெறுப்பிற்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் நடந்து கொண்டு பிடிக்காத கட்சி தலைவர்களை போட்டு தாக்கியதும், மற்றவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடியதும் பிடித்தோ பிடிக்காமலோ பத்திரிகை வாங்கிப் படித்த வாசகர்களுக்கே புரிந்திருக்கும்.

இனி கட்சிகள்:

முதலில் தி.மு.க.:

இந்த தேர்தலில் இப்படிப்பட்ட படு தோல்வியை தி.மு.க. தொண்டர்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். தி.மு.க. பல தேர்தல் களங்களைக் கண்டுள்ளது. தோற்றும் போயுள்ளது. ஆனால் மிக மோசமான தோல்வி என்பது இது தான். இதற்கு முன்னர் தோல்விக்காண காரணங்கள் எம்.ஜி.ஆர். ஆகவோ ஆளுங்கட்சிக்கு எதிரான அலையோ , இராஜீவ் காந்தி கொலையில் உருவான அனுதாப அலையோ என பல காரணங்கள் இருந்தன. இவையெல்லாம் தி.மு.க.வின் தோல்விக்கு, தலைமை தான் காரணம் என்று நேரடியாக சொல்ல இயலாதவை. ஆனால் இந்த தேர்தலில் தி.மு.க.வின் படு தோல்விக்கு காரணம் யார் என நோக்கும் போது அனைத்து விரல்களும் தி.மு.க.வின் தலைமையை நோக்கியே குவிகிறது.தமிழினத் தலைவராக அடையாளம் காண ஆசைப்பட்ட கலைஞர் மு. கருணாநிதி, பெருங்குடும்பத்தின் பாச வலைக்குள் சிக்கி சராசரி குடும்ப தலைவராக மட்டுமே இருக்க முயற்சி செய்ததின் விளைவு, இந்த தேர்தலின் தோல்வி.

மாறனின் மகன் தொடங்கி நேற்று பிறந்த கனிமொழியின் மகன் கூட சினிமா தயாரிப்பாளன் ஆகிவிடுவானோ என்று அஞ்சும் அளவுக்கு சினிமாவிலும் ஆக்டோபஸ் கால் பதித்த வாரிசுகளின் கெடுபிடிகள்.

"திராவிட" எனும் சொல்லாடலில் மக்களைக் கட்டி போட்ட கழகத்திலிருந்து வருபவர், தமது மொழி பேசும் தமிழினம் அண்டை நாட்டில் அடிப்படைப்படை உரிமைக்காக கொன்றழிக்கப் பட்ட போது, காலை உணவிற்கு பின்பும், மதிய உணவிற்கு முன்பும் "உண்ணாவிரதமிருந்து" தனது எதிர்ப்பைக் காட்டி போராட்டக் களத்தில் இருந்தவர்களைக் கேலிக்குள்ளாக்கினார். ஜெயலலிதாவிற்கு ஒரு காவிரி பிரச்சனை உண்ணாவிரதம் என்றால் இவருக்கு இது.

மீனவர்கள் சிங்களக் "காடையர்களால்" சுட்டுக் கொல்லப்பட்ட போதும், தலைவர் "பாசத் தலைவனுக்கு" பாராட்டு விழாவிலும், "மானாட மயிலாட" விலும் மூழ்கிப் போயிருந்தார்.

தனது குடும்பத்தாருக்கும் கட்சிக்கும் பதவி வாங்க டெல்லிக்குப் பயணித்தவருக்கு, தமிழனம் கொல்லப்பட்டபோது தான், தனது சுகவீனம் தெரிந்தது போலும். கடிதமாக எழுதி தள்ளி தபால்காரருக்கு வேலை வைத்தார்.

பள்ளிக்குழந்தைகளுக்கு செருப்பு, சீருடை என எம்.ஜி.ஆர். தந்ததை பின்பற்றி இலவச பஸ் பாஸ் என வழங்க ஆரம்பித்தவர், கடந்த தேர்தலில் தொலைக்காட்சிக்கு வந்து நின்றார். இலவசங்கள் எல்லாவற்றையும் குறை சொல்ல முடியாவிட்டாலும், இந்த தேர்தலில் இவர் அள்ளிவிட ஆரம்பித்தது இது எங்கே கொண்டு போய் விடுமோ என்ற அச்சத்தை, பொது மக்களுக்கு கொடுக்காமல் இல்லை. இதைப் பார்த்த ஜெயலலிதா சும்மா இருப்பாரா? அவரும் தனது பங்குக்கு அள்ளி விட்டார். இது வேறு அரசியல்.

தலைமையே இப்படியிருந்தால், கப்பம் கட்டும் குட்டி அரசர்கள் போலிருந்த மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும், அவர்களது வாரிசுகளும் தங்கள் மாவட்டங்களில் செய்த ஆட்டத்தை சொல்ல வேண்டுமா என்ன? இவர்கள் செய்த நில கபளீகரம் பொது மக்களையும் வெகுவாக பாதித்து வெறுப்பின் உச்சத்தை வாங்கிக் கொடுத்தது.

தேவையில்லாத இலவசங்களைக் கொடுக்க தண்ணி இல்லாத தமிழகத்திற்கு டாஸ்மாக் மூலம் தெருவெங்கும் "தண்ணீரை" ஓட விட்டதை இவரது சாதனை என்பதா? ஒரு காலத்தில் புகைப்பிடிப்பதற்கு பயந்து எங்கெங்கோ சென்று புகைப்பிடிக்கும் "விடலை மாணவர்கள்" இன்று சர்வ சாதரணமாக டாஸ்மாக் செல்வது கண்கூடு. இதன் பாதிப்பு இன்னுமொரு பத்தாண்டுகளில் தான் தெரியப் போகிறது.

பதவியும், அதிகாரமும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பல வருடங்கள் குவிந்திருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தி.மு.க.வின் போக்கு காரணம் என்றால், அதற்கு எப்படி தண்டனை தருவது என்பதான ஜனநாயகத்தின் பதிலடி தான் இந்த படு தோல்வி.

தொடரும் ...

Labels: , , ,