இரண்டு சக்கர வாகனத்திற்கான உரிமம் என்னுடைய 18ஆவது வயது எப்ப வரும் எனக் காத்திருந்து எடுத்து விட்டேன். ஆனால் நான்கு சக்கர வாகனத்திற்கான் சாரதி உரிமத்துக்கும் எனக்கும் ஏ

ழாம் பொருத்தம் போல!
ஒரு ஆறு வருடத்திற்கு முன்பு, திடீரென்று ஒரு நாள் எனது அலுவலக நண்பர்கள் நாளை மறுநாளே மகிழுந்து வாங்குவதுப் போன்று ரகீம் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து விட்டார்கள். நமக்கு இது பொருக்குமா, நானும் ஜோதியில் ஐக்கியமாகி அடுத்த நாள் காலை ஆறறை மணிக்கு மன்னார்புரம் நால் ரோடில் உள்ள ரகீம் டிரைவிங் ஸ்கூல் வாசல் முன்பு ஆஜரானேன். ஆனால் ஒரு ஈ, காக்கா கூட கண்ணுக்கு எட்டின தூரம் வரைக் காணவில்லை. இப்போது போல் அப்போது ஈ, காக்காகளிடம் செல் போன்கள் கூட இல்லை. எனது அலுவலக மற்றும் டிரைவிங் ஸ்கூல் நண்பர்களிடம் கூட கேட்க முடியாமல் தேமே என்று நின்று கொண்டிருந்தேன். நமது முதல் மகிழுந்து கற்கும் முயற்சியே ஊசாலடிக் கொண்டிருந்த வேளையில் தான் எங்கிருந்தோ வந்தான் என்பது போல் அலுவலக நணபர் ஒருவ

ர் தனது ஆதிகால டிவிஎஸ் 50-இல் மெல்ல மெல்ல வந்துகொண்டிருந்ததை நோக்கிய போது மனதில் சற்றே தைரியம் வந்தது. கொஞ்ச நேரத்தில் ஒரு வழியாக ஆடியாடி ஒரு வெள்ளை அம்பாசிடரும் வந்தது. அதற்குள் இன்னொருவரும் வந்து சேர்ந்தார். ஒருவாறாக மூவரையும் அம்பாசிடரில் அள்ளிப்போட்டுக் கொண்டார் எங்களது பயிற்சியாளர். முதலில் இன்னொரு நண்பருக்குப் பயிற்சி தொடங்கியது.
ஆக்ஸிலேட்டர், ப்ரேக், க்ளட்ச் போன்றவற்றை பொதுவாக எல்லோருக்கும் சொல்லி வைத்தார். சீட்டின் நுனியில் உட்கார்ந்துக் கொண்டு தான் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தோம். இதற்கு ஒரு காரணம் பயம் என்றாலும் இன்னொரு காரணம் போகிற வழியில் ஏற்றிக்கொள்ளப்பட்ட இன்னும் இருவர். ஒரு வழியாக நமது நண்பரின் 15 நிமிட நேரம் முடிய அடுத்ததாக நமது முறை. முதலில் க்ளட்ச் என்று சொல்லப்படுகிற ஒரு பொருளையே கண்டுக் கொள்ளாமல் இருந்ததால் பயிற்சியாளரின் சீற்றத்துக்கு ஆளானேன். இந்த இத்யாதிகள் எல்லாம் எப்படி நினைவில் வைத்துக் கொள்ளவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான் யாரோ ஒருவர் வலமிருந்து இடமாக ABC என்றது ரொம்ப எளிதாக தோன்றியது. இப்படியாக முதல் நாள் பயிற்சி முடிந்து அலுவலகத்துக்குச் சென்றால் அங்கேயும் இதைப் பற்றித் தான் பேச்சு. எப்படி வளைப்பது, கியர் மாற்றும் போது என்ன செய்ய வேண்டும் என்று ஏகப்பட்ட குழப்பங்களுக்கு விடைத் தேடிக் கொண்டிருந்தோம்.
அடுத்த நாள் பயிற்சியின் போது, முதலில் ஓட்ட நான் அழைக்கப்பட்டேன். சாவியைப் போட்டு நாசூக்காகத் திருவிவிட்டு வண்டிக் கிளம்பாததால் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பயிற்சியாளரைப் பார்க்க, அவரோ, "என்னங்க தொட்டுக் குடுக்குறீங்க சும்மா நல்லா திருவுங்க" என்றார். அந்த வண்டியை ஸ்டார்ட் செய்ய ஒவ்வொரு முறையும் நமது புஜ பல பராக்கிராமத்தைக் காண்பிக்க வேண்டும் என்பது பின்னர் தான் புரிந்தது.
ஒரு மாதமான அந்தப் பயிற்சிக் காலத்தைக் கூட முடிக்க முடியாமல் இயற்கையோ அல்லது திருச்சி மாநகராட்சிக் குடிநீர் வாரியம் செய்த சதியோ தெரியவில்லை, மஞ்சட் காமாலையில் ஒரு மாதம் படுத்து விட்டேன். இதற்கிடையில் நமது நணபர்களனைவரும் உரிமம் வாங்கி விட்டார்கள்.
எனது மஞ்சட் காமாலையின் மகிமையால் நான் ஒரு மாதம் அலுவலகம் பக்கமும் தலை வைக்கவில்லை.
பொன்மலைப்பட்டி நாட்டு வைத்தியர், ஆங்கில மருத்துவம், பத்திய சாப்பாடு என்று இருந்து நமது உடலி

ன் எடையும் கிறு கிறுவென குறைந்துவிட நமக்கு சாரதி உரிமம் எல்லாம் நினைவிலேயே இல்லை. இருந்திருந்தாலும் அந்த ஐம்பதாண்டு கால அம்பாசிடர் காரை நினைத்திருந்தாலே நான் போயிருந்திருக்கமாட்டேன்.
இவ்வாறாக ஆறு மாத காலம் போய்விட்டபடியால், இன்னுமொரு முறை LLR அதற்குப் பின் உரிமம் என்பது எல்லாம் மலையைப் பிறட்டும் வித்தையை விட பெரியதாகத் தெரிந்தபடியால் அந்த பக்கமே தலை வைக்கவில்லை.