அமிழ்து: March 2007



யோசிங்க - 1. நன்றி!

Saturday, March 31, 2007

அன்றாட வாழ்க்கையில நமக்கு எவ்வளவோ பிரச்சினை!


காலையில பஸ் ஸ்டாப்பிங்ல நிக்குமா... நின்னா நமக்கு உட்கார இடம் கிடைக்குமா... இடம் கிடைச்சா பக்கத்தில முடியாதவங்களோ, வயசானவங்களோ வந்து நின்னு விடுவாங்களோனு எவ்வளவோ பிரச்சினையிருக்கு... இந்த நேரத்தில என்னத்த யோசிக்கிறதுனு யோசிச்சா அத கொஞ்சம் நம்ப மாத்திக்கலாம்.


ஆமாங்க நம்ப நாட்டுல ஏகப்பட்ட நீதிக் கதைகள், இதிகாசங்கள் எல்லாம் இருந்தாலும் நாம அத "follow" பண்ணுறோமா...? முதல்ல படிக்கிறதே கேள்விக் குறியா இருக்கறப்போ மத்தத எப்படிங்க எதிர்ப்பார்க்கமுடியும்.
ஆனா நம்ப என்ன சொல்றோம், நம்ம கலாச்சாரம் பெரிசு, மேற்கத்திய நாடுகளிலிருந்து நாம கலாச்சாரத்தில தழைத்தோங்கியிருக்கோம் அது இதுனு... நம்ப என்ன பண்ணறோம்... சின்ன சின்ன விசயங்கள்ல எப்படி நடந்துக்குறோம்... நன்றி சொல்வதுக்குக் கூட யோசிக்கிறோம்...


இன்னைக்கு நான் சொல்ல நினைக்கிறது "நன்றி"யப் பத்தி.


என்ன தான் ஆட்டோ டிரைவர் மீட்டருக்கு மேல கேட்டாலும் இறங்கினோன ஒரு தாங்கஸ் சொன்ன எப்படி இருக்கும்...


என்ன தான் பஸ் நடத்துனர் கோபமாயிருந்தாலும், டிக்கெட் கொடுத்தோன ஒரு தாங்கஸ் சொல்லிப்பாருங்க அவரு ரியாக்ஷ்ன..

பால்க்கடை, மளிகைக்கடை, சலூன், டீக்கடை, உணவகம் என இது மாதிரி எங்கெங்கெல்லாம் தாங்கஸ் சொல்ல முடியுமோ சொல்லுங்க...


மேலை நாடுகள்ல இது ஒரு "attitude"-யாயிருக்கு... ஆனா நம்பக்கிட்ட என்ன மனோபாவம் இருக்கு...? "நாம காசு கொடுக்குறோம் அவுங்க வேல பாக்குறாங்கனு"


நம்மளோட இந்த "attitude" மாறுமா? இதுல என்ன பெரிய மாற்றம் வரும்னு நீங்க நினைக்கலாம்! ஒன்னுமில்லங்க... , அவங்கள நாம மனுஷர்களா மதிக்கிறோமுன்னு சொல்ற மாதிரி தாங்க... ரெண்டுப்பக்கமும் ஒரு மகிழ்ச்சி. பள்ளிக்கூடங்கள்ல என்னதான் சொல்லிக் கொடுத்திருந்தாலும் பின்னாளில மறந்திடுது...


இவ்வளவு நேரம் பொறுமையா படிச்சதற்கு ரொம்ப "தாங்க்ஸ்ங்க" :)


என்னங்க, ரொம்ப அட்வைஸ் பண்ற மாதிரி இருக்கா... கருத்து கந்தசாமி கணக்கா இருந்தாலும் பரவாயில்லைனு தான் எழுதுறேன்...முடிஞ்சா இந்த கருத்து கந்தசாமி அடிக்கடி தோன்றுவார்.:)

Labels: ,

அவசர அவசரமாய் ஒரு தப்பு!

Tuesday, March 27, 2007





அன்றும் வழக்கம் போல் தான் விடிந்தது... வருடத்திற்கு 54 முறை மட்டுமே ஷேவிங் செய்து கொள்வது, அதாவது வாரத்திற்கு ஒரு முறை என்று... ஷேவிங் செய்ய ஆரம்பித்த நாள் தொட்டு நான் ஒரு கணக்கு வைத்திருக்கிறேன். அதுவும் கூட ரெகுலரா கிடையாது... ஆபீஸிலேயோ, வீட்டிலேயோ "இவனுக்கு என்ன ஆச்சு" என்று look விடும் வரை தாடிய maintain பண்ணுவேன்...

