அமிழ்து: கொர்... கொர்...!கொர்... கொர்...!பயணமே வாழ்வின் பாதியாகி விட்ட எனது இன்றைய நிலைமையில் அடுத்தவர் விடும் குறட்டைக்கெல்லாம் கவனம் செலுத்தவதென்பது கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும் கடந்த வாரம் பேருந்துப் பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவம் குறட்டையின் இன்னொரு முகத்தை எனக்குப் பரீட்சயப்படுத்தியது.

வழக்கமாக பயணச்சீட்டு முன்கூட்டியே ரிஸர்வ் செய்யாத நேரங்களில் 3+2 சீட்டுக்களைக் கொண்ட சேலம் கோட்டப் பேருந்துகளே திருச்சியிலிருந்து பெங்களூர் செல்லும் எனது பயணத்திற்கு ஆபத்பாந்தவன்கள்!

ஆனால் இந்த முறை வரும் போது தேர்தல் நேரத்து பிரச்சாரத் தலைவன் போல நடுவில் சில ஊர்களுக்கும் சென்று வந்ததால், திரும்பிப் போகும் போது பேருந்தில் முன்கூட்டியே டிக்கெட் கிடைத்தால் தேவலாமென்று தோன்றிற்று. ஆனால் ஞாயிறு இரவு ஏழு மணிக்கு மேல் தோன்றிய இந்த யோசனை "அபத்தம்" என்பதை விட மேலானது என்பது, இது போன்ற காலத்தில் தமிழகத்தின் மூலை முடுக்ககளிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு அடிக்கடி பயணம் செய்யும் மக்கள் உணருவார்கள்!

ஆனால், அண்டை அயலாரின் அன்பை எங்களது குடும்பம் பேணி வந்ததன் பலனாக, கடைசி நேரத்தில், KPN-ன் வோல்வொ பேருந்தில் எனக்காக ஒரு இருக்கை தயாரானது.

IIM-மில் சீட் கிடைத்ததைப் போல் துள்ளிக் குதித்த நான், பேருந்தின் பயண நேரம் 11 மணி தான் என்பதால், எனது மகிழ்ச்சித் தியாலங்களை சில மணி நேரம் வீட்டிலேயேயிருந்து extend செய்து கொண்டேன்!

சரியான நேரத்துக்கு நான் சென்று விட்டாலும் எனது இருக்கையை முந்தைய பயணத்தின் பயணி ஆக்கிரமத்துக் கொள்ள நேர்ந்ததால், 11.15க்கே அந்த இருக்கையில் பட்டாபிஷேக விழா எதுவும் இல்லாமல் எளிமையாக முடிசூட்டிக் கொண்டேன்! சுற்றும் முற்றும் பார்த்த போது என்னைப் போலவே மற்ற தேசத்து ராஜாக்களும், ராணிகளும் தங்களுக்கு தாங்களே முடி சூட்டிக் கொண்டிருந்தார்கள்.

என்னருகிலிருந்த அண்டை நாட்டு ராஜா மிகவும் நாசூக்கானவர் போல் தெரிந்தார். இருந்தாலும் அவரைத் தொல்லைத் தரும் சில செயல்களில் நான் ஈடுபட நேர்ந்தது. எனது சிம்மாசனம் சாளரத்திற்கருகில் நிலவொளியைப் பார்க்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்ததால், எனது உடுப்புகளை வைக்க எடுக்கவென சில தடவைகள் அவரைத் தாண்டிச் சென்று அவருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் துர்பாக்கிய நிலைக்கு ஆட்பட்டேன். சினமேதும் கொள்ளாத அவர் தனது வஞ்சத்தைப் பயணத்தில் தீர்க்கப்போகிறார் என்ற தகவலேதும் அந்த நேரத்தில் தெரியாத நான், அவரின் பெருந்தன்மையை எண்ணியபடியே எனதிருக்கையில் அமர்ந்திருந்தேன்.

வோல்வோ பேருந்து அலுங்கி குலுங்கி திருச்சி நகரத்து சாலைகளின் அழகைப் பறைசாற்றிய வண்ணம் ஊர்ந்து கொண்டிருந்தது. இதனிடையே, நம்மருமை நண்பர், 90 டிகிரியில் இருந்த தமது இருக்கையை, மழலைக் கிறுக்கிய "சாய்ந்த L" வடிவத்துக்குக் கொண்டு வந்திருந்தார். பாதம் வைப்பதையும் நீட்டி விட்டு கால்களிரண்டையும் பரப்பி கைகளைக் குறுக்காகக் கட்டிக் கொண்டும் தனது வசதி குறைந்த கட்டிலில் இன்றிரவு சயனத்திற்குத் தயாரானார்.

பேருந்து மெதுவாக நகரத்தை விட்டு தாண்டி கரூர் சாலையில் காவிரியாற்றின் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தது! பொதுவாகவே பயணத்தில் தூக்கமென்பது சற்று
மெனக்கெட்டவுடனேயே எனக்கு வரும். பல சமயங்களில் கொட்டக் கொட்ட முழித்திருந்து நான் ஓட்டுநருக்குத் தெரியாமலேயே வெளியிலிருந்தே ஆதரவு கொடுத்திருக்கிறேன். இன்றும் அப்படியே கண்ணை இறுக மூடிக்கொண்டு எனது திறமையெல்லாம் பயன்படுத்தி உறங்க முனைந்து கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் தான், மிகவும் மெதுவாக ஒரு சப்தம் தொடங்க ஆரம்பித்தது. மெல்ல மெல்ல அது உச்சஸ்தாயியை அடைந்த போது, முன்னும் பின்னும் சிலர் முணு முணுப்பதும் கேட்டது.சும்மாவே தூக்கம் வராத எனக்கு, நமது அருமை நண்பரின் குறட்டைச் சத்தம், இன்றிரவு பெருத்த சவாலாகவே விளங்கும் என்பது குறட்டையின் வீச்சையும் தடவைக்கு தடவை அதிகமாகும் அதன் வீரியத்திலும் உணர முடிந்தது.

அண்டை மன்னன் தொடுத்த குறட்டைப் போரில் புறமுதுகிட்டு ஓடிய எனது தூக்கம், திரும்பி வருவதற்கான சாத்தியமே இல்லாத நிலையில், அவர் விடும் குறட்டையின் இசை
நயத்தில் சிறிது நணைய ஆரம்பித்தேன்.

சுருதி தப்பாமல் அவர் எழுப்பும் ஓ(இ)சையில் சங்கீத இலக்கணங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தன. நான் பெரிய சங்கீத விற்பனன் இல்லையெனினும், தலையாட்ட வைக்கும் எதுவுமே இசை என்பதாக எடுத்துக் கொண்டால், இதையும் அந்த வகையில் சேர்க்கலாம்.

பாகவதர் பாடுவதைப் போன்று ஒரே வகையான ஓசை பல முறை எழுப்பினாலும், தூக்கத்திலேயே மாடுலேஷனை அப்போதைக்கு அப்போது மாற்றி கேட்பவருக்கும் தொய்வில்லாமல், நிலையறிந்து அவர் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. இத்துனூன்டு வாய்லேர்ந்து இவ்வளவு பெரிய இசையா என்று விவேக் ஒரு படத்தில் சொல்லுவது போன்று பல தரப்பட்ட ஓசை தாளம் தப்பாமல் மாற்றி மாற்றி ஒலிக்க ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் மாயக் கண்ணனின் புல்லாங்குழலிசைக்கு மயங்கிய பசுக்கள் போல, சுற்று வட்டாரத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவரது ஓசையைக் கேட்டு கண்ணயர்ந்தனர்.

இன்னும் தூக்கம் வராததால் என்னைப் போன்ற முழித்திருக்கும் அந்த குறட்டைச் சத்தத்தை எண்ண ஆரம்பித்தேன். ஒன்று, இரண்டு... ஆயிரம் என அந்த இரவைப் போல் எண்ணிக்கை நீண்டதே ஒழிய, தூக்கம் மட்டும் தூரத்திலேயே இருந்தது.கணவனின் குறட்டைக்கே கோர்ட் படியேறி அவனது தூக்கத்தைக் கலைக்கும் மேற்கத்திய மனைவி போலல்லாமல், பெயர் தெரியாத ஒரு மனிதனின் குறட்டையுடனும் ம்காத்மா காந்தி படிப்பித்த சகிப்புத்தன்மையுடனும் பயணம் செய்து கொண்டிருந்த நானும் சில மணி நேரம் கண்ணயர்ந்திருக்கிறேன்.

"மடிவாளா!" என்றக் குரல் கேட்டவுடன் அவருக்கு தொந்தரவு செய்ய நேர்ந்தாலும், இப்போது ஏனோ ஒரு குற்றவுணர்வும் இல்லாமல் இறங்கிக் கொண்டிருந்தேன். குறட்டைச் சத்தம் மட்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது..!

Labels: , , ,

« Home | Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »
| Next »

10 Comments:

At 7:00 AM, Blogger ப்ரசன்னா (குறைகுடம்) said...

முடியல........... :-)))))))

 
At 7:04 AM, Blogger ப்ரசன்னா (குறைகுடம்) said...

முடியல.............. :-)))))

 
At 7:40 PM, Blogger அமிழ்து said...

என்ன பண்றது ப்ரசன்னா... தாங்கி தான் ஆகணும்! :))))

 
At 11:00 PM, Anonymous Anand said...

enda ethe ethellam ennurathu enru oru varamuraye illaya .....
annakki olunga office poi sernthiya, illa leave pottuttu veetuleye paduthu thoonkittiya :)

 
At 5:37 AM, Anonymous சித்தார்த்தன் said...

மேலும் மேலும் படிக்கத் தூண்டும் அற்புதமான எழுத்து நடை. இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

 
At 3:23 AM, Blogger அமிழ்து said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சித்தார்த்தன்!

 
At 8:28 AM, Blogger raja said...

Try to reduce the size of the sentence. Excellent writing, keep it up!!!

 
At 10:13 PM, Anonymous Rajan said...

Udupi, Kodachadri tripla naan patta padu enakkuthan therium :-)

 
At 7:29 AM, Blogger மனசு... said...

aiyo pavam neenga, nalla velai unga thozhal pattaila sanju thoongalai, KPN naala thappichinga. ide state transportation-a irunda unga tholpattai pinjurukkum,

arumayana ezhuthu nadai...

 
At 9:04 PM, Blogger Valentine said...

அண்ணா !! சூப்பர் !!! ரொம்ம்ம்மம்ப நல்லா இருக்கு!!
உங்க blog - ல எல்லாமே நல்லா இருக்கு! almost எல்லாத்தையும் ஒரு முறை படிச்சுட்டேன்..
இப்போ ரெண்டாவது முறை படிக்கிறேன்..
இந்த பதிவ முதல் முறை படிச்சத விட, இப்போ இன்னும் நல்லா இருக்குற மாதிரி தோணுது!!

 

Post a Comment