அமிழ்து



தமிழக தேர்தல் முடிவுகள் - எனது பார்வை - 2

Tuesday, May 17, 2011


தேர்தல் நேரத்தில், தேர்தலுக்கு பின்பு தி.மு.க. இருக்காது என அ.தி.மு.க.வும், அ.தி.மு.க. இருக்காது தி.மு.க. வும் சொல்லிகொண்டிருந்தார்கள்.

இப்போது பார்த்தால், தி.மு.க-வின் நிலை தான் அப்படி உள்ளது. பதவி சுகம் கண்ட தி.மு.க. அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் அடுத்த தேர்தல் வரை தி.மு.க. தக்க வைத்துக் கொள்ளமுடியுமா என்றே தெரியவில்லை. ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளால், பல அமைச்சர்கள் அணி மாற வாய்ப்புள்ளது. இளவயது, சட்ட மன்ற முன்னால் உறுப்பினர்களும் தங்களது எதிர்காலத்தைக் கணக்கிட்டு தே.மு.தி.க-வில் சங்கமம் ஆகலாம். எந்தவித பதவியும் இல்லாத உடன்பிறப்புகள், தி.மு.க.வின் தலைமையை நம்பி கட்சியை விட்டுச் செல்லாமல் இருக்கலாம்.

கிட்டத்தட்ட 12 வருடம் ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் இருந்தாலும் மீண்டும் 1989 -ல் ஆட்சி அமைக்க கலைஞர் கருணாநிதியால் முடிந்தது என்ற நிலைமை இப்போது இல்லை. அப்போது அ.தி.மு.க. பிரிந்து இரு அணியாக நின்றது ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் உடன்பிறப்புகளின், தலைமை மீதும், இரண்டாம் கட்ட தலைவர்கள் மேல் கொண்ட தளராத நம்பிக்கையுமே. அந்த காலங்களில் எல்லாம் கட்சியின் தேர்தல் செலவுக்காக கடைசி மட்ட தொண்டனிடம் கூட தலைமையே கையேந்தும் நிலை இருந்தது. இதனாலும் கூட தொண்டனுக்கும், தலைமைக்கும் ஒருவித நெருக்கம் இருக்கவே செய்தது. தொண்டனிடம் காசு எதிர்பார்க்கும் கம்யூனிசம் போன்ற தலைமை இன்று இல்லை. இது பணக்காரத் தலைமை. தொண்டனுக்கும் தலைமைக்கும் வெகு தூரம். தலைமைக்கு இன்று பல தொழில்கள் உள்ளது. அதில் ஒன்று அரசியல் என்றாகிவிட்டது.

தலைமையே இப்படி இருந்தால், இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களது சொந்த ஊரில் தனிக் காட்டு இராஜாக்களாக கொடி கட்டி பறக்க ஆரம்பித்தார்கள். சேலம் என்றால் வீரபாண்டி ஆறுமுகம், திருச்சி கே.என்.நேரு, தூத்துக்குடி பெரியசாமி, குமரி சுரேஷ் ராஜன் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவர், இவர்களைத் தாண்டி யாரும் உட்கட்சியிலேயே அரசியல் செய்ய முடியாது.

தலைமையின் குடும்பமே மத்தி, மாநிலம் என்று எல்லாப் பதவியிலும் இருக்கும் போது இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களது குடும்பத்திற்காக விடுக்கும் விண்ணப்பத்தை எவ்வாறு தலைமையால் மறுக்க இயலும். தி.மு.க.வில் தொண்டன் என்பவன் தொண்டனாக தொடங்கி தொண்டனாகவே முடிய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. அலைக்கற்றை ஊழல் விவாகரத்தில், மற்ற சாமனியனைப் போல் அவனும் வாய் பிளந்தே இருந்திருப்பான். தலைமையின் கொள்கையை தாங்கிப் பிடிக்க கொடி தூக்கிய அன்றைய தொண்டனுக்கு, இன்று கொள்ளைக்காக கொடி தூக்கும் சோதனை.

1989 வாக்கில் இருந்த தொண்டர்கள் எல்லாம் இப்போது இல்லை. கொள்ளைக்காக கொடி தூக்கிய தொண்டனை பதவியில் இல்லாத தலைமையினால் கட்டுப்படுத்த முடியுமா? தி.மு.க.வின் பலம் தலைவர்கள் இல்லை, அதன் தொண்டர்கள் தான் என்பதை தி.மு.க.மறந்து விடக்கூடாது.