வேலைக்கு சேர்ந்த பிறகு கூட கொஞ்ச நாள் அடிக்கடி பண்ணலாம் என்று நினைத்தேன். ஆனாலும் முடியல... பழச மறக்காமல் இன்னும் அப்படியேதான்!
ஆண்டவன் ஆம்பிள்ளைங்களுக்கு மட்டும் ஏன் தாடி மீசை எல்லாம் கொடுத்தான் என்று கோபம் கூட வரும்...:(( பெரிய தொல்லைங்க... தாடி வைச்சிருந்தா காதல் தோல்வி இல்லைனா ஏதோ கவலைன்னு முடிவு பண்ணுது சமூகம்...

சரி, விஷயத்துக்கு வரேன்... அப்படி வழக்கமா விடிஞ்ச ஒரு காலைல..., கண்ணாடில முகத்தப் பார்த்தேன். எனக்கே எம்மேல ஒரு பரிதப உணர்ச்சி வந்திருச்சு... அதுவும் இல்லாம ஆபீஸ்ல மீட்டிங் வேற... பெரிய தலை எல்லாம் பார்க்க வேண்டி வரும்...

அவசரத்தோட அவசரமா சரி இன்னைக்கு பண்ணிடுவோம்னு முடிவு பண்ணி என்னோட ஷேவிங் kit-ta எடுத்து செய்ய ஆரம்பிச்சேன்... என்னவோ தெரியல... எவ்வளவு cream முகத்துல தடவினாலும் நுரையே வரல... வழ வழான்னே இருந்துச்சு... தூக்ககலக்கத்தில வேற இருந்ததால இதப் பத்தி ரொம்ப ஆராய வேணாம் என்று கஷ்டப்பட்டு ஷேவிங் செஞ்சு முடிச்சேன்... ஏகப்பட்ட தடவ அந்த வழ வழ கொழ கொழாவ மூஞ்சில அப்பி ஒரு வழியா முடிச்சாச்சு.
இதுல நடுவுல ரூம் மேட்ஸ் கிட்ட comment வேற... இன்னைக்கு ஷேவிங் பண்ண ரொம்ப கஷ்டமா இருக்குன்னு...

after ஷேவ் லோஷன தேடினா கைக்கு வந்தது ஷேவிங் க்ரீம், அப்ப இவ்வளவு நேரம் பண்ணினது... ஆகா after ஷேவ் லோஷன வச்சுள்ள ஷேவ் பண்ணி இருந்திருக்கேன்... சரி தானிக்கு தீனி சரிய போகும்னு ஒரு தடவ ஷேவிங் க்ரீமா அப்பிட்டு முகத்தக் கழுவினேன்...

இதுலேர்ந்து நான் தெரிஞ்சுக்கிட்டது என்னனா

கொஞ்சம் பொறுமையா இருந்தோம்னா after ஷேவ் லோஷ்ன வச்சுக்கூட ஷேவ் பண்ண முடியும்னு தான்!

Labels: ,

"பம்மல்" - திருக்குறள் - அதிகாரம்

Monday, March 19, 2007

"பம்மல்"




பம்மல் என்பது வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. பம்மல் ஊரைக் குறிப்பிடவில்லை. பம்மல் என்ற செயலைக் குறிக்கிறேன்.


வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒருவர் மற்றவரிடம் பம்ம வேண்டியதாயிருக்கிறது. பம்மல் என்பது மாணவர் ஆசிரியிரிடம், குழந்தைகள் பெரியவர்களிடம், பிள்ளைகள் பெற்றோர்களிடம்,இன்டர்வியுவில் கேள்வி கேட்பவரிடம், அலுவலகத்தில் மேனேஜரிடம் என பம்மல் அங்கங்கு தேவைப்படுகிறது. மிக முக்கியமாக தலைவர்களிடம், அடுத்த கட்ட தலைவர்கள்... நமது காலத்திலேயே பம்மலால் முதலமைச்சாராக முன்னேறியவரைக் கூட பார்த்திருக்கிறோம்...
பல சமயம் காரிய சித்திக்காவும், சில சமயம் மரியாதை நிமித்தமாகவும் தேவைப்படுகிறது.

பம்மல், பல நேரங்களில் ஒரு மனிதனின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறதென்றால் அது மிகையல்ல. ஒரு அலுவலகத்தில் இருவர் ஒரே வகையான தகுதியைப் பெற்றிருக்கும் போது பம்மலே அவர்களின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கிறது.
இவ்வாறு வாழ்க்கையில் இன்றியமையாததாகி விட்ட பம்மல் பற்றி வரலாற்றிலும் சரி இலக்கியத்திலும் சரியான இடம் பெற்றிராமலிருப்பது சற்று வருந்ததக்கதே! திருவள்ளுவரின் வழியில் பம்மலுக்கு ஒரு அதிகாரம் படைத்திருக்கிறேன்... இது எதிர் கால சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பது திண்ணம்!

பம்மல் பற்றிய சில வெற்றிக் குறிப்புகள்....
பம்மலின் வெற்றியே அது பம்மப்படுபவர் அதனைப் பற்றி அறியாமல் இருக்கும் போது தான் அமைகிறது.

