குழந்தையில்லா வருடம் - மக்கட்பெருக்கம்
Saturday, November 24, 2007
இந்தியா வளர்கிறது. ஆனால், யாருக்கு என்ன பயன்? அடிப்படை வசதியேயில்லாத கிராமங்கள் ஒருபுறம் என்றால், அனைத்தும் பற்றாக்குறையாயிருக்கும் நகரங்கள் மறுபுறம். எவ்வளவு தான் சம்பாதித்தாலும், வீட்டில் வறுமை ஏன்? நான்கு பேர் இருக்க வேண்டிய இடத்தில் நாற்பது பேரிருந்தால்?
அளவுக்கு அதிகமான மக்கட்பெருக்கத்தால், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு என அரசாங்காத்துக்கு எல்லா விதங்களிலும் யாரையுமே திருப்திப்படுத்த இயலாத நிலை.
இதைத் தவிர சாலைக் கட்டமைப்பு வசதியில் சிக்கல். சராசரியாக நூறு வண்டிகள் போக வேண்டிய சாலைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்களின் அணிவகுப்பு. இதனால் சாலைகளின் வாழ் நாள் குறைவது கண்கூடு. எங்கும் மக்கள் கடல். சாலையில், பேருந்தில், அலுவலகத்தில், கடைகளில்.
உலக நிலப்பரப்பில் 2.5% சதவீதமே இந்தியாவாகயிருப்பினும், உலக மக்கட்தொகையில் 15% இந்தியர்கள் என்று, பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.
அரசாங்கத்தின் இயலாமைக்குப் பல காரணங்களிருப்பினும், மக்கட்தொகை தான் மூலக்காரணம் என்பது மறுக்கவியலாது.
தமிழகத்தைப் பொருத்தவரை 2001ன் மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் முந்தைய 1991 மக்கட்தொகைக் கணக்கெடுப்பை விடக் குறிப்பிடத்தக்க அளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 15 சதவீதங்களிலிருந்த மக்கட்தொகைப் பெருக்கம் 11 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் கல்விக் கற்றோர் சதவீதமும் உயர்ந்துள்ளது காரணமாகிறது. கல்வி வாய்ப்பைப் பெருக்க வேண்டுமானால், மக்கட்தொகை பெருக்கத்தால் மிகுந்த தடை என்ற இறப்புப்பூட்டு நிலையை ஒத்துள்ளது. அதனால் ஜனநாயக நாட்டிலும் சில சமயங்களில் கழுத்தை நெறிப்பது போல் சில சட்டங்கள் இயற்றினால் தான் நாடு உருப்படும்.
இந்தியாவில் காணப்படும் சமூகக் கேடுகளான, இலஞ்சம், கிடு கிடு விலை வாசி உயர்வு என எல்லாவற்றிற்கும் காரணம் மக்கட்தொகையே! பொருள் குறைவு, ஆனால் அதற்கு கிராக்கி அதிகம் என்றால் அதற்கு ஒரு "விலை"க் கொடுத்து தான் வாங்க வேண்டும் என்கிறது பொருளாதாரம். அது தான் இங்கே நடக்கிறது.
புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்க்கையில் இந்தியாவில் ஒரு வருடத்தில் 1.8 கோடி குழந்தைகளுக்கும் மேல் பிறக்கின்றன. இது ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கட்தொகையுடன் போட்டி போடுகிறது. ஒவ்வொரு வருடமும் நாம் மக்கட்தொகையில் ஒரு ஆஸ்திரேலியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு இந்தியத் தாய்மாரும் சரசாரியாக 3 குழந்தைகளுக்குத் தாயாக இருப்பதாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்தியக் குடிமக்களாகிய நாம், ஏன் நாட்டு நலனுக்காகவும், வருங்கால சந்ததியினரின் நலனுக்காகவும் ஒரே ஒரு வருடத்தை மட்டும் "நாட்டிலே புதியக் குழந்தைகளே" இல்லாத ஆண்டாக அனுசரிக்கக்கூடாது? இதிலிருந்து, முதல் குழந்தைப் பெறுபவர்களுக்கு மட்டும் விலக்களிக்கலாம். தமிழகமே இதற்கு முன் மாதிரி மாநிலமாக அமையலாம். பிற்காலத்தில் குழந்தைகள் பற்றாக்குறை ஏற்படின், வேறு ஒரு திட்டம் வகுத்துக் கொள்ளலாம்! :))
இப்பதிவிற்குப் பயன்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள் இந்த தளங்களிலிருந்து அறியப்பட்டவை.
https://www.cia.gov/library/publications/the-world-factbook/print/in.html
குறிப்பு: இந்தப் பதிவை எழுத ஆரம்பித்த போது இந்த தளத்தை http://populationcommission.nic.in/ திறந்தேன்.
எல்லாம் எழுதியவுடன், இப்பக்கத்தை மூடும் போது பார்த்த போது, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் 2160 குழந்தைகள் இந்தியாவின் பல மூலைகளிலிருந்து இந்தியக் குடிமக்களாக ஆகி உள்ளன. :)
எழுதுவதற்கு முன் -> 1121333854
எழுதியப் பின் -> 1121336014
Labels: india, makkal thogai, population, society