தி.மு.க-என்ன செய்யலாம்?


தி.மு.க. 2016 வரை கட்சியை தாங்கிப் பிடிக்க வேண்டுமென்றால், கலைஞர் கருணாநிதியின் குடும்பம் கட்சியிலிருந்து விலகியிருக்க வேண்டும், கருணாநிதி உட்பட, ஸ்டாலினைத் தவிர.

தி.மு.க. என்றப் பெயரைக் கேட்டாலே முகம் சுளிப்பவர்கள் கூட, ஸ்டாலின் மேல் ஒரு நம்பிக்கை உள்ளது தெரிகிறது.

கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் இல்லாத தி.மு.க-வினால், நடுநிலை மக்களின் மீதான தி.மு.க.வின் குறையலாம், ஊழல் கரையை கொஞ்சமாவது குறைத்து நம்பிக்கையை வரச் செய்யலாம்.

எதிர் கட்சி என்ற அந்தஸ்துக் கூட இல்லாத இன்றைய நிலையில் அரசியல் செய்ய வேண்டும் என்பது மிகவும் சிரமமான விடயம் தான் என்றாலும், தனது பணியை செவ்வனே செய்ய வேண்டும்.

மக்களால் கொடுக்கப்பட்ட இந்த கட்டாய ஓய்வைப் பயன்படுத்தி, இலவசங்களைத் தவிர்த்து ஆக்கப் பூர்வமான திட்டங்களை யோசிக்கலாம்

இது மாதிரி எதையாவது செய்தாலொழிய, அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையான மக்களின் மனப்போக்குடன் ஒத்த ஆட்சி செய்தால், அ.தி.மு.வுக்கு. எதிர் கட்சி என்ற அந்தஸ்தையாவது அடுத்த தேர்தலில் பெற இயலும்.

அ.தி.மு.க. சரியாக செயல்படாத பட்சத்தில் தே.மு.தி.க-வுடன் கூட்டணி போட்டு அடுத்த தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு எதிர் கட்சி ஆகிவிடலாம் :) .

Labels: ,

தமிழக தேர்தல் முடிவுகள் - எனது பார்வை

Friday, May 13, 2011

வழக்கம் போல இந்த முறையும் தேர்தலுக்கு முந்திய, பிந்திய என அனைத்து கருத்துக் கணிப்புகளும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் என்று அறிவித்தவுடன் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெரும் என சொன்ன ஊடகங்கள் கூட பின்னர் சிறிது இழுபறி என்றும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் கூறி இறுதியாக தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று வரை சொல்லின.

முதலில் ஊடகங்கள்:

ஊடகங்கள் தங்களது நம்பகத் தன்மையை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நடுநிலை என்று நம்ப வைத்த பல ஊடகங்கள் கூட தங்களது சொந்த விருப்பு வெறுப்பிற்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் நடந்து கொண்டு பிடிக்காத கட்சி தலைவர்களை போட்டு தாக்கியதும், மற்றவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடியதும் பிடித்தோ பிடிக்காமலோ பத்திரிகை வாங்கிப் படித்த வாசகர்களுக்கே புரிந்திருக்கும்.

இனி கட்சிகள்:

முதலில் தி.மு.க.:

இந்த தேர்தலில் இப்படிப்பட்ட படு தோல்வியை தி.மு.க. தொண்டர்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். தி.மு.க. பல தேர்தல் களங்களைக் கண்டுள்ளது. தோற்றும் போயுள்ளது. ஆனால் மிக மோசமான தோல்வி என்பது இது தான். இதற்கு முன்னர் தோல்விக்காண காரணங்கள் எம்.ஜி.ஆர். ஆகவோ ஆளுங்கட்சிக்கு எதிரான அலையோ , இராஜீவ் காந்தி கொலையில் உருவான அனுதாப அலையோ என பல காரணங்கள் இருந்தன. இவையெல்லாம் தி.மு.க.வின் தோல்விக்கு, தலைமை தான் காரணம் என்று நேரடியாக சொல்ல இயலாதவை. ஆனால் இந்த தேர்தலில் தி.மு.க.வின் படு தோல்விக்கு காரணம் யார் என நோக்கும் போது அனைத்து விரல்களும் தி.மு.க.வின் தலைமையை நோக்கியே குவிகிறது.



தமிழினத் தலைவராக அடையாளம் காண ஆசைப்பட்ட கலைஞர் மு. கருணாநிதி, பெருங்குடும்பத்தின் பாச வலைக்குள் சிக்கி சராசரி குடும்ப தலைவராக மட்டுமே இருக்க முயற்சி செய்ததின் விளைவு, இந்த தேர்தலின் தோல்வி.

மாறனின் மகன் தொடங்கி நேற்று பிறந்த கனிமொழியின் மகன் கூட சினிமா தயாரிப்பாளன் ஆகிவிடுவானோ என்று அஞ்சும் அளவுக்கு சினிமாவிலும் ஆக்டோபஸ் கால் பதித்த வாரிசுகளின் கெடுபிடிகள்.

"திராவிட" எனும் சொல்லாடலில் மக்களைக் கட்டி போட்ட கழகத்திலிருந்து வருபவர், தமது மொழி பேசும் தமிழினம் அண்டை நாட்டில் அடிப்படைப்படை உரிமைக்காக கொன்றழிக்கப் பட்ட போது, காலை உணவிற்கு பின்பும், மதிய உணவிற்கு முன்பும் "உண்ணாவிரதமிருந்து" தனது எதிர்ப்பைக் காட்டி போராட்டக் களத்தில் இருந்தவர்களைக் கேலிக்குள்ளாக்கினார். ஜெயலலிதாவிற்கு ஒரு காவிரி பிரச்சனை உண்ணாவிரதம் என்றால் இவருக்கு இது.

மீனவர்கள் சிங்களக் "காடையர்களால்" சுட்டுக் கொல்லப்பட்ட போதும், தலைவர் "பாசத் தலைவனுக்கு" பாராட்டு விழாவிலும், "மானாட மயிலாட" விலும் மூழ்கிப் போயிருந்தார்.

தனது குடும்பத்தாருக்கும் கட்சிக்கும் பதவி வாங்க டெல்லிக்குப் பயணித்தவருக்கு, தமிழனம் கொல்லப்பட்டபோது தான், தனது சுகவீனம் தெரிந்தது போலும். கடிதமாக எழுதி தள்ளி தபால்காரருக்கு வேலை வைத்தார்.

பள்ளிக்குழந்தைகளுக்கு செருப்பு, சீருடை என எம்.ஜி.ஆர். தந்ததை பின்பற்றி இலவச பஸ் பாஸ் என வழங்க ஆரம்பித்தவர், கடந்த தேர்தலில் தொலைக்காட்சிக்கு வந்து நின்றார். இலவசங்கள் எல்லாவற்றையும் குறை சொல்ல முடியாவிட்டாலும், இந்த தேர்தலில் இவர் அள்ளிவிட ஆரம்பித்தது இது எங்கே கொண்டு போய் விடுமோ என்ற அச்சத்தை, பொது மக்களுக்கு கொடுக்காமல் இல்லை. இதைப் பார்த்த ஜெயலலிதா சும்மா இருப்பாரா? அவரும் தனது பங்குக்கு அள்ளி விட்டார். இது வேறு அரசியல்.

தலைமையே இப்படியிருந்தால், கப்பம் கட்டும் குட்டி அரசர்கள் போலிருந்த மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும், அவர்களது வாரிசுகளும் தங்கள் மாவட்டங்களில் செய்த ஆட்டத்தை சொல்ல வேண்டுமா என்ன? இவர்கள் செய்த நில கபளீகரம் பொது மக்களையும் வெகுவாக பாதித்து வெறுப்பின் உச்சத்தை வாங்கிக் கொடுத்தது.

தேவையில்லாத இலவசங்களைக் கொடுக்க தண்ணி இல்லாத தமிழகத்திற்கு டாஸ்மாக் மூலம் தெருவெங்கும் "தண்ணீரை" ஓட விட்டதை இவரது சாதனை என்பதா? ஒரு காலத்தில் புகைப்பிடிப்பதற்கு பயந்து எங்கெங்கோ சென்று புகைப்பிடிக்கும் "விடலை மாணவர்கள்" இன்று சர்வ சாதரணமாக டாஸ்மாக் செல்வது கண்கூடு. இதன் பாதிப்பு இன்னுமொரு பத்தாண்டுகளில் தான் தெரியப் போகிறது.

பதவியும், அதிகாரமும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பல வருடங்கள் குவிந்திருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தி.மு.க.வின் போக்கு காரணம் என்றால், அதற்கு எப்படி தண்டனை தருவது என்பதான ஜனநாயகத்தின் பதிலடி தான் இந்த படு தோல்வி.

தொடரும் ...

Labels: , , ,