நான் பம்மும் போது எதிராளியும் பம்மினால், அவரை விட நமது பம்மலே உயர்ந்தாக இருக்குமாறு நாம் பம்ம வேண்டும்.

சில குறள்களை நான் இங்கே தந்துள்ளேன்...

பம்மல் - அதிகாரம்

பம்முக பம்மல் அப்பம்மல் - நற்பம்மல்
பிறிதோர்க்கு தெரியா திருக்க

பம்மலின் பம்மாமை நன்று - அப்பம்மல்
எல்லோர்க்கும் தெற்றென தெரிய
பம்மல் செய்தாரை ஒருத்தல் - அவர்நாண
அவரிடமே பம்மி விடல்
பம்முக பம்மல் அப்பம்மல் - பிறிதோர்பம்மல்
வெல்லும் இன்மை யறிந்து
எண்ணித் துணிக பம்மல் - துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு

திருச்சி - பெங்களூர் - ஒரு ஜன்னலோர பயணம்!

Wednesday, March 14, 2007
வழக்கமாக இரவிலேயே திருச்சியிலிருந்து பெங்களூர் செல்லும் நான் பேருந்திலும் இரயிலிலும் டிக்கெட் கிடைக்காததினால் ஞாயிற்றுக் கிழமைக் காலையில் கிளம்பி சேலம் ஓசூர் என மாறி மாறி போகலாம் என முடிவு செய்து கிளம்பிவிட்டேன்.
நினைக்கும் போதே சற்று பயமாகதானிருந்தது... 350 கிமீ வெயிலில் எப்படி போவது என்று!

எஸ். இராமகிருஷ்ணன் தனது தொடரில் பஸ் பயணத்தைப் பற்றி ஒரு முறை எழுதியிருந்ததை ஞாபகப்படுத்திக்கொண்டேன்.
திருச்சியிலிருந்து கிளம்பும் போதே உயிர்மை மற்றும் தீராந்தி புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். மற்றப் புத்தகங்களை சிறிது நேரத்திலேயே படித்து விடுவேன்... இந்த மாதிரி புத்தகங்கள் என் சிற்றறிவுக்கு எட்ட நேரம் பிடிக்கும் என்பதனால் நெடிய பயணத்திற்க்கு உறுதுணையாக இருக்கும் என்று வாங்கிக்கொண்டேன்.

நத்தை ஓடு போல இரவு உலகை மூடிக்கொள்கிறது... எதுவும் தெரிவதில்லை. பகல் எல்லாவற்றையும் திறந்து விடுகிறது. இரவுப் பயணத்தில் ஜன்னல் என்பது காற்று வருவதற்கும் பல நேரம் அதை பாதி தூக்கத்தில் மூட முயற்சிப்பதிலேயே முடிந்து விடுகிறது! ஆனால் பகல் பொழுதின் ஜன்னல் எல்லையில்லா அனுபவத்தை கொடுக்கிறது.

வயல்வெளிகள், பள்ளிக்கூடங்கள், கிரிக்கெட் விளையாடும் சிறார்கள், மரத்தடி பெட்டிக்கடைகள், காலி மனைகள், வீடாக மாறும் வயல்வெளிகள்... எல்லாம் கடந்துப் போகிறது.
தண்ணீருக்காக அல்லாடும் மக்கள்... காலிக் குடங்கள் எல்லாம் கடந்து போகிறது...

மாமூல் பிரச்சினைகள் பேருந்தில்...சில்லறைத் தட்டுப்பாடு, உள்ளே போ சப்தங்கள்... இத்யாதி... இத்யாதி...
நமக்கு ஒரு நாள் பயணம்... ஓட்டுனர், நடத்துனுருக்கு மற்றுமொரு பயணம்...

என்னைப்போன்ற நீண்டப் பயணத்திற்கு உள்ளாகிறவர்களுக்கு, இது போன்றவைகள் பயணத்தை இலகுவாக்குகிறது. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டு வேடிக்கைப் பார்ப்பதென்பது யானையைப் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்திற்கு சமம்.

Labels:

இணைய வழி முன் பதிவு - KSRTC

Monday, March 12, 2007

கர்நாடக அரசு பேருந்து தனது இணைய வழி முன்பதிவு சேவையைத் துவக்கியுள்ளது. மேலதிக விவரங்களுக்கு...


இன்னும் சில கவிதைகள்!

தோட்டத்து ரோஜா செடியில் முள்ளில்லை...
வியப்பில்லை...
சரி தான், உன் வீட்டுச் செடியல்லவா!

பூச்செடியென்றால் இலை, தண்டு எல்லாமுண்டு தானே
நீ என்ன செய்கிறாய்...?
உன் வீட்டுச் செடியில் மட்டும் பூக்களாகவே உள்ளனவே!

செய்கை மொழியால் கவிதை சொல்ல முடியுமென்றால்
அதுவே சிறந்ததென்பேன்...
மொழித் தேவையில்லையல்லவா!

Labels: